Skip to main content

கரோனா பாதிப்பு என வீடியோ வைரலாக பரவியதால் சரக்கு ரயிலில் விழுந்து வாலிபர் தற்கொலை!!!

Published on 01/04/2020 | Edited on 01/04/2020

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே சரக்கு ரயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் முஸ்தபா(35). கேரளாவில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதற்கு முன்பு தமிழகம் திரும்பிய முஸ்தபா, மதுரை பீ.பீ. குளம், முல்லைநகரில் உள்ள தனது அம்மாவீட்டில் தங்கியுள்ளார். சளி, இருமல் மற்றும் சோர்வு காரணமாக இவருக்கு கரோனா பாதிப்பு இருக்கலாம் என கருதிய அக்கம், பக்கத்தினர் சுகாதாரத்துறை மற்றும் தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

 

 Youngster falling into cargo train as viral video spreads


சுகாதாரத்துறையினர் முல்லைநகர் வந்து இவரிடம் விசாரணை நடத்தி, முஸ்தபாவையும் அவரது தாயாரையும் 108 மூலமாக மதுரை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க முடிவு செய்தனர். ஆனால் இரண்டு மணிநேரத்திற்கு மேல் 108 ஆம்புலன்ஸ் வராததால் அந்த பகுதி பொதுமக்களே சரக்குவாகனம் ஒன்றை தயார் செய்து இவர்களை மதுரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முஸ்தபாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவருக்கு கரோனா தொற்று இல்லை என கூறி வீட்டிற்கு அவரையும், அவரது தாயாரையும் அனுப்பிவைத்தனர். 

இந்தநிலையில் இவர் கரோனாவில் பாதிக்கப்பட்டவர் எனக்கூறி பொதுமக்கள் எடுத்த வீடியோ வைரலாக அனைவருக்கும் பரவியது. இதனால் முஸ்தபா மன வேதனையடைந்தார். நேற்று காலை மதுரையிலிருந்து திருமங்கலம் நோக்கி நடந்து வந்த அவர், கப்பலூர் டோல்கேட் அருகே வந்தபோது சென்னையிலிருந்து நெல்லைக்கு சீனி மூட்டைகளை ஏற்றி சென்ற சரக்கு ரயில் வருவதை கவனித்த அவர், கண்ணிமைக்கும் நேரத்தில் சரக்குரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட மதுரை ரயில்வே போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கரோனா பாதிப்பு என வைரலாக பரவிய வீடியோவால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று இல்லை என உறுதி செய்த நிலையில் மீண்டும், மீண்டும் வதந்தி பரவியதால் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்