/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/9_31.jpg)
கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்'. மலையாளத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைவசம் வைத்துள்ள இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தமிழில் இயக்குவதற்கான வாய்ப்பை தனது உதவி இயக்குநர்களான சபரி மற்றும் சரவணனுக்கு வழங்கியுள்ளார்.
தமிழில் ‘கூகுள் குட்டப்பன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், பிக்பாஸ் புகழ் தர்ஷன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடிக்கவுள்ளார். படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பத்திரிகையாளர்களிடம் உரையாடினார். அவை பின்வருமாறு...
‘கூகுள் குட்டப்பன்’ படம் குறித்துப் பேசியகே.எஸ்.ரவிக்குமார், "என்னுடைய தயாரிப்புல வெளியான முதல் படம் 'தெனாலி'. 1999-ஆம் ஆண்டு பூஜை போடப்பட்டு 2000-ஆம் ஆண்டு வெளியானது. அதன்பிறகு தொடர்ந்து படம் இயக்கிக் கொண்டிருந்ததாலும் நிறைய படங்களில் நடித்து வருவதாலும் தயாரிப்பில் கவனம் செலுத்த நேரமில்லை. என்னிடம் பத்து வருடங்களாக உதவி இயக்குநர்களாகப் பணியாற்றி வரும் சபரி, சரவணனுக்காகத்தான் இந்தப் படத்தை தயாரித்தேன். மலையாளப் படம் 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்' தமிழ் ரீமேக்கில் நீங்கள் நடிக்க வேண்டும்; நாங்கள் அந்தப் படத்தை இயக்கப் போகிறோம் என்றுதான் முதலில் வந்தார்கள். அவர்கள் முதலில் பேசி வைத்திருந்த தயாரிப்பாளரால் திட்டமிட்ட தேதியில் படம் பண்ண முடியவில்லை. படம் இயக்க வேண்டும் என இவர்கள் எடுத்த முயற்சி வீண் போகக்கூடாது என நினைத்து, நானே தயாரிக்கிறேன் என்றேன். மீண்டும் இருபது வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தை தயாரித்துள்ளேன்" என்றார்.
தெனாலி உள்ளிட்ட தன்னுடைய பிற கடந்த கால படங்கள் குறித்து கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், " 'தெனாலி 2', 'பஞ்சதந்திரம் 2', 'படையப்பா 2', 'வரலாறு 2' பற்றியெல்லாம் பலரும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். கமல் சாரிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறேன். அந்தக் கதைக்குத் தயாரிப்பாளரும் இருக்கிறார். ஆனால், கமல் சார் எப்ப அந்தப்படம் பண்ணனும்னு நினைப்பார் என்று எனக்குத் தெரியவில்லை. அந்தக் கதைக்கு 'பஞ்சதந்திரம் 2' எனப் பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும். இதுவரை நான் நினைத்தது பஞ்சதந்திரம் 2 பற்றி மட்டும்தான். 'வரலாறு 2', 'வில்லன் 2' படம் வரப்போகுதாமே என என்னிடமே பலர் கேட்கிறார்கள். அதைப் பற்றியெல்லாம் நான் யோசித்தது இல்லை. பொதுவாக, இரண்டாம் பாகம் உருவாக்குவதில் எனக்குப் பெரிய அளவில் ஆர்வம் கிடையாது. நாம் எவ்வளவு நன்றாகப் படம் இயக்கினாலும், முந்தைய படத்தோடு ஒப்பிடுவார்கள். அது, நம் படத்தைச் சுமாரான படமாக்கிவிடும். ஒரு சில படங்கள் மட்டுமே ஒப்பீட்டைத் தாண்டி நன்றாகப் பேசப்பட்டுள்ளது. அஜித் நடித்த 'பில்லா' படத்தை அதற்கான உதாரணமாகக் குறிப்பிடலாம்" என்றார்.
{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/ha12Wp195gI.jpg?itok=V-LnxTv1","video_url":" Video (Responsive, autoplaying)."]}
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)