/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tnpsc-art-file_6.jpg)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இத்தகைய சூழலில் சென்னையச் சேர்ந்த நிர்மல் குமார் உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், “கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றது.
இதில் 4 பணியிடங்கள் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டன. மற்ற காலிப்பணியிடங்கள் பொதுப் பிரிவினருக்கான பணியிடங்கள் எனவும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு முறை என்பது எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு கொண்டது ஆகும். அதன்படி தேர்வு நடைபெற்று இறுதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் முறையான இடஒதுக்கீட்டு சுழற்சி முறை பின்பற்றப்படவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hc-art-1_4.jpg)
இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி மஞ்சுளா அமர்வு முன்பு இன்று (29.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சிவ் சங்கரன், “மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தில் முறையான இடஒதுக்கீட்டு சுழற்சி முறை பின்பற்றப்படவில்லை. அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பொதுப் பிரிபில் இடம் வழங்கப்படவில்லை. மாறாக இந்த மாணவர்களை ஆசிரியர்களுக்கு உரிய இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே இதில் நிறைய குளறுபடிகள் உள்ளன. அதனால் முறையான இடஒதுக்கீட்டு பட்டியலை வெளியிட வேண்டும் ” என வாதிட்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/judgement--art-file_31.jpg)
இதனைப் பதிவு செய்துக் கொண்ட நீதிபதி, “தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் செல்லாது. உரிய இடஒதுக்கீடு முறையை பின்பற்றி மாற்றியமைப்பட்ட புதிய பட்டியலை 4 வாரத்திற்குள் வெளியிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.முன்னதாக தமிழகத்தில் உள்ள கீழமை உரிமையியல் நீதிமன்றங்களில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களுக்கு தேர்வானவர்கள் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டிருந்தது. அப்போது இந்த பட்டியலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் தமிழ்நாடு சிவில் நீதிபதிகள் பணிக்கு தேர்வானவர்களின் தற்காலிகத் தேர்வுப் பட்டியலை ரத்து செய்தது. மேலும் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிடுட தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)