Skip to main content

குழந்தைகளை போற்றுங்கள்: செல்பேசி சீரழிவுக்கு பலி கொடுத்து விடாதீர்கள்! அன்புமணி வேண்டுகோள்

Published on 02/09/2017 | Edited on 02/09/2017
குழந்தைகளை போற்றுங்கள்: செல்பேசி சீரழிவுக்கு பலி கொடுத்து விடாதீர்கள்! அன்புமணி வேண்டுகோள்

பிள்ளைகளிடத்தில் ஏற்படும் வெறுமையையும், பாசத்திற்கான வெற்றிடத்தையும் தான் செல்பேசி வழி வரும் சாத்தான்கள் கைப்பற்றிக் கொண்டு சீரழிக்கின்றன. எனவே, பெற்றோர்கள் தங்களது நாளின் குறிப்பிட்ட பகுதியை குழந்தைகளுக்காக ஒதுக்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

விளையாட்டு வினையாகியிருக்கிறது. மனதை மயக்கி அடையாளம் தெரியாத மனிதர்களுக்கு நம்மை அடிமையாக்கும் நீலத் திமிங்கலம் (BLUE WHALE) எனப்படும் சவால் விளையாட்டுக்கு மதுரையை அடுத்த மொட்டமலையைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் இறந்த சோகம் மறைவதற்கு முன்பாகவே புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்து வந்த சசிகாந்த் போரா என்ற இன்னொரு மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வுகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.

நீலத் திமிங்கிலம் விளையாட்டு குறித்து அறிந்தபோது உலகில் இப்படியெல்லாம் கூடவா நடக்கும்? என்ற ஐயம் ஏற்பட்டது. ஆனால், நீலத் திமிங்கில விளையாட்டு உலகின் பல நாடுகளில் ஏராளமானோரை பலி வாங்கியிருப்பதை அறிந்த பிறகு தான் அது குறித்த அச்சமும், கவலையும் அதிகரிக்கிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நன்மைகளை செய்வதைப் போலவே தீமைகளையும் ஏற்படுத்தும் என்பதற்கான உதாரணம் தான் நீலத் திமிங்கில விளையாட்டு ஆகும். உலகின் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு உலகம் முழுவதும் உள்ளவர்களை தற்கொலைக்குத் தூண்டும் சாத்தியங்களை தொழில்நுட்பம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதை அறியும் போது, அதன் மீது கோபமும், வெறுப்பும் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. ஆனாலும், இது தான் எதார்த்தம்... அதை அன்பாலும், அறிவாலும், அரவணைப்பாலும் முறியடிப்பதில் தான் மனித உறவுகளின் வெற்றி மறைந்திருக்கிறது.

நீலத் திமிங்கிலம் விளையாட்டின் ஆபத்து குறித்து தெரியவந்தவுடன் அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த காவல்துறையினர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மேற்கொண்டுள்ள முயற்சிகள் போற்றத்தக்கவை. இந்த விளையாட்டின் ஆபத்தை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதை தடை செய்ய கோரிக்கை வைத்த கேரள முதலமைச்சரும், அதையேற்று இந்த விளையாட்டுக்கு தடை விதித்த பிரதமரும் பாராட்டுக்குரியவர்கள். நீலத் திமிங்கிலம் விளையாட்டின் விளைவுகள் குறித்து மதுரை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கில் நீதிமன்றம் வழங்கும் வழிகாட்டுதல்கள் ஆபத்தான விளையாட்டுகளில் இருந்து வளரும் தலைமுறையை பாதுகாக்க சிறிதளவு உதவினாலும் அது சமுதாயத்திற்கு செய்யப்படும் பெருஞ்சேவையாகவே அமையும்.

நீலத் திமிங்கில விளையாட்டு மட்டும் தான் குழந்தைகளின் உயிரைக் குடிப்பதாகக் கருத முடியாது.  குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் கைகளில் தாராளமாக புழங்கத் தொடங்கியுள்ள செல்பேசிகள், ஆக்கப்பூர்வமாக பயன்படுவதை விட, அழிவுக்கான ஆயுதமாகவே பயன்படுகின்றன. செல்பேசிகள் மூலம் சுயபடம் (செல்பி) எடுத்துக் கொள்வது அனைவராலும் விரும்பப்படும் ஒன்று என்றாலும், அது இந்தியாவில் மிகவும் ஆபத்தான விளையாட்டாக மாறி வருகிறது. 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் வரையிலான 18 மாதங்களில் சுயபடம் எடுத்துக் கொள்ளும்போது விபத்து ஏற்பட்டு  இறந்த 127 பேரில் 76 பேரின் உயிரிழப்புகள் அதாவது 60% இந்தியாவில் நிகழ்ந்தவை என்று அமெரிக்காவில் உள்ள கார்னிகி மெல்லான் பல்கலைக்கழகமும், தில்லியில் உள்ள இந்திரப்பிரஸ்தா தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. சுயபடம் அழகு தான்... அளவுக்கு மிஞ்சினால் அதுவே ஆபத்தாகிவிடும் என்ற விழிப்புணர்வு இளைஞர்களிடம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இளைய தலைமுறையினரின் மனதைக் கெடுக்கும் பல சாத்தான்கள் ஸ்மார்ட் செல்பேசி மூலமாகவே ஊடுருவுகின்றன. மனதைக் கெடுக்கும் செல்பேசிகள் உடல்நலத்தையும் கெடுக்கின்றன. இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் விளையாட்டு உலகம் என்பது திறந்தவெளி விளையாட்டுத் திடலில் இருந்து  செல்பேசிக்கு மாறி விட்டது. இதற்கெல்லாம் செல்பேசிகளில் உள்ள அம்சங்களையும், குழந்தைகளையும் மட்டும் குறைகூறுவதில் பயனில்லை. இந்த விஷயத்தில் பெற்றோர்களிடத்தில் தான் தவறு இருக்கிறது.

குடும்பம் என்றால் ஒன்றாக அமர்ந்து உணவருந்த வேண்டும், உரையாட வேண்டும் என்ற கலாச்சாரம் பழைமையாக கருதி பாழடிக்கப்பட்டு விட்டது தான் இதற்கு காரணமாகும். தாராளமயமாக்கப்பட்ட உலகில் மனிதத் தேவைகள் அதிகரித்து விட்ட நிலையில், அதை சமாளிப்பதற்காக பெற்றோர் அளவுக்கு அதிகமாக  உழைக்க வேண்டியிருக்கிறது. இதனால் அவர்களுக்கு குழந்தைகளுடன் செலவிட நேரம் இருப்பதில்லை.  இருக்கும் நேரத்திலும் மன அழுத்தத்தைக் காரணம் காட்டி மனதை வேறு விஷயங்களில் திருப்பும் பெற்றோர் பிள்ளைகளிடம் விளையாடுவதோ உரையாடுவதோ இல்லை. தங்களைப் போலவே பள்ளிகள்- கல்லூரிகளுக்குச் சென்று வரும் பிள்ளைகளுக்கும் மனஅழுத்தம் உண்டு என்பதை அவர்கள் உணர்வதில்லை.

இதனால் பிள்ளைகளிடத்தில் ஏற்படும் வெறுமையையும், பாசத்திற்கான வெற்றிடத்தையும் தான் செல்பேசி வழி வரும் சாத்தான்கள் கைப்பற்றிக் கொண்டு சீரழிக்கின்றன. எனவே, பெற்றோர்கள் தங்களது நாளின் குறிப்பிட்ட பகுதியை குழந்தைகளுக்காக ஒதுக்க வேண்டும். குழந்தைகளுக்கான நாளில் பள்ளியிலும், பிற இடங்களிலும் அவர்களின் அனுபவத்தை கேட்டு, அதற்கு பதிலளித்தால் குழந்தைகள் மனதில் வெறுமை நீங்கி மகிழ்ச்சி நிறையும். உண்மையான மகிழ்ச்சி நிறைந்த குழந்தைகளின் மனதில் நீலத் திமிங்கிலம் உள்ளிட்ட எந்த சாத்தானும் நுழைய முடியாது. ஆகவே பெற்றோரே... குழந்தைகளை போற்றுங்கள்! இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்