Skip to main content

டெல்லியிலிருந்து வந்த தேர்தல் நிதி! பெர்சனல் அக்கவுண்டில் பதுக்கிக்கொண்ட வேட்பாளர்கள்!

Published on 02/04/2019 | Edited on 02/04/2019


                 
                           தேர்தல் என்றாலே பண விளையாட்டுதான். மக்களுக்கும் தொண்டர்களுக்கும் ஏக குஷியை தருகிறது தேர்தல். ஆனால், தற்போதைய தேர்தல், காங்கிரஸ் தொண்டர்களிடம் அதிருப்தியை உருவாக்கி வருகிறது. 

 

          ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு அதிகபட்சம் 70 லட்சம் வரை செலவு செய்யலாம் என தலைமை தேர்தல் ஆணையம் நிர்ணயத்திருக்கும்  நிலையில், இதெல்லாம் டீ  செலவுக்கு மட்டும்தான் சரியாகும் என ஆவேசப்படுகிறார்கள் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள். அதனால், தேர்தல் ஆணையம் நிர்ணயத்த தொகையைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கோடிக்கணக்கில் செலவு செய்ய களமிறங்கியுள்ளனர். அதற்கேற்ப  பண மூட்டைகள் உடையும் சத்தம் எல்லா தொகுதிகளிலும் எதிரொலிப்பதால் பிரதான கட்சிகளின் தொண்டர்களிடம் குதூகலம் கொப்பளிக்கிறது. ஆனால், திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மட்டும் அந்த உற்சாகம் இல்லை.

 

d

             

ஏன், இப்படி? என கதர்ச்சட்டையினரிடம் நாம் காதுகொடுத்தபோது, ‘’ தமிழகத்தில் திமுக கூட்டணியில் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது காங்கிரஸ் கட்சி. திருச்சியில் திருநாவுக்கரசு, தேனியில் ஈவிகேஎஸ் இளங்கோவன், சிவகங்கையில் ப.சி.யின் மகன் கார்த்திசிதம்பரம், குமரியில் வசந்த் அண்ட் கோ வசந்தகுமார் என வசதிபடைத்தவர்கள் களமிறங்கினாலும், தேர்தல் நிதி கேட்டு காங்கிரஸ் தலைமையிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. 

 


                இதனையடுத்து, 9 வேட்பாளர்களில் 5 பேருக்கு 2 சியும், 2 பேருக்கு 10 சியும் கொடுத்து உதவியிருக்கிறார் கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்தி. சிவகங்கைக்கும் குமரிக்கும் மட்டும் தேர்தல் நிதி இல்லை. இதில் வசதிபடைத்த வேட்பாளர்கள் பல கோடிகளை தொகுதிக்குள் கொட்டி வருகின்றனர். மற்றவர்களோ டெல்லியிலிருந்து தேர்தல் நிதி கொடுக்கப்பட்டதையே மறைத்துவிட்டார்களாம். அதிலும் 10 சி வாங்கிய இருவரும் சுமார் 8 சியை பெர்சனல் அக்கவுண்டில் பதுக்கிக்கொண்டிருக்கிறார்கள். 

 

                இந்த நிலையில், திமுகவின் ஒத்துழைப்பு இருந்தால்தான் ஜெயிக்க முடியும் என நம்பும் காங்கிரஸ் வேட்பாளர்கள், உடன்பிறப்புகளை செமையாக கவனித்துள்ளனர். அதே கவனிப்பு கதர்சட்டை தொண்டர்களுக்கு இல்லை. முதல் கட்டமாக பூத் கமிட்டிக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்ததோடு, இனியும் தருவதற்கு பணம் இல்லை என முறுக்குகிறார்கள். இதனால் நொந்து போயிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களோ அதிருப்தியடைந்து வருகின்றனர். திருச்சி, தேனி, சிவகங்கை, குமரி தவிர மற்ற 5 தொகுதிகளில் கதர்சட்டையினரின் புலம்பல்கள் காதை துளைத்தபடி இருக்கிறது. இப்படியிருந்தால் காங்கிரஸ் வாக்குகளை அதிமுக கூட்டணி எளிதாக பர்ச்சேஸ் செய்துவிடும் ‘’ என கொந்தளிக்கின்றனர் கதர்சட்டையினர். 

சார்ந்த செய்திகள்