ADVERTISEMENT

"ஒவ்வொரு கம்பிக்குப் பின்னாலும் ஒவ்வொரு மனிதர்கள்.." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #26

02:39 PM Mar 24, 2020 | suthakar@nakkh…

பனியின் சில்லிப்பில் மிகவும் நடுங்கியபடியே நடந்த நர்த்தனா அருகில் இருந்த கணவனை நோக்கி குற்றம் சாட்டும் பார்வையை பதித்தாள். சிம்லா என்றதும் பல்லைக் காட்டிக் கொண்டு நீயும் தானே கிளம்பினே என்பதாய் இருந்தது அவனின் பதில் பார்வை. ஹனிமூன் இப்படி சனிமூன் ஆகுமென்று இருவருமே எதிர்பார்க்கவில்லை. திருமணமாகி பத்து நாட்களில் திகட்ட திகட்ட இன்பம் மட்டுமே நேற்றுதான் சிம்லாவில் கால் வைத்தார்கள் களைப்பில் போர்வையின் கணகணப்பில் உறங்கலாம் என்றவளை மலைப் பிரதேசம் இரவு நேரம் போகமுடியாது ஒரு அரைமணிநேரம் என்று சொல்லிவிட்டு இழுத்து வந்திருந்தான் கணவன். அணிந்திருந்த பாதுகாப்பு உடையையும் தாண்டி கணவனின் சூடும் சேர்ந்து கொள்ள அரைமணி நேரத்திற்கு முன்பு வரையில் குளிர் உரைக்கவில்லை. ஆனால் இப்போது அதுவும் இந்த இடத்தைக் கடக்கும் போது உயிரை ஊடுருவும் குளிரை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

ADVERTISEMENT


ADVERTISEMENT


நடக்கும் தூரம் என்று ஹோட்டல் சிப்பந்தியிடம் கேட்டுத்தான் வந்திருந்தான் ஒருவேளை அதிக தூரம் நடந்திருப்பார்களோ வாட்சைப் பார்த்தாள் அரைமணியே காட்டியது சரி வா திரும்பிவிடலாம் என்று எத்ததனித்த போது வளைவில் அவர்கள் கண்ட காட்சி மேற்கொண்டு போகவிடவில்லை. அந்த பனி படர்ந்த பிரதேசத்தில் தட்டியைப் போல குச்சிகள் கொண்டு தடுப்புச் சுவர்களைத் தாண்டி கங்குகள் எரியத் தயார் நிலையில் இருந்தது. சற்றுநேரம் கங்குகளை எரியவைத்து குளிர்காயலாம் என்று எண்ணத்தில் மனைவியைப் பார்க்க இதுதான் இன்றைக்கு நீ செய்ததிலேயே உன்னதமான காரியம் என்று கண்களாலேயே பாராட்டு பத்திரம் வாசித்து முன் நடந்தாள். ரத்தத்தை உறைய வைக்கும் பந்தயத்தோடு பனியும் தன் கணவனை விடவும் அவள் உடலில் அதிகமாய் தன் கரங்களால் தழுவியதோ என்று யோசித்தப்படியே, அணைந்திருந்த கங்குகளின் அருகே சென்றதும் அதற்காகவே காத்திருந்தது போல் சட்டென அவை பற்றிக் கொண்டது. ஒரு விநாடி பயத்தில் உறைந்தாலும் முன்பே கங்குகளில் தீ புகைந்திருக்கலாம் என்று விளக்கம் கொண்டு சமாதானப்படுத்திக் கொண்டார்கள்.

குளிரில் விரைத்த நர்த்தனாவின் உடல் நெருப்பின் முன் நெகிழ்ந்தன சொல்லவொண்ணா புழுக்கம் அவளை ஆட்கொள்ள சுவட்டரை விலக்கும் யோசனையில் தன் கரங்களைத் தேடினாள். ஆனால் ஆடைகளோடு ஒட்டிக்கொண்டு அவை வெளியே வர மறுத்தன. எதிரில் நின்ற கணவனைப் பார்க்க அவனின் நிலையும் அதுவாகவே இருந்தது. அவர்களால் தன் உதடுகளையும் கூட அசைக்க முடியவில்லை. எப்போதோ சாப்பிட்ட டீயும், இரண்டு ரொட்டியும் ஜீரணமாகியிருக்க அவளுக்கு பசிவேறு வயிற்றைக் கிள்ளியது. அந்த நினைப்பு வந்த உடனேயே அவர்களின் முன் உணவு வகைகள் அணிவகுக்க எடுத்து உண்ண முடியாத நிலையில் நர்த்தனாவின் கண்களில் கண்ணீர் வந்தது. அவர்கள் முன் எறியப்பட்டிருந்த கங்குகள் குளிரை சற்று போக்கியடித்துக் கொண்டு இருந்தன. அம்மட்டில் கொஞ்சம் ஆறுதல் அடைந்தாள் நர்த்தனா.

அடுத்த நொடியே தண்ணீரை பீய்ச்சியடித்தாற்போல கங்கு எரிந்த சுவடே தெரியாமல் அணைந்து போனது. தங்களையும் அறியாமல் ஏதோ அமானுஷ்யவலையில் மாட்டிக்கொண்டோம் என்று உணர்ந்து கொண்டார்கள் அவர்களிருவரும். கங்குகள் தன்னை பனிக்குள்ளேயே இழுத்துக்கொள்ள இப்போது குளிர் மீண்டும் ஊடுருவியது அவளின் உடல் பனியில் முறுக்கினாற்போல் விரைக்க வலியில் கண்களில் வழிந்த நீர் கூட உறைந்து போனது அப்போதுதான் மற்றொரு மோசமான நிகழ்வும் நடந்தது மெல்ல மெல்ல அவர்களின் குளிர் போக்கி உடைகள் களையப் பட்டன. இப்போது இருவரும் தத்தம் இரவு உடைகளில் குளிர் அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று உடலின் மென்பாகங்கள் வெடிக்க ஆரம்பித்தன. கம்ப்யூட்டர் திரையின் பின்னால் இருந்து பார்த்தவாறே நின்றிருந்த சைலஜா நவீனின் தலையில் ஒரு கொட்டு வைத்தாள் என்னடா பண்றே அதான் சேவிங் ஆப்ஷன் இருக்கே அதைவிட்டுட்டு இன்னும் மோசமான கண்டிஷன்ஸ் கொண்டு போனா அவங்க செத்துடமாட்டாங்களா கேம்ல இந்த லெவல்தான் லாஸ்ட் இதுலே நீ தோத்துடுவேடா? என்று கேட்க தோக்கறது அப்பறம் ஆனா அவங்களோட இந்த அவஸ்தை ரொம்பவும் சுவாரஸ்யமா இருக்கு.

இதே நிலை நீடித்தால் அவர்கள் இவரின் கபாலமும் கூட வெடித்து இந்த பனித்துளிகள் மேல் உறைந்த ரத்தங்கள் தெளிக்கும் பார்க்க அழகாக இருக்கும் இல்லை , ஷைலு இதே மாதிரி நீயும் நானும் இப்படிப்பட்ட பனிப் பிரதேசத்தில் மாட்டிக்கொண்டால் என்ன செய்வே ? அவன் கேட்ட விதத்தில் ஒரு டிராகுலாவைப் பார்ப்பதைப் போன்ற பயத்துடன் அவனைப் பார்த்தாள் சைலஜா. அவனின் கைகளில் ஒரு கத்தி முளைத்திருந்தது. நவீன்....ஏன் அப்படி பாக்குறே? எப்படி பாக்குறேன் ஷைலு பயப்படாதே உனக்குத்தான் டிசைனர் வேர் புடவைகள் பிடிக்குமே? பைசா செலவில்லாம உன்னோட ரத்தத்திலேயே நான் டிசைன் பண்ணித்தர்றேன். கிட்டவா வலிக்காது டியர்...! நவீனின் கண்களில் மின்னிய வெறித்தனமான பளபளப்பை கண்டு, இரண்டு எட்டு பின்வாங்கினாள் ஷைலஜா. நவீன் நீ போய் தூங்கு என்றாள் எச்சில் விழுங்கியபடியே தூங்கலாம்....



அந்த பனிமாதிரி உன்னோட டிரஸ் கூட வெள்ளையாத்தான் இருக்கு இங்கே பக்கத்திலே வா ஷைலு நான் உன் ரத்தத்தில் சிகப்பா டிசைன் போடறேன். வக்கிரமான சிரிப்புடன் ஷைலஜாவை இலகுவாகப் பிடித்தான். அவளின் வயிற்றுப் பகுதியில் மெல்லிய கோடிழுத்தான் ரத்தம் மெல்லமெல்ல வடிந்து ஆடையை நனைத்தது. சுரீர் என்ற வலியில் அவனைத் தள்ளிவிட்டு பாய்ந்து சென்று கதவை அடைத்தவள் வெறிபிடித்தாற் போல கத்திய நவீனைப் புதிதாய் பார்த்தாள். என்னாயிற்று இவனுக்கு! வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஜன்னலின் வழியே அவனைப் பார்த்தாள். நவீன் பூட்டிய கதவை உடைக்கவில்லை நவீனின் பார்வை முழுவதும் ஹாலில் மாட்டப்பட்டு இருந்த ஷைலஜாவின் படத்தில் விழுந்தது அதில் கண்களை நோக்கி கத்தியைத் திருகினான். மனம் நிறைய காதலோடு உன் நினைவுகளை சுமக்கவே இந்த புகைப்படம் என்று காதல் பேசிய நவீன் இது இல்லை, கடவுளே என்னவாயிற்கு இவனுக்கு...! பயத்தில் அவளின் இதயத்துடிப்பு எகிறியது வயிற்றின் காயம் வேறு ஷைலஜாவிற்கு ஒரு இன்ஸ்டன்ட் மயக்கத்தைக் கொடுக்க, அவள் கண்விழித்தபோது, இருளை விரட்ட மருத்துவமனையின் விளக்குள் போராடிக் கொண்டு இருந்தன. அரைவட்டப் புள்ளியில் விரிந்திருந்த விழிகளில் மருத்துவரின் முகம்.

பரஸ்பர உடல் விசாரிப்புகளும் புரிந்து கொள்ள முடியாத மருத்துவ வார்த்தைகளும் கடந்த பிறகு, டாக்டர் நவீன்...? அவர் எங்கேயிருக்கார்?! இரண்டாவது மாடியில எங்க அப்சர்வேஷனில் இருக்கார், மனோதத்துவ முறைப்படி நடத்திய சோதனையில் தான் சில தகவல்கள் கிடைத்தது. நவீனுக்கு கிடைத்த புது ப்ரோஜெக்ட் இதை வெற்றிகரமா முடிச்சிட்டா லைப்பிலே செட்டிலாகிடலான்னு ஓய்வு உறக்கமில்லாம வேலையைச் செய்திருக்கிறார். சில நேரம் அவருக்கு டிப்ரஷன் அதிகமாகியிருக்கு இரண்டுமுறை அவர் சைக்காட்டிரிஸ்ட்டைக் கூட பார்த்திருக்கார். ஆனா அவருடைய மனசிதைவு கூட இருக்கிற நீங்க உணரலைங்கிறதுதான் ஆச்சரியமா இருக்கு. இல்லை ஸார் நவீன் இதுவரையில் இப்படி நடந்துகிட்டதே இல்லை. ம்...! வேலை அதிகமாக அதிகமாக அவருக்கு மனசிதைவும் அதிகமாச்சு, நிம்மதியாக உறங்கும் உங்களை பலநேரங்களில் வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்து இருந்திருக்கிறார். அதாவது அவருக்கு கிடைக்காத நிம்மதி, தனிமை, உறக்கம், சந்தோஷம், ஒரு சிரிப்பை கூட சொல்லலாம் நீங்க அதெல்லாம் சுதந்திரமா அனுபவித்தது அவருக்கு பிடிக்கலை, அதன் வெளிப்பாடுதான் உங்களையே அவர் கொல்ல வந்தது.

இப்போ நவீன்....அவரை நான் பார்க்கலாமா?!

இப்போதைக்கு அது சாத்தியமில்லை கொஞ்ச நாள் அவருக்கு தொடர்ந்து கவுன்சிலிங் தேவைப்படுது அதுக்குபிறகு நீங்க அவரைப் பார்ப்பதுதான் நல்லது உங்க மேல உள்ள கோபமும் குறையும். அதுவரையில் அமைதியா இருக்கணும். கண்ணாடித் தடுப்புக்கு அப்பால் மயக்கத்தின் பிடியில் உறங்கிக் கொண்டிருந்த நவீனை கண்ணீரோடு பார்த்துக் கொண்டு இருந்தாள் ஷைலஜா. ஒவ்வொரு கம்பிக்குப் பின்னாலும் ஒவ்வொரு மனிதர்கள். இப்படியும் இவர்கள் மற்றொரு கோணத்தில் தொடரும் அடுத்தவாரம்...!

"இறப்பின் இதம் கூட சுகம்தான் இதயத்தைக் கூறுபோடும் இரக்கமற்ற நிகழ்வுகளைக் காட்டிலும்.." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #27

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT