Skip to main content

“போதைப்பொருள் தடுப்பில் விழிப்புடன் செயல்பட வேண்டும்” - இ.பி.எஸ். வலியுறுத்தல்!

Published on 17/05/2024 | Edited on 17/05/2024
E.P.S. Emphasis for tn govt Be alert  

சென்னையில் ரூ. 22 கோடி மதிப்பிலான போதைப்பொருள்களை நேற்று (16.05.2024) மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் செய்தனர். மேலும் இது தொடர்பாக நான்கு வெளிநாட்டவர் உட்பட 5 பேரை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை விமான நிலையத்தில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம் குறித்து தொடர்ச்சியாக நான் எச்சரித்து வந்தும், இந்த அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறாக திமுக அயலக அணி நிர்வாகியாக இருந்த ஒருவர் சர்வதேச போதைப்பொருள் மாபியாவாக இருந்த செய்தியே வந்து சேர்ந்தது. தற்போது போதைப்பொருட்களை கடத்துபவர்கள் எவ்வித அச்சமுமின்றி தமிழ்நாட்டை போதை பொருள் மையமாக மாற்றி இருப்பதற்கு இந்த அரசே காரணியாக உள்ளது. போதைப்பொருட்களின் புகலிடமாக தமிழ்நாட்டை மாற்றிய திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதுடன், இனியாவது போதைப்பொருள் தடுப்பில் விழிப்புடன் துரிதமாக செயல்படுமாறு முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தமிழகத்தில் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்