Skip to main content

முதல்வர் நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்க மாணவர்களை சிறை பிடித்து வைப்பதா? பாமக கண்டனம்!

Published on 30/08/2017 | Edited on 30/08/2017
முதல்வர் நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்க மாணவர்களை சிறை பிடித்து வைப்பதா? பாமக கண்டனம்!

சென்னையை அடுத்த வண்டலூரில் இன்று மாலை நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் 10,11 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் அனைவரும் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். இன்றிரவு  பொதுக்கூட்டம் முடிவடையும் வரை அனைத்து மாணவர்களும் விழா அரங்கை விட்டு வெளியேறக் கூடாது என ஆணையிடப்பட்டிருக்கிறது. மாணவர்கள் நலனுக்கு எதிரான இச்செயல் கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியதாவது, 

 எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்பது அரசு விழாவாக நடத்தப்பட்டாலும், அது முழுக்க முழுக்க அரசியல் விழாவாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆளும்கட்சியில் இப்போது நடைபெற்று வரும் அதிகாரப்போட்டிக்கு பதிலளிக்கவும், அநாகரிக மொழிகளில் அறைகூவல்களை விடுவதற்கும் மட்டுமே இத்தகைய மேடைகள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய நிகழ்ச்சிகளில் இருந்து மாணவர்கள் கற்றுக் கொள்வதற்கு ஒற்றை நல்ல விஷயம் கூட கிடையாது. மாறாக, அநாகரிக அரசியல்வாதிகளால் நடத்தப்படும் இத்தகைய விழாக்களில் கட்டாயப்படுத்தி பங்கேற்க வைப்பதன் மூலம் மாணவர்களின் கள்ளங்கபடமற்ற உள்ளங்கள் அழுக்கடைந்து தவறான பாதையில் செல்வதற்கான வாய்ப்புகளே அதிகம்.

மாணவர்களைக் கட்டாயப்படுத்தி விழாவுக்கு அழைத்து வருவது சர்ச்சையாகக்கூடாது என்பதற்காக விழாத் திடலில் காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. இது மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்து வருவதை நியாயப்படுத்துவதற்கான ஏமாற்று வேலையே தவிர இதனால் எந்தவிதப் பயனும் ஏற்படப்போவதில்லை. ஒருவேளை உண்மையாகவே மாணவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்க வேண்டும் என்று நினைத்தால் அதை அந்தந்த பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்திருக்கலாம். அதை விடுத்து  எந்த வசதியும் இல்லாத,  ஒரு தரப்பினர் மது போதையில் கூடியிருக்கும் இடத்தில் புத்தாக்கப் பயிற்சி அளிப்பதாகக் கூறுவது அத்தகைய பயிற்சியையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.

மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வது சட்டவிரோத செயல் என்பதால் தான் அது பற்றிய விவரங்கள் வெளியாகிவிடக்கூடாது என்பதில் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் உறுதியாக உள்ளனர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுவது தொடர்பான தகவல்கள் வெளியில் கசியக்கூடாது என்றும், அவ்வாறு கசிந்தால் அதற்கு காரணமான பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மிரட்டல் விடுத்திருப்பதாக ஒரு பள்ளியின் முதல்வர் கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர் விழாவில் பங்கேற்பதற்காக காலை 7.30 மணிக்கே  மாணவர்கள் வந்து விட வேண்டும் என்றும், விழா முடியும் வரை அவர்கள் திடலிலேயே இருக்க வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது. இது மனித விழாத் திடலில் பல தரப்பினரும் கூடியுள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்புக்கு, குறிப்பான மாணவிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் அவர்கள் பல்வேறு இன்னல்களையும், சீண்டல்களையும் சந்திக்க நேரிடும். இரவில் வீடு திரும்ப நள்ளிரவு ஆகும் என்பதும் இன்னொரு வகையான அச்சுறுத்தல் ஆகும். இவ்வளவு ஆபத்துகளுக்கு இடையில் மாணவர்களை கட்டாயப்படுத்தி  விழாவுக்கு அழைத்து வர வேண்டிய தேவை என்ன? அதுமட்டுமின்றி, இந்த விழாவுக்கு அ.தி.மு.க.வினரையும், பொதுமக்களையும் அழைத்து வர தனியார் பள்ளிகள் அவற்றின் வாகனங்களை அனுப்ப வேண்டும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரது சுயநலத்திற்காக மாணவர்களை கொடுமைக்கு உள்ளாக்குவதை ஏற்க முடியாது. அமைச்சராக இருக்கும் வரை ஜெயலலிதாவின் அடிமையாக நடித்த அவர், இப்போது தன்னை அரசனாகவும், ஆண் ஜெயலலிதாவாகவும் நினைத்துக் கொண்டு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். சுயநலத்திற்காக மாணவர் சமுதாயத்தை பயன்படுத்திக்கொண்ட எந்த தனி நபரும், இயக்கமும் வெற்றி பெற்றதில்லை. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு மாணவர்களை கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் அழைத்து வரும் பினாமி எடப்பாடி பழனிச்சாமிக்கு மாணவர் சமுதாயம் சரியான பாடம் புகட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை. இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்