Skip to main content

சௌபாக்யா யோஜனா - என்னென்ன இருக்கிறது ?

Published on 26/09/2017 | Edited on 26/09/2017

சௌபாக்யா யோஜனா - என்னென்ன இருக்கிறது ?






நேற்று (25/09/2017) மதியம் செய்தித் தொலைக்காட்சிகளில், 'மாலை ஆறரை மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருக்கிறார் பிரதமர் மோடி' என்ற செய்தியைப் பார்த்ததும் பலருக்கும் பதட்டமேற்பட்டது. 'ஏடிஎம்'களை நோக்கி ஒரு பாதியினரும், பெட்ரோல் பங்க்குகளை நோக்கி ஒரு பாதியினரும் படையெடுக்க, சிலர் 'இன்றைய புதிய இந்தியாவில் வழங்கப்படும் அடையாள அட்டையில் நமக்கு பதிலாக கடவுளின் படம் இருக்குமா காஜலின் படம் இருக்குமா?' என்றெண்ணித் தவித்தனர். இவர்கள் அத்தனை பேரின் வயிற்றிலும் பாலை வார்ப்பது போல அமைந்தது பிரதமரின் புதிய திட்ட அறிவிப்பு. பாலை வார்ப்பது என்றால், பயன் தரக்கூடியது என்பதால் அல்ல, பாதிப்பில்லாதது என்பதால். 





பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும்  மின்சார வசதியை உறுதி செய்ய "சௌபாக்யா  யோஜனா" எனும் திட்டத்தை 'தீன்தயாள்  உபாத்யாய'வின்  நூற்றாண்டு விழாவில் துவக்கிவைத்தார். அறிவிப்பு விழாவில் பேசிய  பிரதமர் மோடி,   "இந்தியாவில் உள்ள 18,000 கிராமங்களில் குறைந்தது 3000 கிராமங்களிலாவது மின்சாரம் இல்லாமல் இருக்கின்றது. 70 வருட   சுதந்திரத்திற்குப்  பிறகும்  4 கோடி குடும்ப மின் இணைப்பு இன்றி உள்ளனர். இவர்களின் மின் தேவையை பூர்த்தி செய்யவே இந்தத் திட்டம் 2018இல் இந்தியா முழுமையான மின் இணைப்பு பெற்ற நாடாகத் திகழும். கடந்த மூன்றாண்டுகளாக மின் துறையில் பல சீர்திருத்தங்களைச் செய்து இந்தத் திட்டத்தை சாத்தியமாக்கி உள்ளோம். இந்தத் திட்டத்தால் எளிய மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும்" என்று    கூறியுள்ளார்.

 

சௌபாக்யா யோஜனா திட்டத்தின் முக்கிய அம்சங்கள்  :

 

-  16,320 கோடி செலவில் இந்த திட்டம்  செயல்பட இருக்கிறது.

 

-  இந்த வருட இறுதிக்குள்   அனைத்து கிராமப்புறங்களிலும் செயல்பட இருக்கிறது.  

 

- இந்தத்  திட்டதிற்கு உபயோகப்படுத்தப்படும்   வயர், ட்ரான்ஸ்ஃபார்மர்   போன்ற உபகரங்களுக்கு மானியம் வழங்கப்படும்.

 

- அனைத்து வீடுகளுக்கும் டிசம்பர் 2018 க்குள்  மின்சாரம் வழங்கப்படும்.


- இந்த திட்டத்தின் முதல் குறிக்கோள் அனைவருக்கும் மின்சாரம். அதை அடைந்த பின், மின்வெட்டு இல்லாத   24 X 7 மின்சாரம் எல்லா தரப்பு மக்களுக்கும் கிடைக்க வழிசெய்யப்படும்.

 

- அரசு  கணக்கீட்டின் படி வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாகவும்  வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்கள் 500  ரூபாய் செலுத்தியும்  இத்திட்டத்தில் பயன்  பெறலாம். ஒரே தவணையில் கட்ட முடியாதவர்கள்  மின் இணைப்புக்கான  தொகையை பத்து  தவணைகளில் செலுத்தலாம்.

 

- மொத்த செலவினத்தில் 60% மத்திய அரசு நிதியிலும், 10% மாநில அரசு நிதியிலிருந்தும், 30% வங்கிக்கடன் மூலமாகவும் திரட்டப்படும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதலாக 15% நிதியளிக்கப்படும்.     

 

- மேலும்,  இத்திட்டத்தின் கீழ்  மண்ணெண்ணெய் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்  எனவும், கல்வியில் முன்னேற்றம், கூடுதல் வேலை வாய்ப்பு, கூடுதல் சுகாதார சேவை ஆகியவை கிடைக்கும் என்று அறிவித்துள்ளது மத்திய அரசு.


மின்னிணைப்பு பெறாத கிராமங்களில் தொண்ணூறு சதவிகித கிராமங்கள், வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.   


சந்தோஷ் 

 

சார்ந்த செய்திகள்