Skip to main content

கை தட்டினால் போதுமா... மருத்துவம் பார்த்த டாக்டருக்கு இந்த நிலைமையா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 23/04/2020 | Edited on 23/04/2020


கரோனா தொற்றால் உயிரிழக்கும் மருத்துவர்களைப் புதைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் எனச் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அறிவிக்கும் அளவுக்கு நிலைமைகள் மோசமாயின.

வானகரம் அப்போலோவில் கரோனா தொற்றால் உயிரிழந்த டாக்டர் சைமன் ஹெர்குளஸ், டி.பி.சத்திரம் பகுதியிலுள்ள கீழ்ப்பாக்கம் கல்லறையில் புதைக்க ஏற்பாடு செய்தபோது, அப்பகுதியினர் திரண்டு விரட்டியடிக்க, அண்ணாநகர் பகுதியிலுள்ள வேலங்காடு இடுகாட்டில் புதைக்கப்போனபோது அங்கும் ஆம்புலன்ஸ் அடித்து உடைத்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர்கள், டாக்டர்கள்மீது கடுமையான தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்திருக்கிறது.
 

 

 

doctor


இதற்கு முன் இதே வானகரம் அப்போலோவில் உயிரிழந்த ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவரின் உடலைப் புதைக்கச்சென்ற போதும் இதேபோன்ற நிலைமை ஏற்பட்டது. கோவையைச் சேர்ந்த அரசு மருத்துவர் ஜெயமோகன் இறந்தபோதும் புதைக்க எதிர்ப்பு கிளம்பியதாகத் தகவல் பரவியது.

கரோனாவுக்கு எதிராகப் போராடி மக்களின் உயிரைக்காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் டாக்டர்கள். ஆனால், சிகிச்சையின்போது நோயாளிகளிடமிருந்து தொற்றும் கரோனாவால் உயிரிழக்கும் டாக்டர்களின் உடலை ‘இங்கு புதைக்கக்கூடாது’ என்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்துவது அறியாமையா? அரசின் அலட்சியமா? என்று விசாரிக்க ஆரம்பித்தோம்…

நம்மிடம் பேசிய பொதுநல ஆர்வலர் கோபால கிருஷ்ணனோ, "ஊரடங்கில் பெரும்பாலும் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் பொதுமக்களுக்கு இந்தக் சுடுகாட்டில் தான் புதைக்கப் போகிறார்கள் என்கிற தகவல் முன்கூட்டியே எப்படித் தெரியும்? காரணம், சுடுகாட்டில் பணியாற்றும் மாநகராட்சி பணியாளர்கள் மூலம்தான் முன்கூட்டியே தகவல் பரப்பப்பட்டு பிரச்சனையாக வெடிக்கிறது. டாக்டர்களைப் புதைக்க எதிர்ப்பு தெரிவிப்பது மாபெரும் குற்றம் என்றாலும் அதனால், எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்ற மருத்துவ ரீதியான தகவல்களை சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் டாக்டர்கள் மூலம் விழிப்புணர்வூட்டியிருக்கவேண்டும்.

 

http://onelink.to/nknapp


 

ambulance



மயானத்தில் பணியாற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்குச் சரியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியிருக்கவேண்டும். 144 தடையுத்தரவு போடப்பட்ட சூழலில் 4 பேர் ஒன்று கூடினாலே விரட்டும் போலீஸ் 50 பேர், 60 பேர் கூடும் அளவுக்கு எப்படி அலட்சியமாக இருந்தது? அம்பத்தூரில் ஏற்கனவே இப்படியொரு சம்பவம் நடந்தபிறகும்கூட கீழ்ப்பாக்கத்தில் டாக்டரின் உடலை ஏற்றிவந்த ஆம்புலன்ஸ் அடித்து உடைக்கும் அளவுக்கு விட்டது மாநகராட்சி கமிஷனர் மற்றும் காவல்துறையின் மெத்தனப்போக்கையே காட்டுகிறது'' என்கிறார் கோபத்துடன்.

 

issues



கரோனா பாதிக்கப்பட்டவரைப் புதைக்கும் போதோ எரிக்கும்போதோ கரோனா தொற்று ஏற்படுமா? என்று இந்தியத் தொற்றுநோய் மருத்துவர்கள் கூட்டமைப்பின் (Clinical Infectious Diseases Society) முன்னாள் செயலாளரும் தற்போதைய கவர்னிங் கவுன்சில் உறுப்பினருமான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமிநாதனிடம் நாம் கேட்டபோது, "கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போனவரை எப்படிப் புதைக்கவேண்டும் என்று ஐ.சி.எம்.ஆர். எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளது. அதன்படி, அடக்கம் செய்யும்போது யாருக்கும் தொற்றாது. மனித உடம்பில் 70 சதவீதம் தண்ணீர் இருப்பதால் கரோனா தொற்றுள்ளவர் இறந்தாலும் அவரது உடம்பிற்குள் கரோனா வைரஸ் சுமார் 24 மணி நேரத்திற்கு இருப்பதற்கான வாய்ப்புள்ளது. அதனால், கரோனா தொற்று ஏற்பட்டு இறந்தவரின் உடலிலிருந்து வெளியாகும் கண்ணீர், இரத்தம் உள்ளிட்ட திரவங்களை தொடுவதன்மூலம் பரவலாம். அதனால்தான், உடலை நேரடியாகத் தொட்டு அடக்கம் செய்யக்கூடாது.

உடல் முழுவதும் நன்றாக பேக் செய்திருக்கவேண்டும். உறவினர்கள் முகம் பார்க்க மட்டும் பாலித்தீன் போன்ற கண்ணுக்குத் தெரியும்படி பொருளால் மூடிவிட வேண்டும். சுற்றி, சோடியம் ஹைப்போ குளோரைடு தெளிக்கவேண்டும். புதைப்பதாக இருந்தால் வழக்கத்தைவிட ஆழமாகக் குழிதோண்டி புதைக்கவேண்டும் என்றெல்லாம் வழிமுறைகளை வகுத்திருக்கிறார்கள். ஆனால், எரிக்கப்படும் அல்லது புதைக்கப்படும் இடங்களில் அக்கம்பக்கத்தில் குடியிருக்கும் மக்களுக்கு இதன்மூலம் கரோனா பரவாது என்பதால் அச்சப் படத்தேவையில்லை'' என்கிறார் அவர்.

மருத்துவக்கல்வி முன்னாள் இயக்குனரும் பிரபல மருத்துவருமான டாக்டர் கலாநிதியின் கருத்து இன்னும் சிந்திக்க வைக்கிறது, கரோனா தொற்றக்கூடிய 20 சதவீதம் பேருக்குதான் அறிகுறிகள் தெரியும். அதில், 3 சதவீதம்பேர் சிகிச்சை பலனின்றி இறந்துபோகிறார்கள். மற்றவர்கள், டாக்டர்களின் கடினப்போராட்டத்தால் குணமடைந்து விடுகிறார்கள். ஆனால், மீதமுள்ள கரோனா தொற்றுள்ள 80 சதவீதம் பேருக்கு கரோனா இருப்பதே தெரியாது. அவர்கள், மூலம் கரோனா பரவிக்கொண்டுதான் இருக்கும். அப்படியிருக்க, ஐ.சி.எம்.ஆர். விதிப்படி மிகக் கவனமாக அடக்கம் செய்யப்படும் கரோனா தொற்றிய டாக்டர்கள் அல்லது நோயாளிகள் மூலம் கரோனா தொற்றும் என்று நினைத்து எதிர்ப்பு தெரிவிப்பது என்ன நியாயம்? துபாய்க்குச் சென்று பப்புல குடிச்சிட்டு இறந்துபோன நடிகைக்கு அரசு மரியாதையோடு அடக்கம் செய்கிறார்கள். ஆனால், மக்களைக் காப்பாற்ற, தங்களது வீட்டுக்குச் சென்று பிள்ளைகளைக்கூட பார்க்காமல் தனிமைப் படுத்திக்கொண்டு கரோனாவிடம் போராடி அதன்மூலம் இறக்கும் டாக்டர்கள், செவிலியர்கள், டெக்னீஷியன்கள், அடிப்படை சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினருக்கு ராணுவ மரியாதையுடன் கொடுக்க வேண்டுமல்லவா?'' என்று கேள்வி எழுப்புகிறார்.
 

doctors

பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் கண்ணன் நம்மிடம், “கரோனா தொற்றால் ஒருவர் இறந்துபோனதுமே அவர் மூலம் அக்கம்பக்கத்திலுள்ள மக்களுக்கு கரோனா பரவாது. உயிரோடு இருப்பவர்கள் மூலமே கரோனா அதிகமாக பரவுகிறது. வைரஸ் கிருமியிலிருந்து சுமார் 10 சதவீதம்வரை பாதுகாக்கும் துணி மாஸ்க், 50 சதவீதம் பாதுகாக்கும் டூ லேயர் மாஸ்க், 85 சதவீதம்வரை பாதுகாக்கும் த்ரி லேயர் மாஸ்க், 95 சதவீதம் பாதுகாக்கும் என்-95 மாஸ்க், 99 சதவீதம் பாதுகாக்கும் என் -99 மாஸ்க் என அணிந்து தனிமனித இடைவெளியை பின்பற்றி வெளியில் சென்றால் சோப்பு போட்டு கழுவி சுத்தமாக தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்று நோயாளிகளைப் பார்க்காமல் இருந்திருந்தால் டாக்டர்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது. நோயாளிகள் மூலம் கரோனா தொற்றிய டாக்டரின் உடலைப் புதைக்கச் சென்றபோது ஐம்பது அறுபது கற்களால் கட்டைகளாலும் தாக்கி விரட்டினார்கள். அப்படியே, போட்டுவிட்டு ஓடிவந்தோம். இந்த, நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது'' என்று கண்கலங்கி வேதனையோடு ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.


யார் இந்த டாக்டர் சைமன் ஹெர்குளிஸ்?

பிரபல நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் சைமன் ஹெர்குளஸ கடந்த 19-ம் தேதி புதைக்கச்சென்ற மருத்துவர்களில் ஒருவரான பிரதீப் நம்மிடம் அவர்குறித்து பேசினார். நாகர்கோயில் வடக்கன்குளத்தைச் சேர்ந்த சைமன் செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., அரசு ஸ்டேன்லி மருத்துவக்கல்லூரியில் எம்.எஸ். அறுவை சிகிச்சை, செண்ட்ரலிலுள்ள எம்.எம்.சி.யில் எம்.சி.ஹெச் எனப்படும் நரம்பியல் படிப்பை முடித்து, லண்டனின் எஃப்.ஆர்.சி.எஸ். படிப்பையும் முடித்தவர். தண்டுவட அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தமிழகம் மட்டுமல்ல 30 நாடுகளிலுள்ள நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தவர். பணமில்லாதவர்களுக்கு குறைந்த செலவிலும் சிலநேரங்களில் இலவசமாகவும் சிகிச்சை அளித்தவர் என்கிறார் இவரது மருத்துவ நண்பர்.

56 வயது. உடல்பருமன், சர்க்கரைநோய், பணி நிமித்தமான டென்ஷன் என எப்போதுமே பரபரப்பாக இருந்தவர், திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டு மூச்சுத்திணறலுக்கு ஆளானதால் கடந்த மார்ச்-29 ந்தேதி சென்னை கிரீம்ஸ்ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போதுதான், கரோனா தொற்றியது தெரியவந்தது. இவரது, மகள் எம்.டி. படித்த டாக்டர். தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்துவருகிறார். அவருக்கு, அறிகுறியே இல்லாமல் கரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வானகரம் அப்பல்லோவில் சேர்க்கப்பட்டுள்ளார். அதாவது, டாக்டர் சைமனின் மகளுக்கு ஏதோ ஒரு நோயாளியின் மூலம் தொற்று ஏற்பட்டு பலவீனமாக இருந்த டாக்டர் சைமனுக்குத் தொற்றி உயிரிழப்பை ஏற்படுத்தியதாகச் சந்தேகிக்கிறார்கள் மருத்துவர்கள். இருப்பதற்கு பதிலாகக் கரோனாவால் இறந்தவர் மூலம் பரவும் என்று எதிர்ப்பு தெரிவிப்பது அறியாமை''’என்கிறார்.
 

http://onelink.to/nknapp


தாக்குதல் நடத்தியதால் கைது செய்யப்பட்டவர்களோ, “புதைக்கப்போவது டாக்டர் என்று தெரியாது. ஜே.சி.பி. எந்திரம் மூலம் குழிதோண்டியதால் ஒட்டுமொத்த கரோனாவால் இறந்து போனவர்களையும் இரவு நேரத்தில் இங்கு வந்து புதைக்கிறார்கள் என்று நினைத்து தாக்கிவிட்டோம்'' என்று கூறியிருக்கிறார்கள். அரசும், இரு டாக்டர்களின் உயிர் பலியான அப்போலோ மருத்துவமனை நிர்வாகமும் அலட்சியம் காட்டியுள்ளன. முன்கூட்டியே, விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தால் இப்படி நடந்ததைத் தடுத்திருக்கலாம்.


 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.