Skip to main content

மனைவி போட்ட ப்ளான்; சத்தமில்லாமல் முடித்த ஆண் நண்பர் - நடுநடுங்க வைக்கும் சம்பவம்!

Published on 08/05/2024 | Edited on 08/05/2024
 Woman incident her husband along with her male friend

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அமைந்துள்ளது கொமாரபாளையம் கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். 46 வயதான இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி. இவருக்கு வயது 36. இந்தத் தம்பதிக்கு 17 வயதில் மகன் உள்ளார். மேலும், பழனிவேல் தனக்கு கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை மேம்படுத்தி வந்தார்.

இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற பழனிவேல், அன்றைய தினம் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர், பழனிவேலை பல்வேறு இடங்களில் தேடிவந்த நிலையில் அவர் ஆயிபாளையம் அருகே உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்தச் சம்பவம் கொமாரபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரம், இந்தத் தகவலை தெரிந்துகொண்ட பழனிவேலின் குடும்பம் அவரது உடலை பிடித்துக்கொண்டு கதறி துடித்தனர்.

இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த வெண்ணந்தூர் போலீசார் உயிரிழந்த பழனிவேலின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பழனிவேல் கொல்லப்பட்ட விவகாரத்தில் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பழனிவேலின் மனைவி செல்விக்கும், ஊராட்சி மன்ற தலைவரான அதிமுகவை சேர்ந்த கந்தசாமி என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்தது தெரியவந்தது. இதனிடையே, போலீசாரின் சந்தேகம் செல்வியின் பக்கம் திருமபியது.

இதையடுத்து, சந்தேக வளையத்தில் சிக்கிய செல்வியைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, போலீசாரின் கிடுக்கிப்பிடி கேள்விகளில் சிக்கிய செல்வி பல்வேறு தகவல்களை கூறியிருக்கிறார். அந்த நேரத்தில், இதைக் கேட்ட போலீசார்.. அதிர்ச்சியில் உறைந்தனர். அதில், கொலை செய்யப்பட்ட பழனிவேலும் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமியும் அவரது நண்பர்களும் அடிக்கடி கந்தசாமி வீட்டுக்கு சென்று வந்தபோது. பழனிவேலின் மனைவி செல்விக்கும் கந்தசாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பழக்கம் ஒருகட்டத்தில் திருமணத்தை மீறிய உறவாக மாறி இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்து வந்தனர். ஒருகட்டத்தில், இந்த விவகாரம் பழனிவேலுக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பழனிவேல் தனது மனைவி செல்வியைக் கண்டித்தது மட்டுமல்லாமல் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நாளடைவில், இது கந்தசாமி - செல்வி இருவருக்கும் எரிச்சலை உண்டாக்கியது. நாளுக்கு நாள் இவர்களுக்குள் ஏற்பட்ட கோபம் ஒருகட்டத்தில் கொலை வெறியாக மாறியுள்ளது. தங்களுடைய உறவுக்கு தடையாக இருக்கும் பழனிவேலை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர்.

அதன்படி, மனைவி செல்வியின் தூண்டுதலின் பேரில் ஆண் நண்பர் கந்தசாமி, சேலத்தைச் சேர்ந்த கூலிப்படை ரவி ஆகிய 3 பேரும் சேர்ந்து பழனிவேலை தனியாக அழைத்து பேசியுள்ளனர். அந்த நேரத்தில், இவர்கள் மூவரும் மது குடிக்கும்போது யாரும் எதிர்பாராத சமயத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் பழனிவேலை சரமாரியாக குத்தி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இந்தக் கொலை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட மனைவி செல்வி, கூலிப்படை ரவி மற்றும் தலைமறைவாக இருந்த ஆண் நண்பர் கந்தசாமி ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைக்கு அவர்கள் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

திமுக கவுன்சிலர் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்; இரவில் நடந்த பயங்கரம்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
 youth who tried to steal from the DMK councilor house was arrested and handed over police

ஈரோடு பெரியசேமூர், ஈ.பி.பி நகர், பி.பி.கார்டனை சேர்ந்தவர் ஜெகதீசன் (50). ஈரோடு மாநகராட்சி 12-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக உள்ளார். நேற்று இரவு ஈரோடு மாணிக்கம் பாளையம் சாலை, பாலாஜி பேக்கரி பின்புறம் வசிக்கும் மூத்த மகள் கனிமொழியை அவரது வீட்டில் பார்த்துவிட்டு மீண்டும் தனது வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முதல் மாடியில் ஆள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தது.

வீட்டில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதை தெரிந்து கொண்ட ஜெகதீசன் இது குறித்து அக்கம் பக்கத்தில் இருப்பவரிடம் தகவல் தெரிவித்தார். அந்தப் பகுதி மக்கள் ஒன்று கூடி அவரது வீட்டுக்கு வந்தனர். அப்போது ஜெகதீசன் வீட்டிலிருந்து ஒரு வாலிபர் தப்பியோட முயன்றார். பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் அந்த நபரை ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் செங்கல்பட்டு மாவட்டம் குன்னவாக்கம், அம்பேத்கர் முதல் தெருவை சேர்ந்த குமார் (33) எனத் தெரிய வந்தது. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

காத்திருந்து கருவறுத்த பகை? மிரளவைக்கும் மலர்கொடியின் பின்னணி - ஆம்ஸ்ட்ராங் வழக்கில் திடீர் திருப்பம்

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
lawyer Malarkodi involved in the Armstrong case

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி இரவு, பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே ரவுடி கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்படார். இது தொடர்பாக எட்டு பேர் அன்றிரவே போலீசாரிடம் சரணடைந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக மூன்று பேரை கூடுதலாக போலீசார் கைது செய்தனர். அதன்படி, ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இத்தகைய சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் 14 ஆம் தேதி அன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேர் 5 நாட்கள் காவல் துறை கஸ்டடியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், என்கவுன்டர் செய்யப்பட்ட திருவேங்கடத்தை தவிர்த்து மற்ற 10 பேரும் 5 நாள் காவல் கஸ்டடி முடிந்து பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளனர்.

இப்படி, ஆம்ஸ்ட்ராங் வழக்கில் நாளுக்கொரு திருப்பம் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் மலர்கொடி, அவரது உதவியாளர் ஹரிஹரன் மற்றும் திமுக நிர்வாகியின் மகன் சதீஷ் என மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அருளுடன் மலர்கொடி தொலைபேசியில் தொடர்பில் இருந்ததாகக் கூறி போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக, இதுவரையில் 14 பேர் கைது செய்யபட்டனர். மலர்கொடி ஜாம்பஜார் பகுதியைச் சேர்ந்த தாதாவான தோட்டம் சேகருடைய மூன்றாவது மனைவி எனத் தெரியவந்துள்ளது. தோட்டம் சேகர் கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு அதிமுக மேடையில் பாடகராக அறியப்பட்டவர். கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன், தோட்டம் சேகரை மயிலாப்பூரைச் சேர்ந்த பிரபல ரவுடி சிவக்குமார் தலைமையிலான டீம், கொலை செய்தது. 

அதற்கு பழிக்குப்பழியாக கடந்த 2021-ஆம் ஆண்டு மயிலாப்பூர் சிவக்குமார், அசோக்நகரில் வைத்து கொலை செய்யப்பட்டார். சட்டப் படிப்பு முடித்த மலர்க்கொடிக்கும் தாதாவான தோட்டம் சேகருக்கும், அழகர் ராஜா மற்றும் பாலாஜி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தோட்டம் சேகர் கொலை செய்யப்பட்டபோது, சிறுவர்களாக இருந்த மகன்களுக்கு தினமும் பழிவாங்கும் சிந்தனையை ஊட்டி, அவர்கள் பெரியவர்கள் ஆனதும் இந்த மயிலை சிவக்குமாரை கொலை செய்துள்ளனர் என்ற தகவலும் உலாவுகிறது. அதாவது கணவர் படுகொலைக்காக 20 ஆண்டுகள் காத்திருந்து மகன்கள் மூலம் பழி தீர்த்தவர்தான் தற்போது சிக்கியிருக்கும் மலர்கொடி எனச் சொல்லப்படுகிறது. இதற்காக மலர்கொடி டீமுக்கு 50 லட்சம் ரூபாய் வரை, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பணம் கொடுக்கப்பட்ட தகவல் கிடைத்துள்ளது. மேலும் அந்தத் தொகை பெண் ஒருவரது வங்கி கணக்கில் இருந்து டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக, போலீஸ் விசாரணையில் தகவல் வெளியானது. இருப்பினும், எதற்காக, யாரால் இந்தக் கொலை செய்யப்பட்டது என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அதேபோல இந்த வழக்கில் ஆற்காடு சுரேசிற்கு மிகவும் வேண்டப்பட்ட வடசென்னை பா.ஜ.க மகளிரணியில் முக்கிய பொறுப்பிலிருக்கும் பெண் தாதா புளியந்தோப்பு அஞ்சலை மீதும் போலீசாரின் சந்தேகப் பார்வை திரும்பியுள்ளதாக சொல்லப்படுகிறது. கொல்லப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் காதலியாக இருந்து பின்னர், அவரை திருமணமும் செய்து கொண்டவர் அஞ்சலை. சென்னையில் 2019-ஆம் ஆண்டு அஞ்சலையை 'ரகசியமாக' சந்திக்க வந்த போதுதான் ஆற்காடு சுரேஷ் போலீசில் சிக்கினார். தமிழ்நாடு பாஜகவின் வடசென்னை மாவட்ட மகளிர் அணி தலைவியானபோது, கடுமையான விமர்சனங்களை தமிழக பாஜக எதிர்கொண்டது. இந்த நிலையில் தற்போது அஞ்சலை தலைமறைவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரைத் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். ஏற்கனவே திருநின்றவூர் பாஜக நிர்வாகி செல்வராஜை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தற்போது அஞ்சலையைக் கைதுசெய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மலர்கொடி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “தென் சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக மேற்கு பகுதிக் கழக இணைச் செயலாளர் மலர்கொடி சேகர் அதிமுகவின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டார். எனவே கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் மலர்கொடி இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட வழக்கறிஞர் மலர்கொடி கடந்த 2001 ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்ட அதிமுக பேச்சாளரான தோட்டம் சேகரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.