ADVERTISEMENT

கொண்டாட்ட நாயகன் தனுஷ்

10:57 AM Jul 28, 2023 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

"யார்ரா இவன் பென்சில்ல கோடு போட்ட மாறி.." என்று புதுப்பேட்டையில் வரும் வசனத்தைப் போல ஆரம்பக்கட்டத்தில் இவரைப் பார்த்து கேலி செய்தவர்கள், "தவுளோண்டு ஆங்கர் தாண்டா அவ்ளோ பெரிய கப்பலையே நிறுத்துது..." என்று வடசென்னையில் வரும் வசனம் போல் சிலாகித்துப் பேசுகின்றனர். அதற்கு காரணம் அவரது அயராது உழைப்பும் அசுரத்தனமான நடிப்பும். நடிப்பில் தான் ஒரு வேங்கை என்று 2 தேசிய விருதுகளைத் தட்டித் தூக்கிய அவர், நானே வருவேன் என்று கோலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டிற்குப் பறந்தார்.

அப்படிப் புயல் வேகத்தில் பறந்து கொண்டிருப்பவர், இன்று 40வது வயதில் காலடியெடுத்து வைக்கிறார். அவர் வேறு யாருமில்லை எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய், அஜித் என மூன்றெழுத்து மந்திரப் பெயரின் வரிசையில் பயணித்துக் கொண்டிருக்கும் தனுஷ். இன்றளவும் அவர் கொண்டாடப்படுவதற்கு சில முக்கியமான காரணங்களைப் பின்வருமாறு பார்ப்போம்.

கமர்ஷியல் மற்றும் ஆர்ட்

பொதுவாக ஒரு ஹீரோ ஆக்ஷன் ஹீரோ என்று அவதாரம் எடுத்த பின் பெரும்பாலும் கமர்ஷியல் கதைகளையே தேர்ந்தெடுத்து நடிப்பார்கள். ஆனால் கமர்ஷியலோடு கலந்து கதைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இது அவருடைய தனித்தன்மையைக் காட்டுகிறது.

பன்முகத்திறமை

முதலில் நடிகராகக் களமிறங்கிய தனுஷ், பின்பு 'நாட்டுச் சரக்கு' (புதுக்கோட்டையிலிருந்து சரவணன்) பாடகராக உருவெடுத்தார். குறிப்பாக அவர் பாடிய 'ஒய் திஸ் கொலைவெறி...' பாடல் உலகம் முழுவதும் அவரைக் கொண்டு சேர்த்தது. அதைத் தொடர்ந்து 'மயக்கம் என்ன' படத்தில் 3 பாடலுக்கு வரிகள் எழுதிப் பாடலாசிரியராக அறிமுகமான அவர் 3 படம் மூலம் தயாரிப்பாளராகவும் தனது பயணத்தைத் தொடர்ந்தார். நடிப்பு மட்டுமல்லாது தயாரிப்பிலும் (காக்கா முட்டை, விசாரணை) 2 தேசிய விருது வாங்கி அசத்தியுள்ளார். அதோடு இயக்கம் மீதும் தீராக் காதல் கொண்ட அவர் 'ப.பாண்டி' மூலம் அதையும் தீர்த்துக் கொண்டார்.

கெமிஸ்ட்ரி

ஹீரோயினைத் தாண்டி இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் எனத் தொழில்நுட்பக் கலைஞர்களுடனும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆனது. இயக்குநராகச் செல்வராகவன், வெற்றிமாறன், மித்ரன் ஆர் ஜவஹர், இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி பிரகாஷ் குமார், அனிருத். ஒளிப்பதிவாளராக வேல்ராஜ் ஆகியவர்களுடன் பணியாற்றிய படங்களே சாட்சி.

புது ட்ரெண்ட்

பக்கத்து வீட்டுப் பையன் போல் முகம், பொல்லாதவன் தனுசுக்கு விருப்பமான பைக் பின் நாட்களில் பல இளைஞருக்கு விருப்பமாகும் அளவுக்கு கதையின் நாயகனாக இளைஞர் மனதோடு ஒன்றிப்போயிருந்தார். 3 படத்தில் சூப் பாய்ஸ் என்ற பாடலுக்குப் பிறகு தான் அந்த வார்த்தை பிரபலமானது, அதன் தொடர்ச்சியாக அதே போன்ற வரிசையில் பல பாடல்கள் வந்தது. மேலும், தங்கிலிஷ் என்ற வார்த்தை பலரால் கவனம் பெற்றது. ரொம்ப நாள் கழித்து வேலை தேடும் இஞ்சினீயர் பட்டாதாரிகளின் வலிகளைச் சுமந்த வாழ்வினை வெகு எதார்த்தமாகக் காட்டி வெற்றி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையை விதைத்தது ’வேலையில்லா பட்டதாரி’. இப்படத்தில் 1 நிமிட டயலாக் பேசியது எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

கடந்து வந்த அவமானங்களை எல்லாம் தனது கடும் முயற்சியாலும், தொடர்ந்து செய்த உழைப்பினாலும், தன் மீது எரிந்த கற்களை எல்லாம் படிக்கற்களாக அடுக்கி அதன் மீது ஏறி நின்று காலம் கடந்து வெற்றிகரமான கதாநாயகனாகத் தன்னம்பிக்கை மனிதனாக நிற்கிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT