Skip to main content

எட்டு வழிச்சாலைக்கு நிலம் எடுக்க தடை;சேலத்தில் விவசாயிகள் கேக் வெட்டி கொண்டாட்டம்!

Published on 22/08/2018 | Edited on 22/08/2018

 

 

சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதற்கு, சேலம் விவசாயிகள் கேக் வெட்டியும், லட்டு ஊட்டியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.சேலம் & சென்னை இடையே பாரத்மாலா பரியோஜனா என்ற பெயரில் எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை திட்டம் நிறைவேற்றுவதற்கான வேலைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இத்திட்டப்படி, 277.3 கிலோமீட்டர் தொலைவுக்கு பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக 2343 ஹெக்டேர் நிலங்கள் கையகப்ப டுத்தப்பட உள்ளன.

 


இந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட உள்ள சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் நிலம் கொடுக்க விவசாயிகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசும், காவல்துறையினரும் எழை, அப்பாவி விவசாயிகளை கைது செய்தும், மூதாட்டிகள் என்றும் பாராமல் குண்டுகட்டாக தூக்கிச்சென்று சிறையில் அடைத்து கடுமை காட்டி வருகின்றனர்.ஒட்டு மொத்தமாக ஜனநாயக குரல்வளையை நெறித்துவிட்டு, நிலத்தை கட்டாயப்படுத்தி கையகப்படுத்தி வருகிறது. நிலத்தை அளந்து முட்டுக்கல் நடப்பட்டு விட்ட நிலையில், யார் யாருக்கு எவ்வளவு இழப்பீடு என்று கணக்கிடும் பணிகளில் நிலம் எடுப்பு அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

 


இது ஒருபுறம் இருக்க, சேலம் மாவட்டத்தில் மின்னாம்பள்ளி, குள்ளம்பட்டி, ராமலிங்கபுரம், குப்பனூர், பாரப்பட்டி, பூலாவரி, நிலவாரப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் எட்டு வழிச்சாலைக்கு எதிராக வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கறவை மாடுகளுக்கு கருப்புக்கொடி கட்டியும், அம்மனிடம் கோரிக்கை மனு கொடுத்தும் நூதன முறையில் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதற்கிடையே, எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை எதிர்த்து தர்மபுரியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் மற்றும் சில விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 


இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை இடைக்காலத்தடை விதித்து இன்று (ஆகஸ்ட் 21, 2018) தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த தீர்ப்பைக் கேட்டதும் சேலம் மாவட்டத்தில் எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மின்னாம்பள்ளி, ராமலிங்கபுரம் பகுதிகளில் கோயில் திடலில் கேக் வெட்டியும், ஊர் மக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 


மின்னாம்பள்ளியில் விவசாயிகள் பெரியாண்டிச்சி அம்மன் கோயில் திடலில் இன்று மாலையில் கூடினர். அம்மனுக்கு கற்பூரம் ஏற்றி எலுமிச்சம் பழங்கள் வைத்தும் வழிபட்டனர். பின்னர் கோயில் திடலில் கேக் கேக் வெட்டி கொண்டாடினர். ஒருவருக்கொருவர் லட்டு ஊட்டியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இதுகுறித்து விவசாயிகள் பன்னீர்செல்வம் கூறுகையில், ''எட்டு வழிச்சாலை திட்டத்தால் எங்களக்குச் சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலம் பறிபோகிறது. எங்களுக்கு விவசாயத்தைத் தவிர வேறு தொழில் ஏதும் தெரியாது. இந்த நிலத்தை நம்பித்தான் நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு கல்யாணம் காட்சி என்று பண்ண வேண்டும்.

 

 

 


அரசாங்கம் கொள்ளைக்காரர்கள்போல் எங்களிடம் அத்துமீறி நிலத்தைப் பறிக்க முயல்கிறது. விவசாய குடும்பத்தில் இருந்து வருவதாகச் சொல்லும் எடப்பாடி பழனிசாமி, ஒருநாளாவது வயலில் இறங்கி மண்வெட்டி பிடித்திருந்தால் எங்களின் கஷ்ட நஷ்டம் தெரிந்திருக்கும்.தமிழக அரசுக்கு விவசாய நலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லை. ஆயிரம் ரூபாய்க்கு விற்று வந்த உரம் இன்று 1250 ஆக உயர்ந்து விட்டது. அதன் எடையும் 5 கிலோ குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து இடுபொருள்களின் விலையும் உயர்ந்து  விட்டது. இந்த நிலையில் எங்களின் ஒரே நம்பிக்கையாக இருக்கும் விவசாய நிலத்தையும் பறித்துக்கொண்டால் எங்களின்  வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோய்விடும்,'' என்றார்.

 


விவசாயிகள் மணிகண்டன், வீரமணி, வடிவேல், அமுதா ஆகியோர் கூறுகையில், ''எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்காலத் தடைதான் விதிக்கப்பட்டு உள்ளது. சாமான்ய மக்களுக்குப் பயன்படாத இந்த திட்டத்தையே அரசு முற்றிலும் கைவிட வேண்டும். அல்லது இத்திட்டத்திற்கு நீதிமன்றம் நிரந்தர தடை விதிக்க வேண்டும். விவசாயிகளையும் விளை நிலங்களையும் அழித்துவிட்டு பசுமைவழி விரைவுச்சாலைத் தேவையா? என்பதை மத்தி, மாநில அரசுகள் சிந்திக்க வேண்டும். முதல்வர எடப்பாடி பழனிசாமியின் உடலுக்குள் ஜெயலலிதாவின் ஆன்மா இருப்பதாக அமைச்சர் உதயகுமார் சொல்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியை, கார்ப்பரேட் முதலாளிகளின் ஆன்மாதான் ஆட்டிப்படை க்கிறது,'' என்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

“வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது தமிழக அரசு விவசாயிகளுக்கு செய்யும் துரோகம்” - பி.ஆர்.பாண்டியன்

Published on 19/01/2023 | Edited on 19/01/2023

 

pr pandiyan talk about former and dmk government

 

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் உயர்மட்ட அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்சி பேருந்து நிலையம் அருகில் பிரஸ் கிளப் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில கவுரவத் தலைவர் எம்.பி.ராமன் தலைமைத் தாங்கினார். மாநில துணைத்தலைவர் ஃபாரூக் முன்னிலை வைத்தார்.

 

இதில் கலந்துகொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பி.ஆர்.பாண்டியன், “பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் விளைபொருட்களுக்கு இரட்டிப்பு லாபம் தருவதாக வாக்குறுதியை அளித்து வெற்றிபெற்றார். ஆனால், அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. அதன் பின்னர் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதாரவிலை கேட்டு ஓராண்டுக்காலம் டெல்லியில் போராட்டம் நடத்தினார்கள். அப்போது குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்க குழு அமைக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார். அதன் பின்னர் விவசாயிகள் போராட்டத்தைத் திரும்பப் பெற்று ஓராண்டுக்காலம் ஆகியும் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

வருகிற பிப்ரவரி ஒன்றாம் தேதி பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதாரவிலைக்கான அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லையெனில், வருகிற மார்ச் ஒன்றாம் தேதி தமிழக அனைத்து விவசாயிகள் குமரி முதல் டெல்லி வரை மத்திய அரசிடம் நீதி கேட்டு நெடுந்தூரப் பயணம் மேற்கொள்வோம். இதில், பயணம் செல்லும் வழியில் உள்ள 12 மாநில முதல்வர்களைச் சந்திக்க இருக்கின்றோம். அதேபோன்று, தமிழக முதலமைச்சரும் தேர்தல் வாக்குறுதியில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 வழங்குவதாகத் தெரிவித்தார். ஆனால், இன்றைய தினம் வரை வழங்கவில்லை. தற்போது மூன்றாவது பருவ நெல் கொள்முதல் தொடங்கி இருக்கின்றது. ஆகவே, குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3000 வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது தமிழக அரசு விவசாயிகளுக்கு செய்யும் துரோகம்” எனத் தெரிவித்தார்.

 

 

Next Story

''எட்டு வழிச்சாலை... நிலத்தை கையகப்படுத்திதான் ஆக வேண்டும்''-அமைச்சர் எ.வ.வேலு பேட்டி! 

Published on 31/08/2022 | Edited on 31/08/2022

 

"Eight-lane highway... should be done by acquiring the land"- Minister AV Velu interviewed!

 

'எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை' என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

 

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, ''எட்டு வழிச் சாலையை பொறுத்த அளவிற்கு முதல்வர் பிரச்சனைகளை அலசி பார்த்து முடிவுக்குக் கொண்டு வாருங்கள். நிலம் கொடுப்பவரிடம் சந்தை மதிப்பிற்கான பணத்தை கொடுங்கள் என அறிவுறுத்தியுள்ளார். நாங்கள் இந்த திட்டத்திற்கு எதிரி கிடையாது. நாங்கள் ஏற்கனவே ஆட்சி நடத்தி இருக்கிறோம். பல சாலைகளை நாங்களே போட்டிருக்கிறோம், கையகப்படுத்தி இருக்கிறோம். இப்பொழுது ஆட்சிக்கு வந்திருக்கிறோம்.

 

சாலைகளை விரிவுபடுத்தித்தான் ஆக வேண்டும். நீங்கள் போகும் வண்டி, நான் போகும் வண்டி என நாளுக்குநாள் உற்பத்தி அதிகரித்துக் கொண்டே போகிறது. அப்பொழுது என்ன செய்ய முடியும் சாலையை விரிவுபடுத்திதான் ஆக வேண்டும். அப்பொழுது நிலத்தை கையகப்படுத்தி தான் ஆக வேண்டும். முதல்வர் வேண்டாம் என்று சொல்கிறார் சம்பந்தப்பட்ட மந்திரி சாலை போட வேண்டும் என்று சொல்கிறார் என்று எங்கேயாவது நிரூபியுங்கள்'' என்றார்.