Skip to main content

"பிரெசிடென்ட் அங்கிள்! எனது அம்மாவை மன்னித்துவிடுங்கள்..." - உருக வைக்கும் சிறுவனின் வேண்டுகோள்!

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

shabnam ali's son heart melting appeal to president of india

 

உத்தரப்பிரதேச மாநிலம் பாவன்கேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சப்னம் அலி. பள்ளி ஆசிரியையாக இருந்த இவர், சலீம் என்ற கூலித் தொழிலாளியைக் காதலித்து வந்துள்ளார். அதன்மூலம் கர்ப்பமடைந்துள்ளார். ஆனால் இவர்களின் காதலுக்கு சப்னம் அலியின் வீட்டார் சம்மதிக்கவில்லை. இதனால் ஏழு வார கர்ப்பிணியான சப்னம் அலி, தனது குடும்பத்தினருக்குப் பாலில் மயக்க மருந்தைக் கலந்துகொடுத்து அவர்களின் கழுத்தை அறுத்து, கொடூரக் கொலையைச் செய்துள்ளார். தனது பெற்றோர், சகோதரர்கள், சகோதரரின் 10 வயது மகன் உள்ளிட்ட ஏழு பேரை இவ்வாறு கொலை செய்துள்ளார் சப்னம் அலி.

 

இதனைத் தொடர்ந்து சப்னம் அலி மற்றும் அவரது காதலன் சலீம் ஆகியோருக்கு நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, சப்னம் அலி அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கும், பிறகு உச்சநீதிமன்றத்திற்கும் சென்றார். அங்கும் மரண தண்டனை உறுதிசெய்யப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்தார். அதுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை தூக்கிலிடுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இந்தநிலையில் சப்னம் அலியை மன்னிக்குமாறு அவரது 12 வயது மகன் முகமது தாஜ் கோரிக்கை விடுத்துள்ளான். மேலும் குடியரசுத்தலைவர் தனது அம்மாவை மன்னிப்பார் என நம்புவதாகவும் அந்தச் சிறுவன் கூறியுள்ளான்.

 

தற்போது முகமது தாஜை பத்திரிகையாளர் ஒருவர் வளர்த்து வருகிறார். முகமது தாஜ் ஒரு சிலேட்டில், "பிரெசிடென்ட் அங்கிள் ஜி, எனது அம்மா சப்னமை தயவு செய்து மன்னித்து விடுங்கள்" என ஆங்கிலத்தில் எழுதி, தனது தாயாரை மன்னிக்குமாறு குடியரசுத் தலைவரை கேட்டுக் கொண்டுள்ளான். சிறுவனின் இந்தச் செயலைக் கண்டு பலரும் மனம் உருகி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்