ADVERTISEMENT

விவசாயிகளை கார்ப்பரேட்டுக்கு அடிமையாக்கும் அரசு – 8 வழிச்சாலை பயண தொடர்ச்சி

11:52 AM Jul 03, 2018 | raja@nakkheeran.in

திருவண்ணாமலையை சுற்றியுள்ள வேலூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் மாவட்டங்கள் தொழில்துறையில் வளர்ந்த மாவட்டங்களாக உள்ளன. தொழில் துறையில் பின்தங்கிய மாவட்டம் திருவண்ணாமலை. காஞ்சிபுரத்துக்கு அருகில் திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் உள்ள செய்யார் தொழிற்பேட்டை 7 ஆண்டுகளுக்கு முன்பு வருகை தந்தபின்பே இதுவும் தொழிற்சாலைகள் உள்ள மாவட்டம் தான் என்கிற பட்டியலில் இடம் பிடித்தது. அந்த தொழிற்பேட்டை வளர்ந்ததா என்றால் தவழ்கிறது என்பதே உண்மை. தொழில்துறையில் மட்டும்மல்ல கல்வியிலும் பின்தங்கிய மாவட்டம் திருவண்ணாமலை. 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பார்க்கும்போது அது அப்பட்டமாக தெரியும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இப்படி கல்வித்துறை, தொழிற்துறையில் பின்தங்கியிருந்தாலும் விவசாயத்தில் முன்னணியில் உள்ள மாவட்டம்மிது. விவசாய பொருட்கள் உற்பத்தியில் முதல் 3 இடங்களில் உள்ளது இந்தமாவட்டம். அப்படி விவசாயத்தில் முன்னணியில் உள்ள இந்த மாவட்டத்தின் விவசாயத்தை அழிக்கும் நோக்கில் தான் வருகிறது 8 வழிச்சாலை பாதை.

விவசாய நிலத்தின் மீது புதியதாக அமைக்கப்படும் இந்த சாலை இந்த மாவட்டத்தில் மட்டும் 127 கி.மீ பயணமாகிறது. இந்த சாலை அமைக்கப்பட்டால் இந்த திட்டத்தின்படி பாதிக்கப்படும் மாவட்டங்களில் திருவண்ணாமலை முதன்மை மாவட்டமாகும்.



திருவண்ணாமலை மாவட்டத்தின் தென்மேற்கு பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் உள்ள நீப்பத்துறையில் இருந்து காஞ்சிபுரம் மாவட்ட எல்லை தொடங்கும் தேத்தறை கிராமம் வரை சுமார் 83 கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன. சாலையால் நேரடியாக பாதிக்கப்படும் விவசாய நிலங்கள் சுமார் 3 ஆயிரம் ஏக்கர். மறைமுகமாக பாதிக்கப்படுவது 2 ஆயிரம் ஏக்கர் என சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட போகின்றன.

அதோடு, இந்த மாவட்டத்தில் சராசரியாக இருக்க வேண்டிய வனத்தின் அளவு குறைவு. அதிலும் குறைவு ஏற்படும் அளவுக்கு 3 பாதுகாக்கப்பட்ட வனத்தின் வழியாக சாலை போடப்படவுள்ளன. இதனால் மழை அளவு பாதிக்கப்படும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். மழை குறைந்தால் விவசாயம் பாதிக்கப்படும். ஏற்கனவே சாலையால் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலையில், மழையும் பொய்த்தால் விவசாயம் முற்றிலும் அழிந்து தொழில்துறை, கல்வியைப்போல் விவசாயத்திலும் திருவண்ணாமலை மாவட்டம் பின்தங்க வேண்டிய நிலைக்கு அரசாங்கமே வழிவகுக்கிறது என்கிறார்கள்.


இந்த திட்டத்தை மண்மலை, சி.நம்மியந்தல், மோப்பறை, தென்பள்ளிப்பட்டு போன்ற பகுதிகளில் தான் எதிர்க்கிறார்கள். காவல்துறையின் மிரட்டலால் மற்ற பகுதிகளில் எதிர்ப்பை கூட காட்ட முடியாமல் தங்கள் நிலத்தில் தங்கள் அனுமதியே இல்லாமல் அளவீடு கற்கள் நடுவதை அழுகையோடு வேடிக்கை மட்டும்மே பார்க்கிறார்கள்.

இந்த சாலைக்காக விவசாய நிலங்கள் அழிப்படுவதால் நேரடியாக பாதிக்கப்படும் விவசாயிகளின் எண்ணிக்கை மிக குறைவு. மறைமுகமாக பாதிக்கப்படும் விவசாய கூலி மக்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம் என்கிறார்கள் அழகேசன் போன்ற விவசாயிகள்.

தொழிற்துறை மட்டும்மல்ல விவசாயமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலை தரும் தொழில் தான். தொழில்துறையில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளி, அந்த நிறுவனத்தின் உரிமையாளர், மேலாளர் போன்றோர்க்கு பயந்து, பயந்து அடிமையாக இருக்க வேண்டும். விவசாயத்தை பொருத்தவரை நில உரிமையாளர்களை விட விவசாய கூலி மக்கள் தான் முதலாளிகள். அந்த சுதந்திரத்தை வழங்குவது இந்த விவசாய தொழில் தான் விவசாயத்தை அழிப்பதன் மூலம் விவசாய கூலிகள் தொழில் நிறுவனங்களுக்கு தான் வேலைக்கு போய் அங்க அடிமையாக இருக்க வைக்கவே அரசாங்கம் முயல்கிறது என்றார் போளுரில் நாம் சந்தித்த பாபு என்பவர்.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மக்களிடம் எழுந்ததை விட திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளிடம் அதிகளவு எழுச்சி ஏற்பட்டுயிருக்க வேண்டும். ஆனால் அங்கு ஏற்பட்ட எழுச்சியோடு ஒப்பிடும்போது 30 சதவிதம் அளவுக்கு கூட எதிர்ப்புக்கிடையாது. அதற்கு காரணம் என்னவென விசாரித்தபோது, காவல்துறையின் அடக்குமுறை தான் அதற்கு காரணம்.


கடந்த மார்ச் மாதம்மே விவசாயிகள் இந்த சாலைக்கு திருவண்ணாமலை மாவட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அந்த நேரத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு போராட்ட களத்துக்கு வரவே மக்களை யோசிக்கவைத்தது. மக்களின் அச்சத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்த அரசாங்கம், 8 வழிச்சாலைக்கான போராட்ட குரல்கள் எங்கு எழுப்பினாலும் காவல்துறை மூலமாக அடக்கியது. கைது, சிறை போன்றவை விவசாய மக்களை பயம்கொள்ள வைத்தது. இந்த மாவட்டத்தில் எதிர்ப்பு குரல் வந்த கிராம மக்களை உளவியல் ரீதியாக மிரட்ட 200 போலிஸ்சை கொண்டும் போய் குவிப்பதன் மூலம் அவர்களின் எதிர்ப்பு வெளிப்படாமல் போய்விடுவதை அறிய முடிந்தது.



இதை பயன்படுத்திக்கொள்ளும் அதிகாரிகள் வேகவேகமாக சாலைக்கான இடத்தை அளந்து கற்களை நட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். மீறி எதிர்ப்பவர்களுக்கு பல வித ஆசையும், விவசாயிகள் ஒன்றாக திரளாமல் பார்த்துக்கொண்டு காரியத்தை கச்சிதமாக நடத்துகிறது அரசாங்கம்.

தொழில்துறையில் வளர்ந்த, வளரும் மாவட்டமான காஞ்சிபுரத்தில் உத்திரமேரூர் வழியாக படப்பை வரை இந்த 8 வழிச்சாலை 59 கி.மீ பயணமாகிறது. காஞ்சிபுரத்தில் விவசாயம் ஓரளவு நடைபெறும் பகுதிகள் உத்திரமேரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். அங்கு விவசாயத்தை அழிப்பதன் மூலம் காஞ்சிபுரத்தை முழு தொழிற்துறை மாவட்டமாக மாற்றுகிறது அரசாங்கம்.

தொடரும்…….

அடுத்த பதிவில்…..

இதனை பசுமை வழிச்சாலை என குறிப்பிடுவது சரியா?, இந்த சாலை உண்மையில் எதற்காக அமைக்கப்படுகிறது?, அரசாங்கம் குறிப்பிடுவது போல சேலத்தில் இருந்து 3 மணி நேரத்தில் சென்னை போக முடியுமா?. மாவட்ட ஆட்சியர்கள் சொல்வதைப்போல பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு 3 மடங்கு கிடைக்குமா? திட்ட அறிக்கை சொல்வது என்ன ?.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT