Skip to main content

'கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும்'-ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 02/05/2024 | Edited on 02/05/2024
 'Water tanks should be set up for cattle' - Ramadas insists

கோடைகால வெயில் தமிழகத்தில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இன்னும் சில நாட்களுக்கு தமிழகத்தில் வெப்ப அலை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல சில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலை கருத்தில் கொண்டு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் நற்பணி மன்றங்கள் சார்பாக பொது இடங்களில் நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் எனப் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நீலகிரி மாவட்டம்  கூடலூர், மசினக்குடி உள்ளிட்ட  பகுதிகளில்  தண்ணீர், உணவு  இல்லாததால் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளும், மாடுகளும் உயிரிழந்திருப்பது தெரியவந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களில் இல்லாத வகையில் கோடை வெப்பம் அதிகரித்திருப்பதால் ஏற்பட்டுள்ள  குடிநீர், உணவு பற்றாக்குறை தான் இதற்கு காரணம். கோடை வெப்பத்தின் விளைவுகளால் கால்நடைகள்  உயிரிழந்திருப்பது  அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ்நாட்டின்  பல பகுதிகளில் கோடை வெப்பத்தால் கால்நடைகள் உயிரிழக்கும் நிகழ்வுகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நிகழ்ந்து வருகின்றன. இத்தகைய நிகழ்வுகள் அதிகரிக்காமலும்,  தொடராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும்  தமிழ்நாடு அரசுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உண்டு.

தமிழ்நாட்டில் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு இணையாக  கவனிக்க ஆள் இல்லாத சூழலில் வளரும் கால்நடைகளும், லட்சக்கணக்கான தெரு நாய்களும் உள்ளன. கோடை வெப்பம் காரணமாக அவற்றுக்கு உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதில்  பெருஞ்சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அதைப் போக்கும் வகையில் தெருக்களில் நடமாடும் கால்நடைகள், தெரு நாய்கள் போன்றவை குடித்து இளைப்பாறுவதற்காக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகளைத் திறக்க தமிழக அரசு ஆணையிட வேண்டும்; அதற்காக உள்ளாட்சி அமைப்புகளுக்குச்  சிறப்பு நிதியையும்  ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்