Skip to main content

ஓடும் பேருந்தில் தீ விபத்து; 9 பேர் பலியான சோக சம்பவம்!

Published on 18/05/2024 | Edited on 18/05/2024
9 people in a incident on Fire in moving bus

ஹரியானா மாநிலம், நூஹ் மாவட்டம் அருகே சுற்றுலா பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்ததது. இந்தப் பேருந்தில் பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கரைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் புனித யாத்திரை செல்வதற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று நூஹ் மாவட்டம் அருகே பேருந்தில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, அந்தப் பேருந்து திடீரென்று தீ பற்றி எரிந்தது. பேருந்தில் தீ பற்றி எரிந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்தத் தீ விபத்தில், பேருந்தில் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். மேலும், 9 பேர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த பயணிகளை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த பயணிகளை சிகிச்சைகாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பேருந்தில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சார்ந்த செய்திகள்

 

Next Story

“ஹரியானா அரசின் முன் கைகளைக் கட்டிக்கொண்டு நின்று கேட்க முடியும்” - ஆம் ஆத்மி அமைச்சர்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
 pleads the Delhi minister to Haryana government

தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தலைநகர் டெல்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் அங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. 

மேலும், ஹரியானா அரசு டெல்லிக்கு தர வேண்டிய தண்ணீரில் பற்றாக்குறை ஏற்பட்டதால், டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இன்னும், சில பகுதிகளில் வாழும் மக்கள் டேங்கர் லாரியை நோக்கி முண்டியடித்துக் கொண்டு தண்ணீரைப் பிடிப்பதற்காக காலி குடங்களுடன் செல்லும் காட்சிகள் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனிடையே தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், தண்ணீர் வீணாவதைத் தடுக்கவும் டெல்லி நீர்வளத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. 

சில தினங்களுக்கு டெல்லியில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க உதவ வேண்டும் என உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநில அரசு முதல்வர்களுக்கு டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி கடிதம் எழுதியிருந்தார். மேலும், உ.பி மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்கள் டெல்லிக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, டெல்லியில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பற்றாக்குறையைக் கண்டித்து அம்மாநிலம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், டெல்லி அமைச்சர் அதிஷி இன்று (17-06-24) வசிராபாத் தடுப்பணையை ஆய்வு செய்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “வசிராபாத் அணையில் இருந்து தண்ணீர் பல நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படுகிறது. வசிராபாத் அணைக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இப்போது ஆற்றுப் படுகை தெரியும் அளவுக்கு நீர்மட்டம் குறைந்துவிட்டது. டெல்லி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையைத் தீர்க்க ஹரியானா அரசிடம் நாம் முறையிட மட்டுமே செய்யலாம். 

ஹரியானா மாநிலம் யமுனையில் இருந்து தண்ணீர் விடாத வரை, டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு தொடரும். முனாக் கால்வாயில் மிகக் குறைந்த அளவு தண்ணீர் வருகிறது. மறுபுறம், வசிராபாத் அணைக்கு தண்ணீர் வரவில்லை. ஹரியானா அரசின் முன் கைகளை கட்டிக்கொண்டு நின்று டெல்லி மக்களின் உயிர் அவர்களின் கையில் உள்ளது என்று என்னால் கூற முடியும்” என்று கூறினார். 

Next Story

பெயிண்ட் குடோனில் தீ விபத்து; போராடும் தீயணைப்புத்துறை 

Published on 16/06/2024 | Edited on 16/06/2024
A fire in a paint factory; A struggling fire department

சென்னை மணலிபுதுநகரில் பெயிண்ட் தொழிற்சாலை ஒன்றில் பற்றி எரியும் தீயால் அந்தப் பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலி புதுநகர் அருகே விச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 'ரூபி பெயிண்ட்ஸ் கெமிக்கல்' என்கிற நிறுவனத்தின் தயாரிப்பு குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து சம்பவத்தை அறிந்து அந்தப் பகுதிக்கு 14 தீயணைப்பு வாகனங்களில் வந்த சுமார் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். பெயிண்ட் கெமிக்கல் பொருட்கள் நிரம்பிய பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் கரும்புகை வானுயர சூழ்ந்துள்ளது. இது அந்தப் பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தை கொடுத்துள்ளது. தனியார் டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக தொழிற்சாலை பகுதியில் தீ எரிந்து வருவது அந்தப் பகுதி மக்களுக்கு பெரும் அச்சத்தைக் கொடுத்துள்ளது.