The court ruled sensational on The daughter-in-law who incident happened her mother-in-law

திருவண்ணாமலை மாவட்டம் தாமரை நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி ஆதிலட்சுமி. இந்தத்தம்பதிக்கு சிவசங்கர் என்ற மகன் உள்ளார். சிவசங்கருக்கும், சென்னையைச் சேர்ந்த சத்தியா என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில், மாமியார் ஆதிலட்சுமிக்கும், அவரது மருமகள் சத்தியாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இது குறித்து சென்னை கொரட்டூரில் உள்ள அவரது அண்ணன் பிரபுவிடம் சத்தியா கூறியுள்ளார். இதையடுத்து, பிரபு கூறிய ஆலோசனைபடி கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருவண்ணாமலையைச் சேர்ந்த கூலி படையினர் ஆனஸ்ட்ராஜ், சரண், பத்திரிநாராயணன், முகமது அலி ஆகியோர் ஆதிலட்சுமியைத்தாக்கி கொலை செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையின் அடிப்படையில் பிரபு, சத்தியா, கூலிப்படையைச் சேர்ந்த ஆனஸ்ட்ராஜ், சரண், பத்திரிநாராயணன், முகமதுஅலி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மகிளா கோர்ட்டில் விசாரணை நடைப்பெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கே.சுஜாதா நேற்று (20-05-24) மாலை தீர்ப்பளித்தார். அந்தத்தீர்ப்பில் பிரபு, ஆனஸ்ட்ராஜ், சரண், பத்திரிநாராயணன், முகமது அலி ஆகியோருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதமும், சத்தியாவிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்தத்தண்டனையைத்தனித்தனியாக அனுபவிக்க உத்தரவிட்டார்.