Skip to main content

நூற்றாண்டு கண்ட யுகப் புரட்சி

Published on 06/11/2017 | Edited on 06/11/2017


வாரிஷ்!

தோழர் என்பதற்கான ரஷ்ய மொழிச் சொல்!

இந்தச் சொல் அங்கே எங்கும் ஒலித்து எதிரொலித்தது! ஏழை-பணக்காரர், உயர்ந்தவர்-தாழ்ந்தவர் போன்ற அனைத்து வேறுபாடுகளும் ஒழிக்கப்பட்டன! அனைவரும் தோழர்கள்! பொது உடைமையும், பொது உரிமையும் நிலவின! உலக வரலாற்றில் முதன்முதலாக வறுமையும், ஏற்றத் தாழ்வும் அங்கே ஒழிக்கப்பட்டன! அனைவருக்கும் வளவாழ்வு அமைந்தது! இதை சாதித்த புரட்சிதான் நவம்பர் புரட்சி! ரஷ்யாவில் 1917 நவம்பர் 7 அன்று நடந்த புரட்சி! இப்போது நூறாண்டு கண்டுள்ள புரட்சி!

எப்படி நடந்தது அது? என்ன சாதித்தது? பிறகு ஏன் எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு வீழ்ந்தது? இதன் படிப்பினைகள் என்ன?

முதல் உலகப் போர் நடந்த காலம். நிக்கோலஸ் என்னும் ஜார் (மன்னன்) ஆண்ட ரஷ்யா, மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவும், பதிலடியைச் சமாளிக்கவும் ஓயாத போரில் ஈடுபட்டுவந்தது. லட்சக்கணக்கான ரஷ்யப் படை வீரர்கள் கொல்லப்பட்டு வந்தார்கள்.

உள்நாட்டிலோ அவர்களது மனைவிமார்களும், குழந்தைகளும், மற்ற குடும்பத்தினரும் ஆதரவற்று வறுமையில் வாடினார்கள். விலைவாசியோ 300 சதவிகிதம், 400 சதவிகிதம் என்று உயர்ந்து விண்ணைத் தொட்டது. அந்த விலையிலும்கூட உணவுப் பொருட்கள் கிடைக்காத பற்றாக்குறை. தொழிற்சாலைகளில் கடுமையான வேலைப்பளு. அடக்குமுறை. கிராமங்களில் பண்ணை அடிமை முறை. எதிர்ப்போரின் குரல்வளை நெரிக்கப்பட்டது.

இம்மென்றால் சிறைவாசம்; ஏனென்றால்

வனவாசம்; இவ்வா றங்கே

செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே

அறமாகி... … “

என்கிற பாரதியின் வரிகள் உங்களுக்குத் தெரியும். இதுதான் அன்றைய ரஷ்யா.

இந்த நிலைமையில்தான் வந்தது, 1917 மார்ச் 8. உலக மகளிர் தினம். பொங்கி எழுந்தார்கள் பெண் தொழிலாளர்கள். ஆண் தொழிலாளர்களும் இணைந்தார்கள். படைவீரர்களில் (ராணுவம்) பெரும்பாலோரும் புரட்சியில் சேர்ந்து கொண்டார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ பெட்ரொகிராட் தொழிலாளர்கள் மற்றும் படை வீரர்களின் சோவியத் -அதாவது குழு அமைக்கப்பட்டது. புரட்சித் தீ பற்றிப் பரவியது. ஒரே வாரத்தில் மன்னராட்சி தூக்கி எறியப்பட்டது. முதலாளித்துவக் கட்சிகளைக் கொண்ட இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. 

புரட்சி தொடங்கிய நாளான, மார்ச் 8 என்பது ரஷ்யாவின் பழைய காலண்டர்படி பிப்ரவரி 23 என்பதால், இது ‘ பிப்ரவரி புரட்சி ‘ என்று வரலாற்றில் புகழ் பெற்றது! இந்தப் புரட்சியே நவம்பர் புரட்சிக்குக் கால்கோள் இட்டது!



இதற்கிடையில், ஜார் ஆட்சியில் கைது, நாடு கடத்தல், மீண்டும் கைதாகும் சூழ்நிலை காரணமாக வெளிநாடுகளில் இருந்து செயல்பட்டு வந்த லெனின், ஏப்ரல் மாதத்தில் நாடு திரும்பினார். இந்த இடைக்கால அரசாங்கம் முதலாளித்துவ அரசாங்கம்தான். போர் நடத்தி, நாடு பிடித்து முதலாளித்துவத்தை வளர்க்கவே இது செயல்படுகிறது. இந்த அரசாங்கத்தைக் கலைக்க வேண்டும். சோவியத்துகளே அரசாக அமைந்து செயல்பட வேண்டும். தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள் பிரதிநிதிகளின் சோவியத் குடியரசை அமைக்க வேண்டும். அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே!’’

-என்ற பொருளில் லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்தது. சோவியத்துகளோ இடைக்கால அரசாங்கத்தின் மீது இன்னும் நம்பிக்கை வைத்துப் பேசிக்கொண்டு இருந்தன.

ஆனால் அரசாங்கமோ வாக்குறுதிகளுக்கு மாறாக நடந்துவந்தது; எதிர்க்கும் மக்கள் மீது கொடிய அடக்குமுறையை ஏவியது. அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள், கம்யூனிஸ்ட் கட்சி சொன்னதே உண்மை என்பதை அனுபவபூர்வமாக நிரூபித்தன. எனவே, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின்கீழ் பெட்ரோகிராட் சோவியத் செயல்படத் தொடங்கியது.

உலகின் முதல் சோஷலிஸ்ட் புரட்சி தொடங்கியது!

நவம்பர் 7 அதிகாலை 1:25 மணி. ’செங்காவலர்கள் (Red Guards)‘ என்ற பெயரில் அமைப்பாக்கப்பட்ட ஆயுதம் ஏந்திய தொழிலாளர்களும், படைவீரர்களும் பெட்ரொகிராட் நகரைச் சுற்றி வளைக்கத் தொடங்கினார்கள். அடுத்தடுத்து அரசின் முக்கிய நிறுவனங்கள் கைப்பற்றப்பட்டன. இடைக்கால அரசாங்க அமைச்சர்கள் கைது செய்யப்பட்டார்கள்.



மறுநாள் நவம்பர் 8 அதிகாலை 3:40 மணி. ரஷ்யா முழுவதில் இருந்தும் வந்திருந்த சோவியத் பிரதிநிதிகளின் மாநாட்டில் லெனினுடைய தீர்மானம் முன் வைக்கப்பட்டது. அரசு அதிகாரங்கள் அனைத்தையும் இந்த மாநாடு ஏற்கிறது என்கிற அந்தத் தீர்மானம் ஏற்கப்பட்டது.

சோஷலிச ரஷ்யாவின் வெற்றிப் பயணம் தொடங்கியது!

நவம்பர் புரட்சி என்னும் சோஷலிசப் புரட்சி இவ்வாறு 26 மணி நேரம் 25 நிமிடங்களில் பெட்ரோகிராட் நகரில் மகத்தான வெற்றி அடைந்தது. (ரஷ்யாவின் பழைய காலண்டர்படி இது அக்டோபர் 25 அன்று தொடங்கியதால் அக்டோபர் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது.)

அன்று மாலை மாநாடு மறுபடியும் கூடியது. புதிய அரசின் முதல் உத்தரவாக “போர் வேண்டாம். நியாயமான சமாதானத்துக்குத் தயார் என்பதும், இரண்டாவது உத்தரவாக, உழுபவருக்கே நிலத்தைச் சொந்தமாக்கும் வகையில் ’’நிலங்கள் அனைத்தும் அரசுக்கே சொந்தம்’’ என்பதும் பிறப்பிக்கப்பட்டன. புதிய சோவியத் அரசாங்கம், பிரதமர் தோழர் லெனின் தலைமையிலான அமைச்சரவை, தேர்ந்தெடுக்கப்பட்டது.

தலைநகர் பெட்ரொகிராடில் வெற்றி அடைந்த புரட்சி, விரைவிலேயே ரஷ்ய நாடு முழுவதும் பரவி வெற்றி பெற்றது..

என்ன சாதித்தது இந்தப் புரட்சி? எல்லாம் சாதித்தது!

வறுமை, வேலையின்மை ஒழிக்கப்பட்டன.

மூன்று வார்த்தைகள்தான்.

வறுமை, வேலையின்மை ஒழிக்கப்பட்டன.

ஆனால் எவ்வளவு பெரிய இமாலயச் சாதனை தெரியுமா? ஒரு டீ குடிக்கக்கூட வழி இல்லாமல் இரண்டு நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறீர்களா? கும்பி எரியும். குடல் கருகும். கண்கள் இருளும். அப்போது தெரியும், வறுமையின் கொடுமை.

ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நவம்பர் புரட்சியினால் உருவான சோஷலிச ரஷ்யாவில், அத்தனை கோடிப்பேருக்கும் வேலை யும், உணவும் மற்ற அடிப்படை வசதிகளும் அளிக்கப்பட்டன. வெறும் பொருளாதார மாற்றம் மட்டுமல்ல. உயர்ந்தவர்-தாழ்ந்தவர் என்கிற பேதம் ஒழிக்கப்பட்டு அனைவரும் மதிப்புடன் உழைத்து வாழ்ந்தனர். பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் பெரிய நாடு ரஷ்யாதான். கருவுற்ற பெண்களுக்கு, மகப்பேறுக்கு முன்பு 2 மாதங்களும், பின்பு 2 மாதங்களும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளித்த முதல் நாடும் அதுதான். இதைப்போல அரசியல், பொருளாதாரம், சமூகம், பண்பாடு, அறிவியல்-தொழில் நுட்பம் … என்று அனைத்துத் துறைகளிலும் சாதனைகளைக் குவித்தது சோஷலிச ரஷ்யா.

ஆனால் அந்த ரஷ்யா இன்று?

விண்ணில் ரவி தனை விற்றுவிட் டெவரும் போய்

மின்மினி கொள்வாரோ?’’



யாராவது சூரியனை விற்று விட்டு, மின்மினிப் பூச்சியை வாங்குவார்களா? வாங்கியது ரஷ்யா. 1991-ம் ஆண்டில் அங்கே கம்யூனிசம் அகற்றப்பட்டது. முதலாளித்துவம் மீண்டது. கூடவே வறுமையும் மற்ற சமூக அவலங்களும் குடியேறின. பதினைந்து தேசிய இனங்களின் ஒன்றியமாக, ஒரே நாடாக இருந்த சோவியத் நாடு பதினைந்து துண்டுகளாக உடைந்து தனித் தனி நாடுகளாகச் சிதறிவிட்டது. எதனால் நேர்ந்தது இந்த அவலம்?

முதல் காரணம்: அதிகாரத்துவம். ஆணவத்துடன் உத்தரவிடும் போக்கு. மாமேதை லெனின் 1921-ம் ஆண்டிலேயே சொன்னார்: “கம்யூனிஸ்ட்டுகள் அதிகாரத்துவம் கொண்டவர்களாக ஆகிவிட்டார்கள். கம்யூனிஸ்ட்டுகளை ஏதாவது அழித்து ஒழித்துவிடும் என்றால் அது இந்த அதிகாரத்துவம்தான்.’’அதுதான் நடந்தது. ஸ்டாலின் ஆட்சியின் கடைசிக் காலத்தில் கட்சியிலும், அரசிலும் உருவான அதிகாரத்துவப் போக்கு, அதன்பின் வந்தோரின் ஆட்சியில் மேலும் இறுக்கம் அடைந்தது. இதனால் கட்சியும் அரசும் மக்களிடமிருந்து விலகி, உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டன; மக்களின் ஆதரவை இழந்தன.

இரண்டாவது காரணம்: ஜனநாயக மறுப்பு. மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டன. என்ன தவறு நடந்தாலும் அதைச் சுட்டிக் காட்டவோ, விமர்சனம் செய்யவோ முடியாத நிலை ஏற்பட்டது. இதை மீறி எதிர்ப்பு எழுந்தால் அது நசுக்கப்பட்டது.

மூன்றாவது காரணம்: பொருளாதாரப் பின்னடைவு. மக்களோடு தொடர்பு இல்லாமல் தந்தக் கோபுரத்தில் இருந்து கொண்டு காகிதத் திட்டங்களைத் தீட்டியது தலைமை. இதனால் திட்டங்கள் தோல்வி அடைந்தன. அந்தத் தோல்விகளும் மறைக்கப்பட்டன. நாட்டின் உண்மையான பொருளாதாரச் சக்திக்கு அப்பாற்பட்ட சலுகைகள் வாரி வழங்கப்பட்டன. இறுதியில் உற்பத்தியின் அளவும், தரமும் வீழ்ந்தன. எல்லாவற்றுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டது. மக்களிடம் அதிருப்தி பெருகியது.

நான்காவது காரணம்: சித்தாந்தப் புறக்கணிப்பு. லெனின், ஸ்டாலின் காலத்தில் மக்களுக்குச் சமூக உணர்வு, சோஷலிச உணர்வு ஊட்டப்பட்டது. மார்க்சியமும், லெனினியமும் மக்களுக்கு உத்வேகம் அளித்தன. பிற்காலத்தில் இது புறக்கணிக்கப்பட்டது. சமூகத்தில் எழுந்த பிரச்சினைகளுக்கு இத்தகைய சித்தாந்தக் கண்ணோட்டத்தில் தீர்வு காணாமல், முதலாளித்துவ முறைகளே மருந்து எனக் கூறப்பட்டுச் செயல் படுத்தப்பட்டன. விளைவு? முதலாளித்துவம் மீண்டது. சமூக அவலங்களும் திரும்பின.

ஐந்தாவது காரணம்: தேசிய இன உரிமை புறக்கணிப்பு. லெனின் காலத்தில் தேசிய இனங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. ஆனால், அவர் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்னாலேயே பொறுப்பில் இருந்தவர்களிடம் தவறான போக்கு தோன்றியது. தேசிய இனங்களின் உரிமைக் குரலை, “தேசிய சோஷலிசம்’’ என்றும், குறுகிய தேசியவெறி என்றும் தலை வர்கள் கூறி, அதை எதிர்த்தார்கள். 1923-ம் ஆண்டு ஏப்ரலில் இதுபற்றிய விவாதத்தில், இந்தத் தலைவர்களை வன்மையாகக் கண்டித்தார் லெனின். எனினும் லெனின் மறைந்து சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்ய மொழித் திணிப்பும், அதிகாரங்களை மையத்தில் குவித்துக் கொள்வதுமாக தேசிய இன உரிமைகள் புறக்கணிக்கப்பட்டன. எதிர்ப் புகள் அடக்கப்பட்டன. விளைவு...? சோவியத் நாடு துண்டு துண்டாகச் சிதறியது.

இவையே சோவியத் நாட்டின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்கள்.

எனவே, ஏற்றத் தாழ்வுகளை ஒழித்து வளவாழ்வை உருவாக்க ஒரே வழி சோஷலிசமே என்பதும், அதைச் செயல்படுத்தும் போது தவறான போக்குகள் உருவானால் மீண்டும் முதலாளித்துவ அவலங்கள் திரும்பிவிடும் என்பதுமே நவம்பர் புரட்சியும், அதற்குப் பிந்திய சோவியத் நாட்டு வரலாறும் தரக் கூடிய படிப்பினைகளாகும். இவற்றை உலகக் கம்யூனிஸ்ட் இயக்கமும், இந்தியாவின் கம்யூனிஸ்ட் இயக்கமும் ஆய்வு செய்து, பதிவு செய்துள்ளன; தேவையான மாற்றங்களைச் செய்ய நடவடிக்கை எடுத்துவருகின்றன. 

அப்படியானால், இந்தியாவிலும் நவம்பர் புரட்சியைப் போலவே ஒரு புரட்சியை நடத்தி, சோஷலிசச் சமுதாயத்தை உருவாக்கிட முடியுமா? முடியாது. எந்த ஒரு நாட்டின் புரட்சியும் மற்றொரு நாட்டின் புரட்சியைப் போல நடந்தது இல்லை; நடக்கவும் முடியாது. சோவியத் ரஷ்யாவின் புரட்சி ஒரு வகை. சீனப் புரட்சி வேறு வகை. வியட்நாம், கியூபா புரட்சிகள் வெவ்வேறு வகை.

இந்தியப் புரட்சி? இந்தியா தனக்கே உரிய புரட்சி யைத் தானாகத்தான் உருவாக்க வேண்டும். அது வேறு எந்த நாட்டின் புரட்சியைப் போலவும் இருக்க முடியாது.

உலக நிலைமை, இந்தியாவில் வர்க்கங்களின் வாழ்நிலை, போராட்ட உணர்வு நிலை, சாதி வேறுபாடுகள், மத வேறுபாடுகள், தேசிய இன உரிமைகளின் நிலை, ஆளும் வர்க்கங்களின் நலனுக்கு ஏற்ற வகையில் மக்களின் ஒப்புதலை உருவாக்கும் பெரு நிறுவன ஊடகங்களின் வலிமை, புரட்சிக்குத் தலைமை தாங்க வேண்டிய இயக்கத்தின் நிலைமை போன்ற பல காரணிகள் இந்தியப் புரட்சியின் பாதையைத் தீர்மானிக்கும்.

பொதுவாக இன்றைய உலக, இந்திய நிலைமை என்ன? பிற்போக்குச் சக்திகள் முன்னேறியுள்ளன. முற்போக்குச் சக்திகள் பின்னடைந்துள்ளன. அப்படியானால் புரட்சி சாத்தியம்தானா? காரல் மார்க்ஸ் கூறியதுதான் இதற்குப் பதில்:

பாட்டாளி வர்க்கப் புரட்சிகள் தங்களது எதிரிகளைத் தூக்கி மண்ணில் எறிந்துவிட்டதாகத் தோன்றுகிறது. ஆனால் அந்த எதிரிகளோ அந்த மண்ணிலிருந்தே புதிய பலத்தைப் பெற்று,  முன்னைவிட பிரம்மாண்டமான அளவில் மீண்டும் எழுந்து வரலாம் என்ற நிலை ஏற்படுகிறது. பாட்டாளி வர்க்கப் புரட்சிகள் பின்வாங்குவதும் நடக்கிறது. ஆனால் ஒரு சூழ்நிலை உருவானதும், பின்வாங்குதல் சாத்தியமற்றதாக ஆகிவிடுகிறது. (பாட்டாளி வர்க்கப் புரட்சி தவிர்க்க முடியாமல் எழுகிறது) அப்போதுள்ள நிலைமைகளே உரத்துக் கூவுகின்றன: ‘இதோ இருக்கிறது தீவு ! தாண்டிக் காட்டு! இதோ இருக்கிறது ரோஜா மலர்! ஆடிக் காட்டு!




சார்ந்த செய்திகள்