Skip to main content

பற்றியெரியும் கிணற்று நீர்... அதிர வைத்த காரணம்...

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

 Burning well water ... the reason for the disturbance ...

 

தமிழக - கேரள எல்லையில், வீட்டின் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் பற்றி எரியும் தன்மை கொண்டதாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

தமிழக - கேரள எல்லையான பனச்சமோடு புலியூர் சாலையில் கோபி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் உள்ள தண்ணீரை அக்குடும்பத்தினர் பயன்படுத்தி வந்தனர். கடந்த சில நாட்களாக தண்ணீரில் திடீரென பெட்ரோல் வாசம் வீசியதால் சந்தேகம் அடைந்த கோபி, கிணற்றிலிருந்து ஒரு வாளி தண்ணீரை எடுத்து தீ பற்ற வைத்து சோதித்தார். அப்பொழுது வாளியில் இருந்த தண்ணீர் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. பல ஆண்டுகளாக வீட்டிற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த கிணற்றுத் தண்ணீர் இப்படி திடீரென பெட்ரோல் நறுமணத்துடன் இருப்பதையும், தீப்பிடிப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்த கோபி, இதற்கு என்ன காரணமாக இருக்கும் என விசாரித்தபோது, கோபியின் வீட்டுக்கு அருகிலுள்ள தனியார் பெட்ரோல் பங்கில் இருந்த பெட்ரோல் சேமிப்புக் கலன் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்தப் பெட்ரோல் கசிந்து கிணற்றில் உள்ள நீருடன் கலந்திருக்கலாம். அதனால் நீர் தீப்பிடித்து இருக்கலாம் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

இதுகுறித்து கேரளாவின் பாரசலை காவல்துறையினரும், தமிழக எல்லையான கன்னியாகுமரி மாவட்ட பலுகல் காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் வீட்டின் உரிமையாளர் கோபியை கலக்கத்தில் தள்ளியுள்ளது. கிணற்று நீர் இப்படி தீப்பிடித்து எரிந்த சம்பவம் தொடர்பான  வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்