Skip to main content

காமெடியில் ஜொலித்தாரா சந்தானம்?; இங்க நான் தான் கிங்கு விமர்சனம்!

Published on 18/05/2024 | Edited on 18/05/2024
ingu nan than kingu review

சில படங்களின் சறுக்கல்களுக்கு பிறகு மீண்டும் காமெடி படங்கள் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்பி இருக்கும் சந்தானம் மீண்டும் அதே கலவையோடு களம் இறங்கி இருக்கும் திரைப்படம் இங்க நான் தான் கிங்கு. தன் முந்தைய படங்கள் வாங்கி கொடுத்த வரவேற்பை இந்த படமும் பெற்றுக் கொடுத்ததா, இல்லையா? 

திருமணம் ஆகாத 90ஸ் கிட்டாக இருக்கும் சந்தானம் தன் 25 லட்ச ரூபாய் கடனுக்காக பெரிய வரதட்சணையுடன் வரும் பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இவருக்கும் மிகப்பெரிய ஜமீன் குடும்பத்து பெண்ணான நாயகி பிரியலயாவிற்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு தான் சந்தானத்திற்கு தெரிய வருகிறது நாயகி குடும்பம் சந்தானத்தை விட மிகப்பெரிய கடனாளியான ஒரு குடும்பம் என்று. இதனால், மிகப்பெரிய அதிர்ச்சிக்கு ஆளாகும் சந்தானம் வேறு வழி இன்றி மாமனார் தம்பி ராமையா, மச்சான் பால சரவணன் மற்றும் மனைவி பிரியலயா உடன் தன் வீட்டில் குடியேறுகிறார். திருமணத்திற்கு பிறகு தன் மாமனார் குடும்பத்தின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் அதிகமாகிறது. இவர்கள் வீட்டில் அடிக்கும் கூத்து சந்தானத்திற்கு எரிச்சல் ஏற்படுத்துகிறது. இதனால் கடுப்பான சந்தானம் இவர்களை எப்படியாவது வெளியே துரத்தி விட வேண்டும் என்று எண்ணும் நேரத்தில் அந்த வீட்டில் ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலையை யார் செய்தது? கொலை செய்யப்பட்ட நபர் யார்? அந்த கொலைக்கும், சந்தானம் குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம்? இந்த கொலையில் இருந்து இவர்கள் தப்பித்தார்களா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

ஒரு பழக்கப்பட்ட ஒன்லைன் கதையை வைத்துக்கொண்டு இரண்டரை மணி நேரம் படத்தை மிகவும் கலகலப்பாகவும் குடும்பங்கள் கொண்டாடும் ஜனரஞ்சகமான திரைப்படமாகவும் கொடுத்து படத்தை கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த் நாராயணன். படம் ஆரம்பிப்பது முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் ஜெட் வேகத்தில் நகர்ந்து கலகலப்பான சிரிப்பு படமாக அமைந்து ரசிகர்களுக்கு மீண்டும் ஒருமுறை விருந்து கொடுத்திருக்கிறது. இருந்தும் படங்களுக்கு நடுவே ஆங்காங்கே வரும் பாடல்கள் வேகத்தடையாக அமைந்தாலும் அதை எல்லாம் இதில் வரும் காமெடி காட்சிகள் கடக்க செய்து பார்ப்பவர்களுக்கு எந்த ஒரு இடத்திலும் அயற்சி ஏற்படாதவாறு அமைந்து ரசிக்க வைத்திருக்கிறது.

வழக்கமாக சந்தானம் படத்தில் என்னவெல்லாம் ரசிகர்கள் பார்த்து ரசிப்பார்களோ அவை அப்படியே இந்தப்படத்திலும் அமைந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காமல் நல்ல காமெடி படத்தை கொடுத்திருக்கிறது. ஒரு கதையாக பார்க்கும் பொழுது இது ஒரு அதறப்பழசான கதையாக இருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்கும்படி இருந்தாலும் அவையெல்லாம் மறக்கடிக்க செய்து வேகமான காமெடி திரைக்கதை மூலம் பார்ப்பவர்களுக்கு போர் அடிக்காமல் நல்ல சிரிப்பு படம் பார்த்த உணர்வை இப்படம் கொடுத்திருக்கிறது. 

நாயகன் சந்தானம் வழக்கம் போல் தனது ட்ரேட் மார்க் பஞ்சு வசனங்கள் மூலமும் டைமிங் மட்டும் ரைமிங் காமெடிகள் மூலம் தியேட்டரில் சிரிப்பலையை மீண்டும் ஒருமுறை உண்டாக்கியிருக்கிறார். எந்த ஒரு இடத்திலும் தொய்வு ஏற்படாதவாறு காட்சிக்கு காட்சி சிரிப்பு வெடிகளை தூவி ரசிக்கும்படி காமெடி காட்சிகளை கொடுத்திருக்கிறார் சந்தானம். 

இவரது லொள்ளு சபா கூட்டணி இவருடன் இணைந்து மீண்டும் ஒருமுறை சிறப்பான காமெடி காட்சிகளை கொடுத்து பார்ப்பவர்களுக்கு பரவசத்தை கொடுத்திருக்கிறது. வழக்கமான நாயகியாக வந்து செல்லும் நாயகி பிரியாலயா வழக்கமான நடிப்பை வெளிப்படுத்திவிட்டு சென்றிருக்கிறார். இவருக்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை. தனக்கு கொடுத்த வேலையை மட்டும் செய்திருக்கிறார். படத்தின் இன்னொரு ஹீரோ மாமனார் தம்பி ராமையா. இவரின் வெகுளித்தனமான நடிப்பும், அதகலமான அட்ராசிட்டியும் பார்ப்பவர்களுக்கு சிரிப்பை வரவழைத்து ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. சில இடங்களில் இவரது நடிப்பு கொஞ்சம் ஓவர் டோஸ் ஆக இருந்தாலும் அவையும் நல்ல காமெடிகள் மூலம் மறுக்கடிக்கப்பட்டு கைதட்டல் பெருகிறது. இவருக்கும் சந்தானத்துக்குமான கூட்டணி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. 

சந்தானத்தின் நண்பனாக வரும் விவேக் பிரசன்னா இரு வேறு கதாபாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிரிப்பு மூட்டி இருக்கிறார். தம்பி ராமையாவோடு பயணிக்கும்படியான கதாபாத்திரத்தில் வரும் பாலசரவணன் சில இடங்களில் சிரிப்பலையை உண்டாக்கி இருக்கிறார். மற்றபடி சந்தானத்தின் ட்ரேட் மார்க் கூட்டணி நடிகர்களான மாறன், சாமிநாதன், கூல் சுரேஷ், முனீஸ்காந்த், சேசு உட்பட பலர் வழக்கம்போல் அவரவர் வேலையை சிறப்பாக செய்து பல காட்சிகளுக்கு காமெடி நாங்கள் கேரன்டி என்பது போல் சிரிப்பலையை தியேட்டர் முழுவதும் பரவ செய்து கரகோஷங்களால் அதிர செய்திருக்கின்றனர்.

டி.இமான் இசையில் ஆரம்ப பாடலும், காதல் பாடலும் சிறப்பு. நீண்ட இடைவெளிக்கு பிறகு முழு நீள காமெடி பலத்திற்கு இசையமைத்திருக்கும் இவர் பின்னணி இசை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். இரண்டு பாடல்களைத் தவிர மற்ற பாடல்கள் அனைத்தும் படத்திற்கு சற்று வேகத்தடையாக அமைந்திருக்கிறது. ஓம் நாராயணன் ஒளிப்பதிவில் பிணத்துடன் சேசிங் செய்யும் காட்சிகள் நன்றாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. லாஜிக் எல்லாம் விட்டு விட்டு வெறும் காமெடி மேஜிக்கை மட்டும் நம்பி தியேட்டருக்கு சென்றால் நிச்சயம் குடும்பத்துடன் இரண்டரை மணி நேரம் சிரித்து விட்டு வரலாம்.

இங்க நான் தான் கிங்கு - காமெடியில் இவர்கள் கிங்குதான்!

சார்ந்த செய்திகள்