
புதுக்கோட்டை பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி சிவகாமி. இவர்களது மகள் லோகப்பிரியா (20). பழனியப்பன் பல வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் திருமயம் பூசத்துறையைச் சேர்ந்த பெரியம்மா மகன் சுப்பிரமணியன் மகன் லட்சுமணன் (எ) சுரேஷ் அடிக்கடி லோகப்பிரியா வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில், தாய் சிவகாமியுடன் வசித்து வந்த லோகப்பரியாவிற்கு கடந்த 2019 ம் ஆண்டு திருமணமானது. திருமணமானப் பிறகு தனது கணவரின் அனுமதியுடன் தாயையும் லோகப்பிரியா உடன் அழைத்து வந்து வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2021 ஏப்ரல் 27 ந் தேதி லோகப்பிரியா வீட்டிற்கு வந்த சுரேஷ், செலவுக்கு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் இல்லை என்றதும் தங்க நகைகளை கேட்டும் கொடுக்காததால் தனது தங்கை என்பதையும் மறந்து லோகப்பிரியாவை கத்தியால் குத்திக் கொன்ற சுரேஷ், லோகப்பிரியா அணிந்திருந்த ஒன்னேகால் பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து லோகப்பிரியாவின் தாய் சிவகாமி கொடுத்த புகாரின் பேரில், கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தடயங்கள் சேகரித்து சுரேஷையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரனை முடிவுற்ற நிலையில் இன்று (30-04-25) நீதிபதி சந்திரன் தீர்ப்பு வழங்கினார்.
அந்த தீர்ப்பில் ஒன்னேகால் பவுன் நகைக்காக தனது தங்கை சித்திமகளைக் கத்தியால் குத்திக் கொன்ற சுரேஷுக்கு சாகும் வரை தூக்குத் தண்டனையும், அடைத்து வைத்து மிரட்டிய குற்றத்திற்காக ஒரு வருட சிறை தண்டனை, மேலும் நகைகளை பறித்துச் சென்றதற்காக 10 சிறை தண்டனையும் அபராதமும் விதித்துள்ளார். அபராதத் தொகை கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு கூறியுள்ளார். இதற்கிடையில், தங்கையை கொன்ற அண்ணனுக்கு தண்டனை பெற்றுத்தர தேவையான ஆதாரங்கள், சாட்சியங்களை சரியாக சேகரித்த போலீசாருக்கு, மாவட்ட போலீசார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.