Skip to main content

வேங்கைவயல், பஞ்சமி நிலம், ஆணவக்கொலை பற்றியெல்லாம் கவலை இல்லையா?'' - வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

Published on 19/04/2023 | Edited on 19/04/2023

 

 "Aren't you worried about the Vengai field, the Panchami land" - Interview by Vanathi Srinivasan

 

இன்று சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ வானதி சீனிவாசன், ''இன்று சட்டப்பேரவையில் அரசினருடைய தனி தீர்மானம் என்ற ஒன்றை முதல்வர் தாக்கல் செய்திருக்கிறார். கிறிஸ்துவத்திற்கும், இஸ்லாத்திற்கும் மதம் மாறிய ஆதிதிராவிட சமுதாய மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்கனவே பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற இட ஒதுக்கீட்டின் பலனைக் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி அந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

 

பாஜகவின் சார்பில் நாங்கள் சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறோம். இம்மாதிரி மதம் மாறிய பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள் அரசாங்கத்தினுடைய இட ஒதுக்கீட்டு சலுகையை பெறுவது குறித்து ஆராய்வதற்காக மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 2022 ஆம் வருடம் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து அந்த குழு இது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது.

 

இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. அவர்களுக்கு அந்த உரிமை கிடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அதனுடைய விசாரணை கடந்த வாரம் கூட நீதிமன்றத்தில் வந்தது. அது ஜூலை மாதம் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இது தொடர்பான விஷயங்களை எல்லாம் மத்திய அரசு செய்து கொண்டிருக்கின்ற பொழுது நீதிமன்ற வரம்புக்கு உள்ளாக இருக்கக்கூடிய ஒரு விஷயத்தைப் பற்றி இப்பொழுது எதற்காக இந்த தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்கின்ற கேள்வியை பாஜக முன்வைக்கிறது.

 

அது மட்டுமல்ல, கிறிஸ்துவத்திற்கும் இஸ்லாத்திற்கும் மதம் மாறினாலும் கூட தொடர்ச்சியாக தீண்டாமை கொடுமை பட்டியலின மக்களுக்கு நடைபெற்றுக் கொண்டு வருகிறது என்பதை இந்த தீர்மானம் மறைமுகமாக சொல்ல வருகிறதா என்று முதல்வரை நோக்கி கேள்வி எழுப்பினோம். பட்டியலின மக்களுடைய மேம்பாட்டிற்காக சமூக நீதி அரசு, திராவிட மாடல் அரசு நாங்கள் நடத்துகிறோம் என்று சொல்கின்ற திமுக அரசுக்கு வேங்கைவயல் பிரச்சனை, பட்டியலின மக்களுடைய பஞ்சமி நிலத்தை மீட்பதற்கான சிறப்பு சட்டம், ஒவ்வொரு வாரமும் கௌரவ கொலைகள் தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது; அதனை தடுப்பதற்கான சட்டம் இதைப் பற்றி எல்லாம் கவலை இல்லையா. முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காக இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருப்பதாக பாஜக கருதுகிறது. ஆகவே இந்த தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்