ADVERTISEMENT

'தி ஃபேமிலி மேன் 2' தொடர் சர்ச்சை! லண்டனில் வெடித்த போராட்டம்!

11:29 AM Jun 24, 2021 | santhosh

ADVERTISEMENT

கரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ஓடிடி கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. திரையரங்கில் வெளியாகும் படங்களுக்குத் தணிக்கை போன்ற பிரச்சினைகள் உள்ளன. ஆனால், ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு அப்படியில்லாமல், நாம் நினைத்ததைப் படமாக்கி வெளியிட முடியும். இதனாலேயே இதற்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதன் காரணமாக ஓடிடியில் பெரும்பாலும் சர்ச்சைக்குரிய படங்களே அதிகளவில் வெளியாகி வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில், நடிகை சமந்தா நடித்துள்ள ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற சர்ச்சைக்குரிய வெப் தொடர் சமீபத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.

ADVERTISEMENT

அதில் சமந்தா தமிழீழப் போராளியாக நடித்துள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேலும், இந்தப் படத்துக்குப் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்ற நிலையில், லண்டனில் உள்ள புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்கள் 'தி ஃபேமிலி மேன் 2' தொடரை ஒளிபரப்பக்கூடாது என்று அமேசான் நிறுவனத்தின் முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் 'தி ஃபேமிலி மேன் 2' தொடரில் நடித்த தமிழ் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு உலகெங்கும் உள்ள புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் அமைப்புகள் மொத்தமாக சேர்ந்து கடிதம் எழுதியுள்ளார்கள். அதில்...

'''தி ஃபேமிலி மேன் 2' வலைத் தொடர் ஒரு கற்பனையான படைப்பு என்று தயாரிப்பாளர்கள் கூறியிருந்தாலும், 'ஈழத் தமிழர்கள்', 'பருத்தித்துறை', 'ஈழம்' மற்றும் 'வட இலங்கை' ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளமை, காட்சிகள் ஈழம் போருக்கு மிகவும் ஒத்திருக்கின்றமை ஆனது ஈழத் தமிழர்களை மோசமான முறையில் காட்ட முனையும் நன்கு திட்டமிடப்பட்ட செயலாகவே இது தெரிகின்றது. ஈழத் தமிழர்கள் எங்கு சென்றாலும் அவர்கள் தொடர்ந்து பயங்கரவாதிகளாக இருப்பார்கள் என்று இந்தத் தொடர், பிரச்சாரம் செய்கிறது. மாறாக, கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இன அழிப்பு போன்ற அநீதிக்கு எதிராக நாங்கள் உலக நாட்டு சட்டங்களின்படி போராடி வருகிறோம். ஆனால் இன்றும் விடுதலை பற்றிய எங்கள் எண்ணங்களை அடக்குவதற்கான நோக்கத்துடன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

விடுதலைக்காக போராடும் பெண்களின் வாழ்க்கை முறை தவறாகவும், கீழ்த்தரமாகவும், விசமத்தனமாகவும் புனையப்பட்டிருக்கிறது. காரியம் நடக்க வேண்டி தமிழ் பெண்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்ற அச்சுறுத்தலை வேறு அது உலக மக்களுக்கு விதைக்கிறது. தமிழக மக்கள் எப்போதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நிற்பவர்கள். திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் மிகவும் ஆதரவளித்துள்ளனர். ஈழத் தமிழர்களை மோசமாக காண்பிக்கும் இது போன்ற திரைப்படங்களைத் தயாரிப்பதைத் தவிர்க்க வேண்டும், இதுபோன்ற படங்களில் நடிக்க வேண்டாம் என்றும், தயாரிக்க வேண்டாம் என்றும் ஒரு சுற்றறிக்கையை நடிகர் சங்கம் அல்லது தயாரிப்பாளர் சங்கம் வெளியிட வேண்டும்" என கூறியுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT