ADVERTISEMENT

கே.எஸ். ரவிக்குமார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா!

11:28 AM Aug 04, 2021 | santhosh

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரபல வெற்றிப்பட இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் சொந்த பட நிறுவனமான ஆர்.கே. செல்லுலாயிட்ஸ் தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படம் ‘தெனாலி’, மாபெரும் வெற்றியைப் பெற்றது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, இந்நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் ‘பிக்பாஸ்’ பிரபலங்களான தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு, பூவையார், மனோபாலா, மாரிமுத்து, ‘பிளாக்’ பாண்டி, ‘பிராங்க் ஸ்டார்’ ராகுல், நடிகை பவித்ரா லோகேஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநர்களாக சபரிகிரீசன் மற்றும் குரு சரவணன் என்ற இரட்டை இயக்குநர்கள் அறிமுகமாகிறார்கள்.

இவர்கள் இருவரும் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரிடம் உதவியாளர்களாக பணியாற்றியவர்கள். இவர்களில் சபரிகிரீசன் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்வி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, பிரவீண் ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். அறிமுக கலை இயக்குநரான சிவா கலை இயக்கத்தைக் கவனிக்கிறார். பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, விவேகா, ‘என்ஜாய் என்ஜாமி’ புகழ் அறிவு ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தற்போது வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வைரலாகிவருகிறது.

மேலும், இப்படத்தைப் பற்றி இரட்டை இயக்குநர்கள் சபரிகிரீசன் மற்றும் குரு சரவணன் பேசியபோது...''மலையாளத்தில் ‘ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன்’ என்ற பெயரில் வெளியாகி வெற்றிபெற்ற படத்தை தமிழ் ரசிகர்களுக்கேற்ற வகையில் யோகி பாபுவின் காமெடியுடன், கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் சேர்த்து திரைக்கதையை சுவராசியப்படுத்தியிருக்கிறோம். ஆறு வயது முதல் அறுபது வயது வரையுள்ள அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஃபேமிலி எண்டர்டெய்னராக ‘கூகுள் குட்டப்பா’ உருவாகியுள்ளது. இப்படத்தில் ரோபோ ஒன்று முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது. அது செய்யும் குறும்புத்தனமான சேட்டைகள் குழந்தைகளையும், இளைஞர்களையும் உற்சாகப்படுத்தும்" என்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT