ADVERTISEMENT

சோழவரத்தில் காணாமல் போன கார்; பெங்களூரில் விபத்தானது எப்படி? - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 25 

05:53 PM Mar 19, 2024 | kavidhasan@nak…

ADVERTISEMENT

இன்சூரன்ஸ் பெறுவதற்காக நடத்தப்படும் பல்வேறு மோசடி, திருட்டு குறித்து நம்மிடையே தொடர்ச்சியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இன்சூரன்ஸ்க்காக நடந்த கார் விபத்து சம்பவத்தை பற்றி விவரிக்கிறார்.

ADVERTISEMENT

90களில் நடந்த வழக்கு இது. இரண்டு பெண்மணிகள் ஒரு நாள் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் ஆடம்பரமான நகைகளை அணிந்திருந்தனர். வந்ததும் அவர்கள் தாய், மகள் என்று அறிமுகம் செய்து கொண்டு தங்களுடைய ஸ்டாண்டர்ட் 2000 காரில் டிரைவர் எங்களை கூப்பிட பெங்களூர் வந்திருந்ததாக கூறினர். சோழவரத்தில் ஏரி அருகே நிறுத்திவிட்டு காலைக்கடனை முடித்து திரும்பி வந்து பார்க்கையில் காரை காணவில்லை என்று சொன்னார்கள். அவர்கள் சொன்ன ரூட் கொஞ்சம் சந்தேகமாகத்தான் தோன்றியது. ஏன் பெங்களூருக்கு அந்த வழியில் சென்றீர்கள் என்று கேட்கும் போதே நாங்கள் யார் தெரியுமா சார் என்ற தொனியில் ஆரம்பித்து அன்றிருந்த ஒரு பெரிய தலைவர் பெயரைச் சொன்னார்கள். எப்படி கேள்வி கேட்கலாம் என்பது போல மிரட்டலாகத் தான் பேசினார்கள். அவர்களிடம் இன்சூரன்ஸ் கிளைம் பேப்பரை கொடுத்து என்ன நடந்தது என்று எழுதிக் கொடுங்கள் என்றோம்.

நான்கு நாட்கள் கழித்து தொடர்பு கொள்கிறோம் என்று அனுப்பி வைத்தோம். நாங்கள் அடுத்த மீட்டிங் போட்டு இன்வெஸ்டிகேசனை ஆரம்பித்தோம். நடந்த இடத்திற்குச் சென்று விசாரித்ததில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது போலத்தான் சொன்னார்கள். கார் ஓட்டுநரும் இல்லை. அந்தக் கார் லக்ஸரி வகை என்பதால் எல்லா இடத்திலும் சர்வீஸ் செய்யமாட்டார்கள். எனவே அந்த காருக்கான குறிப்பிட்ட சர்வீஸ் சென்டரில் போய் கேட்ட போதும், அப்படி ஒரு கார் வரவே இல்லை என்றுதான் தகவல் கிடைத்தது. சந்தேகம் வந்து அந்த பெண்மணிகள் இருக்கும் அட்ரஸில் ஆள் வைத்து விசாரித்தோம் . விசாரித்ததில் நான்கு நாட்கள் முன்னாடி ஸ்டாண்டர்ட் 2000 கார் ஒன்று நொறுங்கி லாரியில் வந்தது. அந்த வீட்டு அட்ரஸை நான் தான் காண்பித்தேன். ஒரு மணி நேரம் கழித்து அந்த லாரி அப்படியே போய்விட்டது, என்று ஒருவர் சொன்னார். நொறுங்கி வந்த கார் எங்கு சென்றிருக்கும் என்று விசாரித்து பழைய கார்கள் போடுமிடமான புதுப்பேட்டையில் விசாரித்தோம். அந்த இடத்தில் வேலை செய்யும் ஒருவர் ‘எங்களுக்கு ஆஃபர் வந்தது. ஆனால் சொன்ன ரேட் ரொம்ப அதிகமா இருந்தது’ என்று கார் கம்பெனியிலேயே போட்டுவிட்டோம் என்றார். சொன்னது போல கம்பெனியில் போய் பார்த்தபோது அந்த கார் இருந்தது.

அதன் பின் தான் உண்மை தெரிந்தது. அங்கே விசாரித்ததில், அந்த கார் பெங்களூரில் விபத்தானது என்று சொன்னார்கள். ஆனால் இந்த பெண்மணிகள் சோழவரத்தில் காணாமல் போனதாகத்தான் புகார் அளித்திருந்தார்கள். அடுத்து எங்கள் குழு பெங்களூர் சென்றது. அங்கிருந்த காவல்துறை கமிஷனரிடம் விஷயத்தை சொன்னோம். ஒரு தமிழ்நாடு கார் ஆக்சிடென்ட் ஆனதாகவும் அதில் இரண்டு பெண்மணிகள் மது போதையில் கார் ஓட்டி வந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும், விசாரித்ததில், நாங்கள் சென்னையில் போய் வழக்கை பார்த்துக் கொள்கிறோம் என்று விமானத்தில் கிளம்பி விட்டனர் என்றார். அடுத்து அவர்கள் சென்னைக்கு ரிட்டன் வந்த விமான பயணச்சீட்டை நாங்கள் வாங்கிக் கொண்டு பெங்களூர் சிபிஐக்கு தகவலை கொடுத்துவிட்டு அந்த பெண்களை மறுநாள் வரவழைத்து, பெருங்களத்தூரில் இருக்கும் கார் கம்பெனியின் ஃபேக்டரியில் தான் அவர்களின் கார் இருந்தது. அதையும் காண்பித்து விட்டு இன்சூரன்ஸ் வழங்க முடியாது என்பதையும் தெளிவுபடுத்தி, எல்லா ஆவணங்களையும் சிபிஐ கைக்கு மாற்றிவிட்டோம். அதன் பிறகு வழக்காகி அவர்களுக்கான தண்டனை வழங்கப்பட்டது. இன்சூரன்ஸ் ஏமாற்றி பெறுவதற்காக இதுபோன்ற பல விசயங்களை செய்வார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT