Skip to main content

ராமர் கோவில் குடமுழுக்கு; எல்.இ.டி திரை அகற்றத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
Nirmala Sitharaman condemns removal of LED screen from Ram Temple inauguration live

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ரூ. 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. 

தென் மாநிலமான கர்நாடகா, தெலுங்கானாவிலிருந்து வரவழைக்கப்பட்ட கிரானைட் கற்களும், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்ட இளஞ்சிவப்பு மணல் கோவிலின் அடித்தள அமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கோவிலின் கட்டுமானத்தில் துளி அளவு கூட இரும்பு பயன்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதற்கு காரணமாக, பொதுவாக இரும்பின் ஆயுட்காலம் 90 ஆண்டுகள் மட்டுமே; ஆனால் ராமர் கோவில் 2000 ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நிற்கவும் எந்த வித இயற்கை பேரிடர்களிலும் பாதிப்பு ஏற்படாதவாறு உருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கட்டுமானத்தில் ஈடுபட்ட வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

மேலும் கட்டுமானத்தில் சிமெண்ட் மற்றும் சுண்ணாம்பு பயன்படுத்தாமல் கற்களோடு கற்களை இணைக்கும் இண்டர்லாக் முறையில் கட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 3 தளங்கள், 161 அடி உயர கோபுரத்துடன் கட்ட திட்டமிடப்பட்ட ராமர் கோவிலின் 70 சதவீத கட்டுமான பணிகள் முடிந்து விட்டன. இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெறவுள்ளது. பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் மதியம் 12.05 மணி முதல் 12.55 மணிக்குள் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் என 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்கள் இந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்கவுள்ளனர். 

Nirmala Sitharaman condemns removal of LED screen from Ram Temple inauguration live

இந்த நிலையில், நாடு முழுவதும் கோவில்கள் உள்ளிட்ட இடங்களில் ராமர் கோவில் குடமுழுக்கு நிகழ்வுகள் எல்.இ.டி திரையில் நேரலை செய்யப்படவுள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் இன்று காலை முதல் ராமர் கோவில் குடமுழுக்கு நிகழ்வு எல்.இ.டி திரையில் நேரலை செய்யப்படுவதாக இருந்தது. மேலும் இந்த நிகழ்வை மத்திய நிதியமைச்சர் சீதாராமன் தலைமையில், பொதுமக்களுடன் சேர்ந்து பார்ப்பதற்கான ஏற்பாடுகள் பாஜகவினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரின் அனுமதி பெறாமல் கோவிலுக்குள்ளே எல்.இ.டி திரை அமைத்தற்காக காவல்துறையினர் திரையை அகற்றி, நேரலைக்கு அனுமதி மறுத்துள்ளனர். இதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு நிகழ்வினை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட ராமர் கோயில்கள் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படும் கோவிகளில் ராமரின் பெயரால் பூஜை, பஜனை, அன்னதானம் வழங்க அனுமதிக்கப்படவில்லை. அதேசமயம் தனியாருக்கு சொந்தமான கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகளையும் போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர். அரங்குகளை இடித்து தள்ளுவதாக அமைப்பாளர்களை மிரட்டியும் வருகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்