Skip to main content

உலகின் முதல் குடியாட்சித் தலைவர்கள்!

Published on 17/08/2017 | Edited on 14/09/2017



3. உலகின் முதல் குடியாட்சித் தலைவர்கள்!


ண்மையில் களப்பிரர்கள் யார் என்று பார்க்கப் போனால், பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. இந்தக் கருத்துகளில் பல யூகமானவையாகவும், மகாவம்சம் போன்ற புராணக் கதைகளை அடிப்படையாக கொண்டவையாகவும் இருக்கின்றன.

களப்பிரர் என்பவரும் தமிழர்கள்தான் என்றும், அவர்கள் இருமொழி பேசிய தமிழர்கள் என்றும், இன்றைய ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட விந்தியமலை வரையில் பரவியிருந்தவர்கள் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

கிமு முதல் நூற்றாண்டிலேயே பாண்டிய. சோழ மன்னர்களிடம் ஆரியர்கள் செல்வாக்கு செலுத்தத் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அவர்களுடைய வர்ணாசிரமக் கோட்பாடுகள் தமிழ் சமூகத்தில் நுழையத் தொடங்கிவிட்டதாக தெரிகிறது.

பாண்டிய சோழ மன்னர்கள் ஆரியர்கள் சொல்பேச்சைக் கேட்டு சுகபோகங்களில் திளைக்கத் தொடங்கியதாகவும்,  ஆரியர்கள் சொல்வதை வேதவாக்காக கொண்டு செயல்படத் தொடங்கினர்.

ஒரு காலகட்டத்தில் ஆரியர்களுக்கு நிலங்களை தானமாகக் கொடுக்கத் தொடங்கியதாகவும், அதனால் நிலத்தில் விவசாயம் செய்த குடியானவர்கள் மன்னர்களுக்கு எதிரான மனநிலைக்குச் சென்றதாகவும், வறுமையில் சிக்கித் தவித்ததாகவும் தெரியவருகிறது.

தொல்காப்பியர் காலத்திலிருந்தே, தமிழகத்தில் ஆரியர்களின் செல்வாக்கு மிகுந்திருந்தது என்பது ‘ஓதலுந் தூதும் உயர்ந்தோர் மேன’4 என்னும் தொல்காப்பிய நூற்பா உட்பட மேலும் பல இடங்களில் காண முடிவதாக இலக்கிய ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அதன் பிறகு இயற்றப்பட்ட சங்க இலக்கியங்களில் போரில் பார்ப்பன மக்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்த செய்தியைப் பின்வரும் புறநானூற்று வரிகள் மூலம் அறியமுடிவதாக அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

“ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

பெண்டீரும் பிணியுடை யீரும்”5

சங்க இலக்கியத்தில் இராமாயண, பாரதக் கதைகள் பல பாடல்களில் இடம்பெற்றிருக்கின்றன. தமிழ் இலக்கியங்களில் பிராமணியத் தாக்கம் இருப்பதையே இவை உணர்த்துகின்றன. 

ஆனால், களப்பிரர்கள் தமிழக பகுதிகளுக்குள் நுழைந்த காலத்தில் பிராமணியத்திற்கு எதிராகத் தோன்றிய பௌத்த, சமண சமயங்களின் செல்வாக்கு வளரத் தொடங்கியதைக் காணமுடிகிறது.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவத்தை பின்பற்றியே அற இலக்கியங்கள் இயற்றப்பட்டன. எனவே, ஏற்கெனவே தமிழ் இலக்கியங்களை கபளீகரம் செய்து கொண்டிருந்த பிராமணியமும் சைவமும் ஆட்டம் காணத் தொடங்கின.

அதுமட்டுமின்றி தமிழ் மன்னர்களைத் தம் ஆளுமையின் கீழ் வைத்துக் கொண்டு சுகவாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தவர்களின் வாழ்க்கை வறுமையில் சிக்கியது.

பாண்டிய அரசர்கள் பிராமணர்களுக்கு கிராமங்களைத் தானமாகக் கொடுத்திருந்தனர். அப்படி தானமாகப் பெற்ற நிலங்களையும் கிராமங்களையும் களப்பிரர் ஆட்சியாளர்கள் திரும்ப எடுத்துக் கொண்டனர் என்ற செய்தியை வேள்விக்குடிச் செப்பேடு வழியாக அறிய முடிகிறது.

இதன்மூலம் களப்பிரர்கள் குடிமக்களின் கருத்தறிந்து, குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கிற ஒரு ஆட்சியை நடத்தியிருக்கிறார்கள் என்று யூகிக்க முடிகிறது. அப்படிப்பட்ட தலைவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளை ஆட்சி செய்ததாக மகாவம்சம் என்ற நூலை அடிப்படையாக கொண்டு அறிய முடிகிறது.

வேள்விக்குடி செப்பேடுகள் என்னதான் சொல்கின்றன?

‘கொல்யானை பலவோட்டிக் கூடாமன்னர் குழாந் தவிர்த்த பல்யானை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டியாதிராசன் நாகமா மலர்ச் சோலை நளிர்சினை மிசை வண்டலம்பும் பாகனூர்க் கூற்றமென்னும் பழனக்கிடக்கை நீர்நாட்டுச் சொற்கண்ணாளர் சொலப்பட்ட ச்ருதி மார்க்கம் பிழையாத கொற்கை கிழானற் கொற்றன் கொண்ட வேள்வி அந்தணாளர் முன்பு கேட்க என்றெடுத்துரைத்து வேள்விச் சாலை முன்பு நின்று வேள்விக்குடி என்ற பதியைச் சீரோடு திருவளரச் செய்தார். வேந்தனப் பொழுதேய் நீரோடட்டிக் கொடுத்தமையால் நீடுபுத்தி துய்த்த பின்னளவரிய ஆதிராஜரை அகல நீக்கி அகலிடத்தைக் களப்ரனென்னும் கலியரைகன் கைக்கொண்டதனை இறக்கிய பின்....”6 எனவும்,

‘அங்கொருநாண் மாடமாதிற் கூடற்பாடு நின்றவர் ஆக்ரோதிக்கக் கொற்றனேய் மற்றவரைத் தெற்றென நன்க கூவி ‘என்னேய் நுங்குறை’ என்று முன்னாகப் பணித்தருள ‘மேனாணின் குரவராற் பான்முறையின் வழுவாமை மாகந்தோய் மலர்ச் சோலைப் பாகனூர்க் கூற்றத்துப்படுவது, ஆள்வ தானை அடல் வேந்தேய் வேள்விக்குடி என்னும் பெயர் உடையது ஒல்காத வேற்றானை ஓடோத வேலி உடன் காத்த பல்யாக முதுகுடுமிப் பெரு வழுதி என்னும் பரமேச்வரனால் வேள்விக் குடி என்னப்பட்டது.

கேள்வியாற்றரப் பட்டதனைத் துளக்கமில்லாக் கடற்றானையாய்க் களப்பரரா லிறக்கப்பட்டது’ என்று நின்றவன் விஞ்ஞாப்யஞ் செய்ய...”7

வேள்விக்குடி செப்பேடுகளில் இப்படித்தான் கூறப்பட்டிருக்கிறது

களப்பிரர் காலத்தில்தான் வச்சிரநந்தி சங்கம் வைத்துச் சமணம் வளர்த்திருக்கிறார். இந்தக் காலகட்டத்தில்தான், சமணம் வளரத் தொடங்கியது. சைவமும் வைணவமும் வீழ்ச்சியடையத் தொடங்கின. 

இலக்கிய வரலாறு எழுதியவர்களில் பெரும்பாலோர் பிராமணியத்தில் ஊறிய சைவர்கள் என்பதால், தமிழ் இலக்கியத்தில் களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என்று எழுதினார்கள்.

“சங்கம் மருவிய காலம் களப்பிரர் ஆண்டகாலமாகக் கருதப்பட்டு, அந்த காலம் இருண்ட காலமாகப் பெரும்பான்மையான வரலாற்று ஆசிரியர்களால் புறந்தள்ளப்பட்டது. இருண்டகாலம் என்று சொல்லப்பட்ட அந்த காலம் கி.பி.3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முடிய சற்றேறக்குறைய 325 ஆண்டுகாலம் ஆகும். 

களப்பிரர்கள் ஆட்சி செய்த இந்தக் காலகட்டத்தில், அவர்கள் சமண சமயத்தை ஆதரித்துப் பரப்பியதால் சைவ சமயத்தைச் சார்ந்த வரலாற்று ஆசிரியர்கள் களப்பிரர்களை வெறுத்து ஒதுக்கியிருக்கலாம். 

ஆனால், களப்பிரர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே பகைமை இல்லை என மயிலை. சீனி. வேங்கடசாமி கூறுகிறார்.

‘களப்பிரர் பிராமணர்களின் பகைவர் என்று சிலர் எழுதியுள்ளனர். பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி கொற்கை கிழான் நற்கொற்றன் என்னும் பிராமணனுக்கு முற்காலத்தில் வேள்விக்குடி என்னும் ஊரைத் தானமாகக் கொடுத்தான். அந்தக் கிராமத்தை அவனுடைய குடும்பத்தார் பரம்பரையாக அனுபவித்து வந்தனர். அதை, களப்பிரர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் பறித்துக் கொண்டனர்’ என்னும் சாசனச் சான்றை ஆதாரமாகக் காட்டுகின்றனர்...

களப்பிரர், வேள்விக்குடி தானத்தை பறித்துக் கொண்டனர் என்று செப்பேடு கூறுவது உண்மைதான். ஆனால், அதன் காரணம் பார்ப்பனர் மாட்டுப் பகையன்று. அதற்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. களப்பிரர் பிராமணருக்குப் பகைவர் அல்லர். களப்பிரர் பிராமணருக்குத் தானம் கொடுத்து ஆதரித்ததை ‘அகலிடமும் அமருலகும்’ எனத் தொடங்குகிற செய்யுள் கூறுகிறது.

“பொருகடல் வளாகம் ஒருகுடை நிழற்றி

இருபிறப் பாளர்க் கிருநிதி ஈந்து

மனமகிழ்ந்து

அருள்புரிபெரும் அச்சுதர் கோவே.”

என்று அந்தச் செய்யுள் கூறுகிறது. இச்செய்யுளில் பிராமணருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ள இருநிதி என்பது குபேரனது நவநிதிகளுள் சொல்லப் படுகின்ற சங்கநிதி, பதுமநிதி என்பவையாகும்.

ஆனால், களப்பிரர் வேண்டுமானால் ஆரியரை வெறுக்காமல் இருந்திருக்கலாம், ஆரியர் களப்பிரரை வெறுக்காமல் இருந்திருக்க முடியாது. ஏனெனில் தானமாகப் பெற்ற பெரிய ஊர்களை இழந்த பிராமணர்களுக்கு களப்பிரர்கள் கொடுத்த நிதிகள் வெறும் பிச்சைதான் என்று கூறப்படுகிறது. 

ஏராளமான அறநூல்கள் தோன்றிய களப்பிரர்கள் காலத்தை இருண்ட காலம் என்பது களப்பிரர் மீதான ஆரியரின் வெறுப்புணர்வே அடிப்படைக் காரணமாக கருதப்படுகிறது. இத்தகைய கருத்து அர்த்தமற்றது என்றும், வரலாற்று இருட்டடிப்பு என்றும் தற்கால வரலாற்று ஆசிரியர்கள் ஆய்வு செய்து கூறுகிறார்கள்.

களப்பிரர்களை கோன் பாண்யன் துணையோடு ஒழித்த பிறகு, பார்ப்பனர்கள் தங்களுடைய மதத்திணிப்புப் பாதையை வேறு வழியில் கையாண்டனர். சாதாரண மக்களுக்கான இலக்கியங்கள் என்ற பேரில் பக்தி இலக்கியங்களை இயற்றத் தொடங்கினார்கள்.

களப்பிரர் காலத்திற்கு பிறகுதான் சிறு குறு முடியாட்சிகளுக்கும், சாதி அடிப்படையிலான ஆட்சிப் பகுதிகளும் உருவாகியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

(தமிழ் மன்னர்களின் காட்டிக்கொடுக்கும் அரசியலை திங்கள் கிழமை பார்க்கலாம்)

-ஆதனூர் சோழன்


(முந்தைய இரண்டு பகுதிகளிலும் நண்பர்கள் இட்டிருந்து பின்னூட்டங்களுக்கான சுருக்கமான பதிலாக இதைக் கொள்ளலாம்...

வடவேங்கடம் என்பது இன்றைய திருப்பதி என்பது சரியல்ல. விந்தியமலை என்பதே ஆய்வாளர்களின் கருத்து. தமிழர் நிலம் அல்லது திராவிடர் நிலம் என்பது விந்திய மலைவரை மட்டுமல்ல, சிந்து சமவெளி வரை பரவியிருந்தது என்பதே உண்மை. 

சங்ககால மூவேந்தர் மக்கள் நலன் மறந்து ஆரியர் வழிமுறைகளைக் கடைப்பிடித்து ஆடம்பர சுகங்களில் மூழ்கிய காலத்தில் மக்கள் மத்தியில் உருவான புரட்சி தமிழ் இலக்கியத்தை மக்கள் இலக்கியமாக மாற்றியது. இவர்களுடைய காலகட்டத்தில் ஆரியரால் புகுத்தப்பட்ட கடவுள் கதைகள் புறந்தள்ளப்பட்டு, நீதி இலக்கியங்கள் தோன்றின.

சங்க காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பதினெண் மேல்கணக்கு நூல்கள் என்றும், சங்கம் மருவிய காலம் அல்லது களப்பிரர் காலம் என்று அழைக்கப்பட்ட காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பதினெண்கீழ் கணக்கு நூல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

பதினெண் மேல்கணக்கு நூல்கள் என்று நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, திரு முருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும் பாணாற்றுப் படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, குறிஞ்சிப்பாட்டு, நெடுநல் வாடை, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய 18 நூல்களை அழைக்கிறார்கள்.

சங்கம் மருவிய காலத்தில் உருவான பதினெண் கீழ்கணக்கு நூல்கள் என நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகிய 18 நூல்கள் அழைக்கப்படுகின்றன.

இவற்றில், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திருக்குறள், திரிகடுகம், ஏலாதி, பழமொழி நானூறு, ஆசாரக்கோவை, சிறுபஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி, இன்னிலை ஆகிய 12 நூல்களும் நீதிநூல்கள் என அழைக்கப்படுகின்றன.

களப்பிரர் காலத்தில் உருவான நூல்கள் அனைத்தும் மக்களுக்கு நல் வாழ்க்கையை கற்பிக்கின்றன என்பதிலிருந்து அந்த காலத்தில் மக்களுக்கான அரசுகள் செயல்பட்டதாக கொள்ள முடியும்.)

2. களப்பிரர்கள் காலம் இருண்ட காலமா? 

1. இன்றைய இளைஞர்களும் அரசியலும்!
                                               

 பகுதி 10
 பகுதி 9
 பகுதி 8
 பகுதி 7
 பகுதி 6
 பகுதி 5
 பகுதி 4
 பகுதி 3
 பகுதி 2 பகுதி 1

சார்ந்த செய்திகள்