இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு மு.க.ஸ்டாலின் பக்ரீத் பெருநாள்’ நல்வாழ்த்து
‘தியாகப் பெருநாள்’ என போற்றப்படும் ‘பக்ரீத்’ பண்டிகை தினம் இஸ்லாமிய சமுதாய மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்தப் பெருநாளில் தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் நலமும் - வளமும் பெருகிட, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், தலைவர் கலைஞர் அவர்களின் சார்பிலும், எனது இதயபூர்வமான ‘பக்ரீத் பெருநாள்’ நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய பெருமக்களின் ஐந்து முக்கிய கடமைகளில், மெக்காவிற்கு புனிதப் பயணம் மேற்கொள்வது ஐந்தாவது கடமை என்பதோடு, அதன் தொடர்ச்சியாக ஏழைகளிடம் இரக்கம் காட்டுவதும், அவர்களுக்குப் பொருளுதவி செய்வதும், தங்களின் வாழ்வில் நிறைவேற்ற வேண்டிய மிக முக்கிய கடமையாக எண்ணுகிறார்கள். அதனால்தான், ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகளுக்கும், நண்பர்களுக்கும் வழங்கி பிறகு தங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு உன்னதமான பண்பை மட்டுமின்றி, மனித நேய குணத்தையும் இஸ்லாமிய பெருமக்கள் இந்த பக்ரீத் பண்டிகை மூலம் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அனைவரும் இன்பமாக வாழ வேண்டும், அறநெறிகள் தவறாது வாழ வேண்டும், என்பதற்கு இலக்கணமாகத் திகழும் இஸ்லாமிய பெருமக்கள் நபிகள் நாயகத்தின் போதனைகளைத் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய குறிக்கோள்களாகவும், வழிகாட்டுதலாகவும் உணர்ந்து, அதன்வழி நின்று, இந்த பக்ரீத் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். சிறப்புத் தொழுகை, ஈகை இந்த இரண்டையும் அன்றைய தினம் மிக்க மகிழ்ச்சியுடன் கடைப்பிடித்து, நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளுக்கு இஸ்லாமிய பெருமக்கள் சிறப்பும், பெருமையும் சேர்க்கிறார்கள்.
நபிகள் நாயகத்தின் போதனைகளை, பொன்னான அறிவுரைகளாக கருதி வாழும் இஸ்லாமிய சமுதாய மக்களின் மனிதநேயமும், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையும் என்றும் தொடருக. இஸ்லாமிய மக்கள் அனைவரும் இந்தத் தியாகப் பெருநாளில் இன்புற்றிருக்க பக்ரீத் பெருநாள் வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.