Skip to main content

’நொய்யல் ஆற்றில் ஏன் நுரை வருகிறது என்று கேட்டால் சோப்பு போட்டு குளிப்பதால் நுரை வருகிறது என்கிறார்’-அமைச்சர்களின் செயல்பாடுகள் கேலிக்கூத்து

Published on 20/10/2018 | Edited on 20/10/2018

 

bai


இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட 17 ஆவது மாவட்ட மாநாடு பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் ரோடு எம்.என்.வி மஹாலில் நடைபெற்றது.  கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மாநிலச் செயலாளர் எஸ்.பாலா பேசுகையில், " வருடத்திற்கு 25 ஆயிரம் யூனிட் ரத்த தானம் செய்தது வாலிபர் சங்கம்.  ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி பேருந்து கட்டண உயர்வு, பணமதிப்பிழப்பு, மாணவர் போராட்டங்களை, பொதுமக்கள், இளைஞர்கள் வேலைவாய்ப்பு, நீட் தேர்வு இப்படி பல்வேறு  மக்கள் நலப் போராட்டங்களை நடத்தி சிறை சென்றது வாலிபர் சங்கம்.

 

மத்தியிலே சர்வாதிகாரி மோடியும், மாநிலத்திலே கோமாளி எடப்பாடியும் கரம் கோர்த்து ஆட்சி செய்யும் சூழல்.... தேசம் ஒவ்வொரு நிமிடமும் திருடு போய் கொண்டிருக்கிறது. அதனை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் இயக்கமாக வாலிபர் சங்கம் உள்ளது. ஜனநாயக முறைப்படி எட்டு வழி சாலைக்கு எதிராக போராட அனுமதி இல்லை. அப்படி போராடுபவர்களை விரட்டி, விரட்டி கைது செய்து சிறையில் அடைக்கிறது மத்திய, மாநில அரசுகள். ஆனால் நீதிமன்றத்தை "மயிறு" என்றும், காவல்துறையை "ஊழல்வாதி" என்றும் சொன்ன எச்.ராஜாவுக்கு பாதுகாப்பு தருகிறது. இதுதான் ஆட்சியாளர்களின் லட்சணம்.

 

அண்மையில் ஒரு விழாவில் இபிஎஸ்ஸை சேகுவேரா என்றும், ஓபிஎஸ்ஸை பிடல் காஸ்ட்ரோ என்றும் ஒரு அமைச்சர் வர்ணிக்கிறார். அமைச்சர்கள் எல்லாம் எதைப் பேசுகிறோம் என அறியாதவர்களாக உள்ளனர். புரட்சியாளர்களை பற்றி இவர்களுக்கு என்ன தெரியும் ? புரட்சியாளர்களின் வரலாற்றோடு ஒப்பிட்டு பேச எடப்பாடிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் அப்படி என்ன தகுதி உள்ளது? ஒரு அமைச்சர் தன்னை மைக்டைசன் என்று கூறிக்கொள்கிறார். கேலிக்கூத்தாக உள்ளது. 

 

bala

 

இன்னொரு அமைச்சர் நொய்யல் ஆற்றில் ஏன் நுரை வருகிறது என்று கேட்டால்... பொதுமக்கள் சோப்பு போட்டு குளிப்பதால் நுரை வருகிறது என்கிறார். அமைச்சர்களின் செயல்பாடுகள் எல்லாம் கேலிக்கூத்தாக உள்ளது. 

 

அங்காடிகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை. அதனை மூடும் முயற்சி நடக்கிறது 3500 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இப்படித்தான் உள்ளது அரசின் நிலைப்பாடு. இதில் வேறு விளையாட்டு வீரர்களுக்கு இரண்டு சதம் கூடுதலாக வேலை வாய்ப்பு தருவதாக அரசு சொல்கிறது. ஓராண்டில் 5 ஆயிரத்து 802 பேருக்கு மட்டுமே வேலை வழங்கியதாக அரசின் சாதனை விளக்க குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்துள்ளனர். புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. இப்போது உள்ள சூழ்நிலையில் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்தவர்களுக்கு இன்னும் 1,800 வருடங்கள் கழித்து தான் வேலை கிடைக்கும் என்ற நிலை உள்ளது. துரதிஷ்டவசமாக மனிதன் அதிகபட்சமாக 100 வருடம் மட்டுமே வாழ முடியும். மத்திய அரசு வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றனர் எத்தனை பேருக்கு வேலை தந்தார்கள். புள்ளிவிவரத்தை தர முடியுமா...? ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் கேஸ் எடுக்க தமிழகத்தை பட்டா போட்டு கொடுக்க மத்திய மாநில அரசுகள் முடிவு செய்துவிட்டன. 

 

தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் காக்க போராடிய மக்களை சுட்டுக் கொன்றது போல, வளம் கொழிக்கும் தஞ்சை, திருவாரூர், நாகை கடலூர் மாவட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் சூழல் வராதா...? எனவே பொதுமக்கள் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும். தமிழகத்தில் அறிவுள்ள மக்கள் அனைவரும் பாசிச பாஜக ஒழிக என்று சொல்லவேண்டும். காபிபோசா தினகரனுக்கு இதுபோல் சொல்ல தைரியம் உண்டா? 

 

கோவையில் அரசால் தண்ணீர் வினியோகம்  முறையாக செய்ய முடியாமல், தனியார்மயமாக்கி உள்ளனர். தண்ணீர் ஏடிஎம் வந்து விட்டது. தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நிலை. பிறகு எதற்கு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு என ஒரு அமைச்சர் ராஜினாமா செய்து விட்டு போக வேண்டியது தானே?  

 

தமிழகத்தில் மக்கள் நலனுக்காக, தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அடக்குமுறையை, ஒடுக்குமுறையை எதிர்க்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தீரமிக்க இளைஞர்களை இணைத்து  போராடும்.  சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் எங்களோடு கரம் கோர்ப்பீர்"
இவ்வாறு கூறினார். 


  


 

சார்ந்த செய்திகள்