Skip to main content

எல்லை தாண்டிய இலங்கை மீனவர்கள்; சுற்றிவளைத்த இந்தியக் கடலோரக் காவல் படை!

Published on 17/05/2024 | Edited on 17/05/2024
Sri Lankan fishermen arrested across the border

நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே ராணி துர்காவதி கப்பலில் இந்தியக் கடலோரக் காவல்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இலங்கையைச் சேர்ந்த 5, அதிவேக படகுகள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தது தெரியவந்தது.  இதையடுத்து கோடியக்கரையில் இருந்து 10, நாட்டிக்கல் மைல் தொலைவில் இலங்கையைச் சேர்ந்த மீனவர்களை சுற்றி வளைத்த இந்திய கடலோர காவல் படையினர் அவர்களை சிறை பிடித்தனர்.

பின்னர் இலங்கையை சேர்ந்த மீனவர்களின் படகுகளில் ஏறிய கடலோர காவல் படையினர், படகை சோதனை செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது படகுகளில் சிலிண்டர் உதவியுடன் கடலில் மூழ்கி பிடிக்கப்பட்ட கடல் அட்டைகள் மூட்டை மூட்டையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து  இந்திய கடற்பகுதியில் அத்து மீறி நுழைந்து தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடித்த இலங்கை யாழ்ப்பாணம் பருத்திதுறை, மன்னார் மற்றும் திரிகோணமலை பகுதிகளைச் சேர்ந்த நாகேந்திரன், சௌகத், பைருல், இர்பான் உள்ளிட்ட 14 மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல் படையினர் கைது செய்தனர்.  

பின்னர் கைது செய்யப்பட்ட 14 இலங்கை மீனவர்களுடன் அவர்களது 5 படகுகளும் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் அவர்கள் வேதாரண்யம் கடலோரப் பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதுகுறித்து எல்லை தாண்டி வந்த இலங்கை மீனவர்கள் கூறுகையில்," இலங்கையில் கடல் அட்டைகள் பிடிப்பதற்கு தடை இல்லை என்பதால் நாங்கள் அதனை பிடிக்க அனுமதி சீட்டுடன் கடலுக்குள் வந்தோம். கனமழை மற்றும் காற்றின் காரணமாக எங்களது படகு இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்து விட்டது.  கைது செய்யப்பட்டுள்ள நாங்கள் கரை திரும்பவில்லை என்றால் எங்களது குடும்பம் கவலையில் ஆழ்ந்து விடும். அதனால் எங்களையும், எங்களது படகுகளையும் விடுவித்து சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப இந்திய அரசு உதவி புரிய வேண்டும்” என்கின்றனர்.

சார்ந்த செய்திகள்