Skip to main content

நாட்டின் 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று கொடியேற்றுகிறார்

Published on 15/08/2017 | Edited on 15/08/2017
நாட்டின் 70-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று கொடியேற்றுகிறார்

நாட்டின் 70-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். சுதந்திர தின விழாவையொட்டி, நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாட்டின் 70-வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய வழக்கப்படி, பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையிலும், மாநில முதல்வர்கள் தலைமைச் செயலகங்களிலும் இன்று தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துகின்றனர்.

டெல்லி செங்கோட்டையில் நடக்கும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள், சிறப்பு விருந்தினர்கள், எம்பிக்கள் உட்பட பல்வேறு விஐபிக்கள் பங்கேற்கின்றனர். தீவிரவாத அச்சுறுத்தல்கள் காரணமாக, டெல்லியில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் செங்கோட்டையில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் துணை ராணுவம், டெல்லி போலீசாருடன் சிறப்பு பாதுகாப்பு குழுவினரும் இடம் பெற்றுள்ளனர். செங்கோட்டையை சுற்றி சாலைகளில் 150க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

செங்கோட்டையை சுற்றி சுமார் 10,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளும் பிரதமர் மோடி, 21 குண்டுகள் முழங்க, தேசியக் கொடியை ஏற்றி வைப்பார். விழாவில், ராணுவத்தில் அமைதிக்காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 112 வீரர்களுக்கு வீர, தீர விருதுகள் வழங்கப்பட உள்ளன.

செங்கோட்டையில் கொடியேற்றிய பின், பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றுவார். இது அவரது 4வது சுதந்திர தின உரையாகும். அதைத்தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, 8,500 பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. விழா நடைபெறும் பகுதியில் வான் வழி போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் மக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், ரயில், பஸ், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்