/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/marriage-art.jpg)
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வாணியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 25). விவசாயியான இவர்முகநூல் (facebook) பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார். மேலும் இதன் மூலம் பல்வேறு நபர்களை நண்பர்களாகச் சேர்த்து தகவல்களை பரிமாறிக் கொள்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார்.
இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வேலூர் மாவட்டம் விருதம்பட்டு பகுதியைச்சேர்ந்த மகாலட்சுமி என்பவரும் முகநூல் மூலம் அருள்ராஜிடம் நண்பராக சேர்ந்துள்ளார். மகாலட்சுமி 'தான் அனாதை என்றும், தனக்கு பெற்றோர் இல்லை என்றும், தன்னை உண்மையாக நேசிக்கும் நண்பர் தேவை' என்றும் இரக்கம் ஏற்படும்படி கூறி அருள்ராஜிடம் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அருள்ராஜை காதலிப்பதாகக் கூறியுள்ளார். மகாலட்சுமியின் ஆசை வார்த்தைகளை நம்பி அருள்ராஜ் அவரை உண்மையாக காதலித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தனது பெற்றோரிடம் பேசி திருமணம் செய்ய அனுமதி வாங்கிய அருள்ராஜ் கடந்தஆண்டு ஜனவரி 23 ஆம் தேதிஅன்று திருவதிகையில் உள்ள கோயிலில் மகாலட்சுமியை முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்து 4 மாதத்திற்குப் பிறகு, 'சென்னையில் தனது தோழிக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். அவரை பார்த்துவிட்டு வருகிறேன்' என்று கூறிவிட்டு மகாலட்சுமி சென்றுள்ளார். மறுநாள் காலையில் அருள்ராஜ் பார்த்தபோது வீட்டில் இருந்த 7 பவுன் தங்க நகை, ரூபாய் 85 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றைக் காணவில்லை. செல்போன் மூலம் மகாலட்சுமியை பலமுறை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப்ஆகியிருந்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த அருள்ராஜ் மனைவி கொடுத்த முகவரிக்கு சென்று விசாரித்த போது அதுபோன்று இங்கு யாரும் இல்லை எனக் கூறியுள்ளனர். இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்தார் அருள்ராஜ்.
இந்த சூழ்நிலையில் தொலைக்காட்சியில் பல்வேறு நபர்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு பணம், நகை திருடிய மகாலட்சுமி குறித்து செய்தி வெளியானதை கண்ட அருள்ராஜ்., தன்னை போல்இதுவரை 8 பேரைஏமாற்றிதிருமணம்செய்த பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார், மோசடி செய்த மகாலட்சுமி என்ற பெண்ணை தேடி வருகின்றனர். இந்தப் பெண்ணின் முழு நேர வேலையே பேஸ்புக் மூலம் கல்யாணம் ஆகாத ஆண்களிடம் பழகி அவர்களை காதலிக்கிறேன் என முதலில் ஆசை வார்த்தை கூறி, அவர்களை காதல் வலையில் விழ வைத்துதிருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கூறி அவர்களை திருமணம் செய்து கொள்வார். அதன்பிறகுதான் அவரின் சுயரூபம் தெரியவரும். திருமணமான முதல் நாளில் தனது கணவர்களிடம் தனக்கு அவசர வேலை இருப்பதாகக் கூறிவிட்டு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நகை, பணம் உள்ளிட்டவற்றை அபேஸ் செய்து கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/marriage-art-2.jpg)
இதேபோன்று மகாலட்சுமி கடலூர், விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஆண்களிடம் கைவரிசையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் மகாலட்சுமி கடந்த இரண்டு தினங்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரையும் தனது பாணியில் திருமணம் செய்து நகை பணத்தை அபேஸ் செய்து சென்றது தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியானது. மகாலட்சுமியை போலீசார் கைது செய்து விசாரிக்கும் பட்சத்தில் எத்தனை ஆண்கள் மகாலட்சுமியிடம் ஏமாந்து இருக்கிறார்கள் என்பது தெரியவரும். மேலும் இந்த சம்பவத்தில் மகாலட்சுமி மட்டும் ஈடுபட்டுள்ளாரா அல்லது இவர்கள் ஒரு குழுவாக செயல்படுகின்றனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)