K. S. Ravikumar

21 வயதேயான அறிமுக இயக்குநர் சஞ்சய் நாராயணன் இயக்கத்தில், An every frame matters production தயாரிப்பில் புதுமுக நடிகர், நடிகைகளை வைத்து உருவாகியிருக்கும் படம் ’மாலைநேர மல்லிப் பூ’. சிறுவயதிலேயே பாலியல் தொழிலில் தள்ளப்படும் ஓர் இளம்பெண்ணிற்கும் அவளின் பத்து வயதேயான மகனுக்குமான பாசப் போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படம், பாலியல் தொழிலாளர்களுக்கும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கும், அவர்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும், சக பாலியல் தொழில் செய்யும் தோழிகளுக்கும் இடையே உள்ள உறவை மிக ஆழமாகப் பேசுகிறது. பிரபல தியேட்டர் ஆர்ட்டிஸ்டான வினித்ரா மேனன், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். குழந்தை நட்சத்திரம் அஸ்வின் பத்து வயது மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாய்து டோர்ஜி ஒளிப்பதிவு செய்ய, ஹர்திக் சக்திவேல் இசையமைத்திருக்கிறார். விஜயலெட்சுமி நாராயணன் தயாரித்திருக்கிறார்.

Advertisment

அண்மையில் நடைபெற்ற இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், “இப்படத்தின் தயாரிப்பாளர் விஜயலெட்சுமி என் கல்லுரி விரிவுரையாளர் ஒருவரது சிபாரிசின் அடிப்படையில் என்னை சந்திக்க வந்தார். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள சொல்லி அழைப்பு விடுத்தார்கள். நான் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரம் இருப்பதில்லை என்பதால் புறக்கணிக்க நினைத்தேன். படத்தின் தயாரிப்பாளர் யார் என்று இயக்குநரைக் கேட்டேன். என் அம்மாதான் என்று அவர் சொன்னார். நல்ல பணக்காரர்களா என்று கேட்டேன். இல்லை சார், என் அம்மா எனக்காக அவர்களின் நகைகளை எல்லாம் விற்று படம் தயாரித்திருக்கிறார் என்று இயக்குநர் கூறினார். அது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர்களுக்காகவே இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன்.

Advertisment

இயக்குநர் பாலச்சந்தர் அரங்கேற்றம் படம் எடுப்பதற்கு முன்னர் பல படங்கள் எடுத்துவிட்டார். ஆனால் இப்படத்தின் இயக்குநர் சஞ்சய் நாராயணன் தன் முதல் படத்திலேயே பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையில் தாய் மகனுக்கு இடையே இருக்கும் பாசப் பிணைப்பை தன் கதையாக எடுத்திருப்பது பாராட்டத்தக்கது. அந்த தைரியத்திற்கு நான் தலைவணங்குகிறேன். இயக்குநரை முதலில் நேரில் பார்க்கும் போது, அவருக்குள் என்ன மாதிரியான விசயங்கள் இருக்கும் என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. இன்று அவர் மேடையில் பேசும் போதும், அவரின் படைப்பைப் பார்க்கும் போதும் பிரமிப்பாக இருக்கிறது. இவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது” எனக் கூறினார்.