Skip to main content

மணிப்பூர் விரையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் குழு

Published on 21/08/2023 | Edited on 21/08/2023

 

Communist Party of India delegation from Manipur

 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துச் சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அந்த மாநிலத்தின் பழங்குடி சமூகத்தினரான குக்கி மற்றும் நாகா இன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், கடந்த மே மாதம் 3 ஆம் தேதி முதல் மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த வன்முறைச் சம்பவங்களால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

இதற்கிடையில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.  இதனையடுத்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு ஒன்று அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் மணிப்பூரில் கலவரங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

 

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் குழு இன்று மணிப்பூர் செல்கிறது. இந்த குழுவினர் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா மணிப்பூரில் 4 நாட்கள் தங்கியிருந்து அங்கு நிலவும் சூழல் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்த குழுவில் பினோய் விஸ்வம், கே.நாராயணா, ராமகிருஷ்ண பாண்டே, அசோமி கோகாய் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளனர். நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்கள் மற்றும் மலைப்பகுதிகளில் தஞ்சமடைந்துள்ள மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிகின்றனர். இன்று முதல் வரும் 24 ஆம் தேதி வரை மணிப்பூரில் ஆய்வு செய்ய உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்