Skip to main content

ஒரு இசைக் கலைஞனின் எதிர்க்குரல்!

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

காலம் காலமாக  இசைத்துறையிலும் நிலவிவரும் சமூக அநீதிகளுக்கு  எதிராகத் தொடர்ந்து எதிர்க்குரல் கொடுத்துவருகிறார் பிரபல பாடகரும் இசைக் கலைஞருமான டி.எம்.கிருஷ்ணா. அதனால் அவர் எழுதிய ’செபாஸ்டியன் அண்ட் சன்ஸ்’ என்ற நூலை, தங்கள் அரங்கில் வெளியிடக்கூடாது என்று, ஏற்கனவே கொடுத்த அனுமதியை மறுத்து தன் எரிச்சலைக் காட்டியிருக்கிறது கலாசேத்திரா.


டி.எம்.கிருஷ்ணா, கர்நாடக இசையை உலகத்திசை எங்கும் பரப்பி வருகிற குரலிசைக் கலைஞர். கர்நாடக இசை என்பது ஒரு சமூகத்திற்கான சொத்து என்பது போல் காட்டப்பட்டு வரும்,ஒருசார் சாதீய ஆதிக்கத்தை உடைத்தெறிய எண்ணுகிற நவீன சிந்தனையாளர். அதனால் அவரை சகிக்க முடியாதவர்கள், நூலிற்குள் பேசப்படும் கீழ்த்தட்டு உழைப்பாளர் பற்றிய பதிவுகளைச் சுட்டிக்காட்டி, நூலை வெளியிட அரங்கம் தரமுடியாது என்று கடைசி  நேரத்தில் கை விரித்துவிட்டார்கள்.

Famous singer and musician TM Krishna  The book released in chennai


அப்படி என்ன அந்த நூலில் அணுகுண்டுகள் இருக்கின்றன? தோல் வாத்தியக் கருவியான  மிருதங்கத்தைத் தேர்ந்த கலைஞர்கள் வாசிக்கும் போது அதற்கு உலகமே மயங்குகிறது. ஆனால் அந்த மிருதங்கத்தை தயாரிக்கும் தொழிலாளர்கள் வாழ்க்கையோ, எல்லா வகையிலும் வலி மிகுந்ததாக இருக்கிறது என்பதைப் பரிவோடு அந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் கிருஷ்ணா.


மிருதங்கத்துக்கு ஆடு, மாடு போன்ற விலங்குகளின் தோல்தான் பதப்படுத்தப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும், மிருதங்கத்தை உருவாக்குபவர்கள் எப்படியெல்லாம் வியர்வை சிந்துகிறார்கள் என்பதையும் அதில் விவரித்திருக்கிறார். மிருகங்களின் தோலில் இருந்துதான் மிருதங்கம் செய்யப்படுகிறது என்ற உண்மையை, அவர் பகிரங்கமாக அம்பலப்படுத்தியதுதான் அவர்களை அதிகமாக அலறவைத்திருக்கிறது. தாளக் கருவிகளுக்கான தோல்கள் ஏதோ வானத்தில் இருந்து நெய்து எடுக்கப்படுவது என்பது போல், அவர்கள் காட்டிவந்த போலியான புனித பாவனையை கிருஷ்ணா இந்த நூலில் கிழித்தெறிந்திருக்கிறார். பெரியார் எழுப்பிய குரல், மிருதங்கத்தில் இருந்தும் வரும் என்பதை அவர்கள் சற்றும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்.

Famous singer and musician TM Krishna  The book released in chennai


ஒரு காலத்தில் தமிழர்கள் அனைவரும் எந்தவிதப் பேதமும் இன்றி கோயிலின் கருவறைவரை உரிமையோடு சென்று, ஆடல், பாடலுடன் மலர்களைத் தூவி இறைவனை வழிபட்டு வந்த நிலையில், சோழர்கள் காலத்தில் சமஸ்கிருதப் பண்டிதர்கள், கோயில்களுக்குள் நுழைந்தார்கள். இதற்காக தமிழ் மன்னர்கள், காஷ்மீர் பகுதியில் இருந்து கூட வெள்ளைத் தோலினரை இறக்குமதி செய்தனர். கோயிலுக்குள் காலடி வைத்தவர்கள், அதன் அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டார்கள். கருவறையில் பக்தியுடன் கசிந்துருகிய தமிழ் ’நீச பாசை’ என்ற முத்திரையோடு வெளியே துரத்தப்பட்டது. கருவறையில் வழிபாடு செய்தவர்களும் ’தீட்டான சூத்திரர்கள்’ என்று வெளியே நிறுத்தப்பட்டார்கள்.


இதேபோல் முத்துத்தாண்டவர், அருணாச்சலக்கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை என்னும் தமிழிசை மூவரால் உருவாக்கப்பட்ட பண்களும் பாடல்களும் மக்கள் மத்தியில் கோலோச்சின. அவர்கள் காலத்துப் பின்னால், அவர்களைப் பார்த்து பாண்ணமைத்துப் பாடிய  இசை மும்மூர்த்திகளான தியாகையர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோரை  தூக்கிப்பிடித்து, தமிழிசை மூவரை வைதீகவாதிகள் அரங்குகளில் இருந்து ஓரம்கட்டினர்.


இசையுலகில் தான் உணர்ந்த இதுபோன்ற ஆதிக்கத் திமிருக்கு எதிராகக் கொடிபிடிக்கத் தொடங்கினார் டி.எம்.கிருஷ்ணா. இசை என்பது மக்கள் எல்லோருக்குமான பொதுச்சொத்து, அதை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கும், குறிப்பிட்ட மதத்திற்குமான சொத்து என்று நிலைநாட்ட முயல்வது தவறானது என்று எதிர்க்குரல் எழுப்பினார்.  

Famous singer and musician TM Krishna  The book released in chennai

மேலும், இசைக்குப் பஞ்ச கச்சமும் உச்சிக் குடுமியும் தேவையா? பளபளப்பான பட்டு வேட்டி, ஜிப்பா அணிந்துதான் கர்நாடக இசையைப் பாடவேண்டும் என்பது சட்டமா? கைலியோடு பாடினால் இசை அபஸ்வரம் ஆகிவிடுமா? அதன் புனிதம் கெட்டுவிடுமா? என அவைதீகவாதிகள் இத்தனை காலமும் பொத்திவைத்த போலிப் புனிதத்தின் வேட்டியை அவர் உருவினார். அதோடு நிறுத்தாத கிருஷ்ணா, மதம் கடந்ததே இசை என்று காட்ட, கர்நாடக இசையில் கிருஸ்த்தவப் பாடல்களைப் பாடினார். இதற்கு வைதீகர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அதனால் கடந்த ஆண்டு டெல்லி நேரு பூங்காவில் ஸ்பிக் மேக்கே என்ற அமைப்பு ஏற்பாடு செய்த இவரது இசை நிகழ்ச்சிக்கு தடைவிதிக்கப்பட்டது.
 

’கண்ணெதிரில் எது நடந்தாலும் நமக்கென்ன? நம் பிழைப்பை நாம் நடத்துவோம்’என்று ஒதுங்கிச்செல்லும் கலைஞர்களுக்கு நடுவே, அநீதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல்கொடுத்தார் கிருஷ்ணா. கடந்த அக்டோபரில் சீன அதிபர் ஜிங்பிங் தமிழகம் வந்த போது, அவரை மகிழ்விக்க கலை நிகழ்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதில் குளுகுளு மேடையில் பரதம், கதகளி, மோகினி ஆட்டம் போன்றவை நடப்பதையும், நாட்டுப்புறக் கலைஞர்கள் மட்டும் வேகாத வெய்யிலில் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டதையும் கண்ட கிருஷ்ணா,’நடனக் கலைகளுக்கு மட்டும் மேடை. நாட்டுப் புறக் கலைகளுக்கு தெரு ஓரமா?’என்று கொந்தளித்தார். அதற்கு முன் நாடாளுமன்றத் தேர்தலின் போது, ’மதவாத அரசியலுக்கு முடிவு கட்டுங்கள். மோடிக்கும் பா.ஜ.க.வுக்கும் வாக்களிக்காதீர்கள்’என்றும் பறையறைந்தார். அதேபோல் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராகவும் தன் எதிர்வினையை அழுத்தமாக ஆற்றினார் கிருஷ்ணா.

Famous singer and musician TM Krishna  The book released in chennai

இப்படி தொடர்ந்து எதிர்க்குரல் எழுப்பிவருவதால் அவரை இழிவுபடுத்தும் முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. எண்ணற்ற விருதுகளைப் பெற்ற டி.எம்.கிருஷ்ணா, 2016-ல் ஆசியாவின் நோபல் பரிசு எனப்படும் மகசேசே விருதுபெற்றபோது, ஜெயமோகன் போன்றவர்களால் வேண்டுமென்றே அவர் விமர்சிக்கப்பட்டார். இந்த விருது பிலிப்பைன்ஸின்  முன்னாள் அதிபர் ரமோன் மெகசேசே நினைவாக வழங்கப்படும் விருதாகும். கிருஷ்ணா என்னும் கலைஞனின் புரட்சிக் குரலுக்கு எதிராகத் திரண்ட வைதீகவாதிகளின் கசப்புணர்வு ’அரங்க மறுப்பு’ வரை வந்து நிற்கிறது.


டி.எம். கிருஷ்ணாவின் நூலில் அரசுக்கோ ஆட்சியாளர்களுக்கோ எதிரான கருத்துக்கள் என்று எதுவும் இல்லை. வைதீகர்களின் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான குரலே அவரிடமிருந்து எதிரொலிக்கிறது. இதைச் சகிக்க முடியாதவர்கள்தான் எதிர்க்கிறார்கள். பிற்போக்கு வாதிகளின் எதிர்ப்பும் மறுப்பும்தான் ஒரு புரட்சியாளனை வெளிச்சம் போட்டு அடையாளம் காட்டும் தகுதியான அடையாளமாய் ஆகும்.


 

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.