Skip to main content

ராஜேஷ்தாஸைக் கைது செய்ய இடைக்காலத் தடை!

Published on 17/05/2024 | Edited on 17/05/2024
Interim ban to arrest Rajeshthas

தமிழக சிறப்பு டி.ஜி.பி. பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் போது பெண் எஸ்.பி.யை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி. அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. அதன் பின்னர் ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த ஆண்டு (16.06.2023) தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

Interim ban to arrest Rajeshthas

இந்த தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறைத்தண்டனையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து ராஜேஸ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 23 ஆம் தேதி  (23.04.2024) மீண்டும் நீதிபதி தண்டபானி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேஷ்தாஸ் சரணடைய விலக்களிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததுடன் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இதனைத் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (17.05.2024) நீதிபதி பீலா திரிவேதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “இந்த வழக்கு தொடர்பாக தமிழக காவல்துறை விளக்கம் அளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அதுவரை ராஜேஷ்தாஸை கைது செய்யக்கூடாது. ராஜேஷ்தாஸ் நீதிமன்றத்தில் சரண் அடைய விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்