Skip to main content

கிராம சபைக்கூட்டத்தில் எட்டு வழிச்சாலைக்கு எதிராக தீர்மானம்!; சேலத்தில் கிளர்ந்தெழுந்த விவசாயிகள்!!

Published on 15/08/2018 | Edited on 27/08/2018

சேலம் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 15, 2018) நடந்த கிராம சபைக்கூட்டங்களில் சொல்லி வைத்ததுபோல் விவசாயிகள் எட்டு வழிச்சாலைக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றியதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஆண்டுதோறும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நான்கு நாள்களில் அனைத்து கிராமங்களிலும் மக்களை திரட்டி கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதன்படி, சுதந்திர தினத்தையொட்டி இன்று தமிழகம் முழுவதும் 12618 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடந்தது.

 

salem 8 way

 

 

 

சேலம் - சென்னை இடையில் ரூ.10 ஆயிரம் கோடியில் பசுமைவழி விரைவுச்சாலை என்ற பெயரில் எட்டு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் வனத்துறை, தனியார் பட்டா நிலங்கள் என 2343 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலத்தில் பெரும்பகுதி சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்கள் ஆகும். இதனால், எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும் விளை நிலத்தை விட்டுத்தர மாட்டோம் என விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் இத்திட்டத்திற்கு 8 சதவீத விவசாயிகள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 

 

எட்டு வழிச்சாலைக்கு எதிரான எதிர்ப்புக்கனல், சேலம் மாவட்டத்தில் இன்று நடந்த கிராம சபைக்கூட்டங்களிலும் எதிரொலித்தது. எட்டு வழிச்சாலைக்கு எதிராக தீர்மானங்கள் கொண்டு வரப்படலாம் என்ற யூகம் கிளம்பியதால், கிராம சபை க்கூட்டம் நடந்த இடங்களில் எல்லாம் போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டு இருந்தனர். கிராம மக்களும் அதிகமாக கூடிவிடக்கூடாது என்பதற்காக சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில், கிராம சபைக்கூட்டம் பற்றி எவ்வித முன்னறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், சேலத்தை அடுத்த குள்ளம்பட்டியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் 120க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அரசுத்தரப்பில் அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சி கிளர்க் செந்தில்குமார் கலந்து கொண்டார்.

 

salem 8 way

 

 

 

குள்ளம்பட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், கிரிதரன், வெற்றிவேல் ஆகியோர், எட்டு வழிச்சாலையால் குள்ளம்பட்டி பகுதியில் விவசாய நிலங்கள் அழிக்கப்படுவதோடு, இயற்கை வளங்களும் சுரண்டப்படும் அபாயம் உள்ளதால், இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இந்த தீர்மானம் கிராம சபைக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக பதிவேட்டில் குறிப்பிட வேண்டும் என்று விவசாயிகள் கோரினர். இதற்கு குள்ளம்பட்டி கிராம உதவியாளர் வடிவேல் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தீர்மான பதிவேட்டை  கையில் எடுத்துக்கொண்டு அந்தக் கூட்டத்தை விட்டு ஓட்டம் பிடித்தார்.எட்டு வழிச்சாலைக்கு எதிராக கிராம சபையில் விண்ணப்பம் பெறப்பட்டு, சேலம் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்படுகிறது என்று மட்டுமே பதிவு செய்யப்படும் என்றும் வடிவேல் கூறினார். இதனால் விவசாயிகள் தரப்புக்கும் அவருக்கும் வாக்குவ தம் ஏற்பட்டது. பாதுகாப்புக்கு வந்திருந்த ஏத்தாப்பூர் போலீசார் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.

 

 

அரசுத்தரப்பு பார்வையாளராக வந்திருந்த அயோத்தியாபட்டணம் பேரூராட்சி உதவியாளர் செந்தில், வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் வருமாறு செல்போனில் தகவல் கொடுத்தார். ஆனால் அவர் வர தாமதம் ஆனதால், விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவெடுத்தனர். பிறகு நீண்ட இழுபறிக்குப் பின்னர், எட்டு வழிச்சாலைக்கு எதிராக தீர்மானம் ஏற்கப்பட்டு, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்படுகிறது என்று திருத்தம் செய்து தீர்மான பதிவேட்டில் கிராம உதவியாளர் வடிவேல் எழுதினார். அத்துடன், குள்ளம்பட்டி பொதுமக்கள் கையெழுத்திட்டுக் கொடுத்த தீர்மான மனுவையும் அந்த பதிவேட்டில் சேர்த்துக் கொண்டனர். அதன்பிறகு, தெருவிளக்கு, கழிப்பறை வசதி கேட்டும் தீர்மானங்களைக் கொண்டு வந்தனர்.

 

 

இதேபோல் பாரப்பட்டியில் நடந்த கிராம சபைக்கூட்டத்திலும் பெரும் சலசலப்புகள் ஏற்பட்டன. பொதுமக்கள், எட்டு வழிச்சாலைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தை ஏற்க மறுத்த அரசுப்பிரதிநிதிகள், கூட்டத்தை விட்டு பாதியிலேயே வெளியேற முயன்றனர்.இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள், அதிகாரிகளின் வாகனங்களை முற்றுகையிட்டனர். இதையடுத்து மீண்டும் கூட்டத்திற்கு வந்து அமர்ந்த அதிகாரிகள், எட்டு வழிச்சாலைக்கு எதிரான தீர்மானத்தை தங்களது பதிவேட்டில் எழுதிக் கொண்டனர்.பூலாவரி கிராமத்தில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. செல்வம் தலைமையில், பொதுமக்கள் எட்டு வழிச்சாலைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்தபோது அதை பதிவு செய்ய அரசுப்பிரதிநிதிகள் மறுத்துவிட்டனர். இதனால் விரக்தி அடைந்த மக்கள், கூட்டத்தை புறக்கணித்து அங்கிருந்து வெளியேறினர். அரசுத்தரப்பில் வந்திருந்தவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் பொதுமக்கள் யாரும் வராததால், அவர்களும் கிளம்பிச் சென்றனர். இதனால் பூலாவரியில் மட்டும் கிராம சபைக்கூட்டம் இன்று முழுமையாக நடைபெறவில்லை.

 

 

 

 

குப்பனூர் கிராமத்தில் விவசாயி நாராயணன் தலைமையில் எட்டு வழிச்சாலைத் திட்டத்தைக் கைவிடக்கோரி தீர்மானம் கொண்டு வந்தனர். அங்கேயும் பொதுமக்கள் எழுதிக் கொண்டு வந்தபடி தீர்மானத்தை பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்தனர். இதனால் குப்பனூர் கிராமத்தில் சபைக்கூட்டத்தை முடிப்பதில் நீண்ட நேரம் ஆனது.பின்னர் இருதரப்பும் சமாதானம் ஆன பிறகு, ''குப்பனூர் ஊராட்சியில் 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக மக்கள் கொண்டு வரும் விண்ணப்பத்தினை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும்,'' என்று பதிவு செய்தனர்.இதேபோல், காமலாபுரம், சிக்கனம்பட்டி, பொட்டியபுரம் ஆகிய கிராமங்களில் விமான நிலையம் விரிவாக்கத்திற்கு எதிராக சம்பந்தப்பட்ட கிராம மக்கள் தீர்மானங்களைக் கொண்டு வந்தனர்.

சார்ந்த செய்திகள்