செப்டம்பர் 15ந் தேதி திருவண்ணாமலை நகரில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. இதற்காக 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை தெற்கு மா.செ எ.வ.வேலு எம்.எல்.ஏ செய்து வருகிறார்.
இந்த முப்பெரும் விழா பிரமாண்டமாக இருக்க வேண்டும், எந்த சலசலப்பும் வந்துவிடக்கூடாது என பிற மாவட்ட நிர்வாகிகளை வரவேற்க வரவேற்பு குழு, உணவு உபசரிப்பு குழு, தங்க வைத்தல் குழு, விளம்பர குழு, பந்தல் அமைப்பு குழு, பிற மாவட்டத்தினர் கோயில், கிரிவலம் போக நினைத்தால் அதற்கான கைடு குழு என தனித்தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து மாவட்டத்தில் உள்ள திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பி, கட்சியின் முக்கிய நிர்வாகிகளை முப்பெரும் விழா விளம்பர குழுவை சேர்ந்த இருவர் சந்தித்தனர். நீங்கள் பத்திரிக்கைக்கு விளம்பரம் தரும்போது இந்த டிசைனில் இப்படித்தான் இருக்க வேண்டும், இந்த வாக்கியங்கள் தான் இடம்பெற வேண்டும், இந்த புகைப்படங்கள், இன்னார் படங்கள் மட்டும்மே இருக்க வேண்டும், வேறு யார் புகைப்படமும் விளம்பரத்தில் வரக்கூடாது எனச்சொல்லி டிசைன் செய்யப்பட்ட விளம்பரங்களை தந்துவிட்டு வந்துள்ளனர். இதுதான் கட்சியின் சில நிர்வாகிகளை கொதிக்கவைத்துள்ளது.
இதுப்பற்றி நம்மிடம் பேசிய நிர்வாகி ஒருவர், முப்பெரும் விழாவில் உதயநிதி ஸ்டாலின்க்கு விளம்பரத்தில் முக்கியத்துவம் தரனும் அப்படின்னு சூசகமா சொல்லியிருக்காங்க. விளம்பரத்தில் பெரியார், அண்ணா, கலைஞர், தலைவர், இளைஞரணி அமைப்பாளர் உதயநிதி படத்தை தவிர வேறு யார் படமும் இருக்ககூடாதுன்னு சொல்லியிருக்காங்க. அதிலும் உதயநிதி படம் பெரியதா இருக்கனும் சொல்லி விளம்பர டிசைன்ல அதுக்கு தான் முக்கியத்துவம் தந்துயிருக்காங்க. யார் விளம்பரம் தந்தாலும் இளைஞரணி அமைப்பாளர் உதயநிதி படம் கண்டிப்பா இருக்கனும்ன்னு சொல்லியிருக்காங்க. சில விளம்பர டிசைன்களில் கலைஞர் படமே சின்னதா போட்டுயிருக்காங்க.
மாநில இளைஞரணி அமைப்பாளர் என்கிற முறையில் மாவட்ட இளைஞரணி நிர்வாகிள் தரும் விளம்பரத்தில் அவருக்கு முக்கியத்துவம் தரலாம், பிற அணி நிர்வாகிள் தரும் விளம்பரத்தில் தங்களது அணியின் மாநில அமைப்பாளர் படம் இருக்க வேண்டும் என நினைக்கமாட்டார்களா?, நாளை அந்த அணியின் மாநில அமைப்பாளர்கள் ஏதாவது கேள்வி கேட்டால் அந்த அணியின் மாவட்ட, ஒன்றிய அணி நிர்வாகிகள் என்ன சொல்வார்கள் என கேள்வி எழுப்பினார்.

கட்சி நிர்வாகிகள் சொந்த காசை போட்டு தான் விளம்பரம் தருகிறார்கள், அதில் யார் படம் போடவேண்டும் என்கிற உரிமை கூட அவர்களுக்கு கிடையாது என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது, அதேபோல் இந்த பத்திரிக்கைக்கு தான் விளம்பரம் தரவேண்டும் என்பதையும் சூசகமாக தெரிவிக்கிறார்கள். கலைஞரை, திமுகவை கடுமையாக எதிர்த்தது சில பத்திரிக்கைகள். ஆனால், அந்த பத்திரிக்கைகளை கூட கலைஞர் என்றும் புறக்கணித்ததில்லை. உள்ளுரில் அரசியல் செய்ய வேண்டும்மென்றால் நாங்கள் அனைத்து பத்திரிக்கை, மீடியாக்களுடன் நட்பாக இருந்தால் மட்டும்மே முடியும். சில நிர்வாகிகளை போல நாங்கள் செய்தியாளர்களை மிரட்ட முடியும்மா என கேள்வி எழுப்பியவர். இதுப்பற்றி கேட்டால், என் படத்தையே எந்த விளம்பரத்திலும் போட வேண்டாமன்னு சொல்றேன். வேணும்ன்னா விளம்பரம் தர்றவங்க படத்தை போட்டுக்கங்கன்னு மா.செ தரப்பில் இருந்து சொல்றாங்க என கொதித்தார்.