Skip to main content

ஐயா நல்லக்கண்ணுவுக்கே இந்த நிலையா? தமிமுன் அன்சாரி கண்டனம்!

Published on 12/05/2019 | Edited on 12/05/2019

 

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான மு.தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

 

முதுபெரும் தேசிய தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான ஐயா நல்லக்கண்ணு அவர்களை, அவர் வசித்து வந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பிலிருந்து வெளியேற்றியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

 

Communist Party of India (CPI) leader R. Nallakannu


நமது காலத்தில் வாழும் காமராஜராகவும், கக்கனாகவும், காயிதே மில்லத்தாகவும் பார்க்கப்படும் ஒரே தலைவர் அவர் மட்டுமே. பொது மக்களின் தனிப்பட்ட அன்புக்குரிய, அப்பழுக்கற்ற  மாபெரும் தலைவராக அவர் வாழ்ந்து வருகிறார்.

 

அவரை போன்ற தியாகிகளுக்குத்தான் வீட்டு வசதி வாரியத்தில் முன்னுரிமை தர வேண்டும். இவர்களை போன்றவர்களுக்கு அங்கு வாய்ப்பு இல்லையென்றால், பலம் பொருந்திய அரசியல் தலைவர்களுக்கும், செல்வாக்கு மிக்கவர்களுக்கும் தான்  அங்கு வாய்ப்பா? என கேள்வி எழுகிறது.

 

 இந்த செயல் மூலம் தமிழக அரசு ஒரு பெரும் வரலாற்று தவறை செய்திருக்கிறது. உடனடியாக தமிழக முதல்வர் இதில் தலையிட்டு, ஐயா நல்லக்கண்ணு அவர்களுக்கு தமிழக வீட்டு வசதி வாரியத்தில் மாற்று இடம் வழங்கிட முன் வரவேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.



 

 அது போல் தூய பொது வாழ்வுக்கு சொந்தக்காரரான மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களின் குடும்பத்தையும், தமிழக வீட்டு வசதி வாரியத்திலிருந்து  வெளியேற வலியுறுத்துவதாக தகவல் வருகிறது. இந்த முயற்சியையும் தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“மோடியின் நாய்க்குட்டிபோல் அமலாக்கத்துறை செயல்படுகிறது” - முத்தரசன்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Mutharasan criticism of BJP

புவனகிரி பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன் சிதம்பரம் நாடளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டி பானைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 

அப்போது பேசிய அவர், “அமலாக்கத்துறை மோடியின் நாய்க்குட்டி போல செயல்படுகிறது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அபராதம் விதித்துள்ளனர். சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை மோடி, அமித்ஷா ஆட்டி படைக்கிறார்கள். மோடி, தேர்தலுக்குப் பிறகு திராவிட முன்னேற்ற கழகம் இருக்காது என கூறுகிறார். உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை அழித்து விடுங்கள் என கூறுகிறார். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வந்து பாரதிய ஜனதா கட்சியை மட்டும் வைத்துக்கொண்டு சர்வாதிகாரி போல் செயல்படுவதற்காக அனைத்து கட்சிகளையும் ஒழிக்க திட்டமிட்டுள்ளார்.

மோடியின் தேர்தல் அறிக்கையில் சொன்னதை எதையுமே செய்யவில்லை. விவசாயிகளுக்கு ஆதார விலை, சாமிநாதன் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தற்போது கச்சத்தீவைப் பற்றி பேசுகிறார். கச்சத்தீவை கடந்த 10 ஆண்டுகளில் மீட்பதற்கான மோடி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை அவர் யாருக்கு பேன் பார்த்துக் கொண்டு இருந்தார்.

மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார். இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதனை திமுக, கம்யூனிஸ்ட் பிரச்சினையாக பார்க்காமல் பொது பிரச்சினையாக பார்க்க வேண்டும்.  மோடியிடம் சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது. அப்படி சமூக நீதி அவர்களுக்கு இருந்தால், இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறேன் என கூறியதால் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்திருக்கமாட்டார்கள்.

பாஜக பத்தாண்டுகளில் செய்த தவறு கொஞ்ச நஞ்சமல்ல. சிறுபான்மை மக்களுக்கு எதிராக, சிறு குறு தொழில் நடத்துபவர்களுக்கு எதிராக, விவசாயிகளுக்கு எதிராக 3 சட்டங்கள் நிறைவேற்றினார்கள். தொழிலாளர்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வந்தார்கள்.

இதற்கு அதிமுக ஆதரவளித்தது. தற்போது ஜனநாயகத்தை காப்போம் என  ஏமாற்று வேலை செய்கிறது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு பானைச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். இவருடன் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவாசகம்,  மாவட்டச் செயலாளர் துரை, மாவட்ட துணைச் செயலாளர் சேகர், வட்டச் செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.