
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி காவல் சரகத்திற்கு உட்பட்ட குப்பக்குடி கிராமத்திற்குள் இன்று (30-04-25) காலை ஒரு மோட்டார் சைக்கிளில் நுழைந்த ஒரு இளைஞர் ஒரு தெருவிற்குள் சென்று ஆதரவற்றோர் இல்லத்தில் சாப்பாட்டிற்கு நிதி வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது, அந்த நபர் அதே தெருவில் ஆள் இல்லாத வீடுகளில் திருட முயன்ற போது அப்பகுதி இளைஞர்கள் பொதுமக்கள் பிடித்து ஆலங்குடி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
ஆலங்குடி போலீசார் அந்த இளைஞரிடம் நடத்திய விசாரனையில், திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியைச் சேர்ந்த லோகிதாஸ் மகன் நந்தா (22) என்பது தெரியவந்தது. அந்த இளைஞர், இப்படி ஊர் ஊராகச் சென்று வீடுகளை நோட்டம் விட்டு, யாராவது ஆள் இருந்தால் ஆதரவற்றோர் இல்லம் நடத்துவதாகக் கூறி நிதி கொடுங்கள் என்று சொல்லி அவர்கள் கொடுப்பதை வாங்கிக் கொண்டு அங்கிருந்து சென்றுவிடுவார். ஆள் இல்லாத வீடுகளில் செல்போன், கைக்கு அடக்கமான பொருட்கள் இருந்தால் அதனை திருடிச் சென்றுவிடுவார். அதன்படி, இன்று காலை புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி வரும் வழியில் கைக்குறிச்சியில் ஆள் இல்லாத வீட்டில் 2 செல்போன்களை திருடியுள்ளார்.
மேலும், குப்பக்குடியில் திருடுவதற்கு ஆள் இல்லாத வீடுகளை நோட்டம் விட்டபோது அப்பகுதி மக்கள் அவரை மடக்கி பிடித்தார்கள் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து கைக்குறிச்சியில் செல்போன்கள் திருடியதால், ஆலங்குடி போலீசார் விசாரனையை தொடர்ந்து நந்தாவை வல்லத்திராகோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். வல்லத்திராகோட்டை போலீசார், நந்தாவிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகமான திருட்டுகள் நடக்கும் நிலையில், குப்பக்குடி கிராம மக்களே திருடனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பாக உள்ளது.