ADVERTISEMENT

நேபாள அணியை வீழ்த்தியது இந்திய அணி!

11:39 AM Sep 05, 2023 | dassA

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் நேற்று (04-09-2023) இந்தியா-நேபாளம் அணிகள் மோதின. இதில் டக்வர்த் லெவிஸ் விதிமுறைப்படி இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் நேபாள் அணியை துவம்சம் செய்தது.

ஆசியக் கோப்பை 2023ன் நான்காவது லீக் ஆட்டம் நேற்று பல்லக்கலே ஸ்டேடியத்தில் இந்தியா-நேபாள் இடையே நடந்தது. இந்திய அணி பாகிஸ்தானிடம் முதல் ஆட்டத்தில் டிரா செய்தது. இதனால், நேபாளத்துடன் வென்றே ஆக வேண்டும் என்ற சூழல் உருவாகியது. முதல் போட்டியில் நேபாளும் பாகிஸ்தானிடம் தோற்றுள்ளதால் அவர்களும் வென்றால் தான் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற முடியும். இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, பௌலிங்கை தேர்வு செய்தார். நேபாள் அணியின் குஷால்-ஆசிப் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். வேகமான ஆட்டத்தை இருவரும் வெளிப்படுத்த அணியின் ஸ்கோர் அதிகரிக்கத் தொடங்கியது. இந்திய வீரர்கள் 4 ஓவர்களில் 3 கேட்ச்களை நழுவ விட்டனர். பின்னர், குஷால், 25 பந்தில் 38 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். நேபாள் முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்திருந்தது. அடுத்து வந்த வீரர்கள் பீம் சர்கி 7 ரன்கள், கேப்டன் ரோகித் பாடேல் 5 ரன்கள், குஷால் மல்லா 2 எனத் தொடர்ச்சியாக ஆட்டம் இழந்து நேபாள் தடுமாறியது. இவர்கள் மூவரையும் தனது சூழல் பந்தில் சிக்க வைத்தவர் ரவீந்திர ஜடேஜா தான். 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த நேபாள் அணி 101 ரன்கள் எடுத்திருந்தது.

அணி வீரர்கள் வரிசையாக சரிந்தாலும், தொடக்க வீரர் ஆசிப் ஷேக் நிதானமாக 97 பந்தில் 58 ரன் அடித்து ஆட்டம் இழந்தார். தொடர்ந்து, குல்ஷன் ஷா-திபேந்திரா இருவரும் சற்று ஆட்டத்தை நிதானப்படுத்தினர். பின்னர், குல்ஷன் ஷா 23 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய சோம்பால், அதிரடியாக 2 சிக்ஸர்களை விளாச நேபாள் 200 ரன்களை எட்டியது. சோம்பால் கடைசியாக வந்தாலும் 48 ரன்களை அணிக்கு சேர்த்துவிட்டு வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, நேபாள் அணி 48.2 ஓவரில் 230 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியில் முகமது சிராஜ், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி சிறப்பாக பந்து வீசினர். இந்தியா 230 ரன்கள் எடுத்தால் வெற்றி எனக் களம் இறங்கியது.

இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா-சுப்மன் கில் களமிறங்கினர். 2.1 ஓவர்களுக்கு 17 ரன்கள் இந்திய அணி சேர்க்க, மழை தொடங்கியது. ஒன்றரை மணி நேரம் பெய்த மழை 10 மணிக்கு நின்றது. பின்னர் ஆட்டம் 10.15க்கு டிஎல்எஸ் (டக்வர்த் லெவிஸ் மெதட்) விதிமுறையில் தொடங்க, இந்தியாவிற்கு 23 ஓவரில் 145 ரன்கள் இலக்கு தீர்மானிக்கப்பட்டது. வெற்றி பெற்றாக வேண்டும் என மீண்டும் களம் கண்ட ரோகித்-சுப்மன் கூட்டணி அதிரடியாக விளையாடத் தொடங்கியது. ஆட்டத்தில் சிக்ஸரும், பவுண்டரிகளும் நின்றுவிட்ட மழைபோல மீண்டும் பெய்தது. பின்னர் ரோகித் 49 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து கில்லும் 47 பந்துகளில் அரைசதம் விலாச, இந்தியா வெற்றி வாய்ப்பை பாதி உறுதி செய்தது. இதன்மூலம் இந்திய அணி 14 ஓவரில் 100 ரன்களைத் தாண்டி சென்றது. மேலும் இரண்டு வீரர்களும் அதிரடி காட்ட, இந்தியா 20.1 ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து வைத்து வெற்றி பெற்றது. இறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நேபாள் அணியை வென்றது இந்திய அணி. இதனால், சூப்பர் 4 சுற்றுக்கு நுழைந்தது.

ஆட்டம் முடிவில் சுப்மன் கில் 62 பந்தில் 67 ரன்களும், ரோகித் சர்மா 74 ரன்களை 59 பந்துகளில் விளாசி ஆட்டநாயகன் விருதும் பெற்றார். இன்றைய லீக் ஆட்டத்தில் இலங்கை - ஆப்கானிஸ்தான் கடாபி ஸ்டேடியத்தில் மோதவுள்ளது. ஆப்கான் பெருவாரியான ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தினால் சுப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறலாம். ஆனால், அதற்கான வாய்ப்புகளும் குறைவே. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 3.00 மணிக்கு தொடங்கும்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT