Skip to main content

சேலத்தில் திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் திடீர் மாயம்!; மணமகள் பிடிக்கவில்லையா? காதல் விவகாரமா?

Published on 17/08/2018 | Edited on 27/08/2018

சேலத்தில், இன்று காலை திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகன் திடீரென்று மாயமான சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

சேலம் கிச்சிப்பாளையம் ஓந்தாப்பிள்ளை காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருடைய மகன் வினோத் (27). இன்ஜினியரிங் பட்டதாரி. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். வினோத்திற்கும், கரூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அவர்களுக்கு இன்று (ஆகஸ்ட் 17, 2018) காலை உத்தமசோழபுரத்தில் உள்ள கரபுரநாதர் கோயிலில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தன. திருமணம் முடிந்த பிறகு இன்று மாலை கிச்சிப்பாளையத்தில் உள்ள சிவா திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகள் செய்து வந்தனர்.

 

marriage

 

 

 

இந்நிலையில் மணமகன் வினோத் நேற்று மாலை (ஆகஸ்ட் 16, 2018) அவசரமாக வெளியே எங்கேயே கிளம்பிச் சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் வினோத் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, அது 'ஸ்விட்ச் ஆஃப்' செய்யப்பட்டு இருந்தது.

 

இதனால் பதற்றம் அடைந்த வினோத்தின் தந்தை, சேலம் கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் பிடிக்காமல் மணமகன் ஓடிவிட்டாரா? அல்லது வேறு பெண்ணை காதலித்து வந்ததால் ஓடிவிட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இதையடுத்து இன்று மாலை நடக்க இருந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டன. வினோத் மாயமானது குறித்து மணமகளின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். காவல்துறையினர் ஒருபுறமும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மற்றொருபுறமும் வினோத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்