India put a dot on Sri Lanka's victories!

Advertisment

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றின் நான்காவது ஆட்டத்தில் நேற்று (12-09-2023) இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இரு அணிகளும் சிறப்பாக பந்து வீச ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது.

ஞாயிறு தொடங்கிய இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் மழைக்காரணமாக திங்கள் வரை நடைபெற்றது. அதில், இந்தியா அபார வெற்றி பெற்றது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், மறுநாள் இந்திய இலங்கையுடன் விளையாடும் சூழல் உருவானது. மேலும் ஓய்வில்லாமல் இந்திய அணியால் சிறப்பாக விளையாட முடியுமா என்ற கேள்விகளும் எழுந்தது.

இந்த நிலையில் தான் நேற்று (12-09-2023) பிரேமதாச ஸ்டேடியத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி சார்பில் தொடக்கத்தில் ரோகித்-சுப்மன் கில் கூட்டணி களமிறங்கியது. போட்டியின் தொடக்கத்தில் இந்திய அணி தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தியா தனது முதல் விக்கெட்டை 80 ரன்களில் தான் இழந்தது. இதனால், மிகப்பெரிய இலக்கை இந்தியா நிர்ணயிக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுபம்ன் கில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.பின்னர் விராத் கோலி களமிறங்க புதிய நம்பிக்கை பிறந்தது. ஏற்கனவே, களத்தில் இருந்த ரோகித் சர்மா சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். மேலும் கோலியும் களமிறங்கியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஆனால், வந்த வேகத்தில் 3 ரன்களில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தார் விராத்.

Advertisment

அடுத்து மூணாவது விக்கெட்டுக்கு விளையாட வந்தார் இஷான் கிஷன். சிறப்பாக விளையாடி ரோகித் சர்மா 53 ரன்கள் எடுத்து துணித் வெல்லலகே சுழலில் சிக்கி அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 91 ரன்களுக்கு 3 வீரரை இழந்து தடுமாறத் தொடங்கியது. தொடர்ந்து, சரிவை சந்திந்த இந்திய அணியை நிமிர்த்த களமிறங்கினார் கே.எல்.ராகுல். இஷான் கிஷனும் ராகுலும் கூட்டணி அமைத்து நிதானமா ஆட்டத்தை நகர்த்தினர். இதனால் ஆட்டம் இந்தியா கைவசம் வரத் தொடங்கியது. இருந்தும் மறுமுனையில் இலங்கையின் பவுலிங் எதிர்கொள்ள முடியாத அளவிற்கு இருந்தது. அதிலும், துணித் வெல்லகலே பந்தை எதிர்கொள்ள மிகக் கடினமாகவே இருந்தது. ஆகையால், கே.எல் ராகுல் 39 ரன்களில் வெல்லகலேவின் சுழற்பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இவரைத் தொடர்ந்து ஹர்டிக் பாண்டியாகளமிறங்க, இஷான் கிஷனும் அவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இப்படி தொடர்ந்து ஜடேஜாவும் சொற்ப ரன்களில் வெளியேறியதால் இந்தியா 178 ரன்களுக்கு 7 வீரர்களை இழந்து சோக நிலையில் இருந்தது. இருந்தும் அக்சர் படேல் நிதானமாக விளையாடி 26 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு சேர்த்து வலுசேர்த்தார். அடுத்து பும்ரா, குல்தீப் யாதவ் இருவரும் மிகக் குறைந்த ரன்களில் வெளியேற இந்தியா 213 ரன்களில் ஆல்-அவுட் ஆகியது. இதற்கு முழுமுதல் காரணம் இலங்கையின் அபார பந்து வீச்சுதான். இலங்கை பந்து வீச்சில், துணித் வெல்லகலே 5 விக்கெட், சரித் அசல்ங்கா 4 விக்கெட், மஹீஷ் தீக்சனா 1 விக்கெட் என இந்திய அணியை திக்குமுக்காட வைத்தனர்.

இரண்டாம் பாதியில் பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணிக்கு 214 ரன்கள் இலக்கை இந்தியா நிர்ணயித்திருந்தது. ஒரு நாள் போட்டியில் 213 ரன்கள் என்பது கணிசமான தொகை தான். இதனை வைத்தே ஆட்டத்தை பவுலிங் மூலம் வெற்றிபெற முடியும் என்பதைத் தான் இந்தியா நிரூபித்துள்ளது. இலங்கை சார்பில் நிசங்கா-கருணரத்னே கூட்டணி முதலில் களமிறங்கினர். ஆனால், இரண்டாம் ஓவரில் இருந்து இலங்கை அணி தடுமாறத் தொடங்கியது. இலங்கை வீரர் நிசங்கா 6 எடுத்து வெளியேற, அடுத்து களமிறங்கிய குஷால் மேன்டிசும் 15 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இவர்களைத் தொடர்ந்து கருணரத்னே 7.1 வது ஓவரில் சிராஜ் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால், இலங்கை அணி 25 ரன்களுக்கே 3 விக்கெட்டை இழந்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து நெருக்கடி நிலைக்கு சென்ற இலங்கையை அணியை சதிராவும் அசலன்காவும் சேர்ந்து மீட்க முயன்றனர். ஆனால், சதீரா 17 ரன், அசலங்கா 22 ரன் என ஆட்டம் இழந்து ஏமாற்றமளித்தனர். இந்திய அணியின் பவுலிங்கை எதிர்கொள்ள இலங்கை மிகவும் சிரமப்பட்டது. அதிலும், குல்தீப் யாதவ் அருமையாக வீசினார். இதனால், இலங்கை அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் 162 ரன்களுக்கே 7 வீரர்களை இழந்திருந்தது இலங்கை அணி. இலங்கை சார்பில் தனஞ்ஜெய டி சில்வா 41 ரன்களும், அடுத்து களமிறங்கிய தீக்சனா, கசுன் ரஜிதா, பதிரானா அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இருந்தும் இலங்கை அணியை தூக்கி நிறுத்த மிகவும் முயற்சி செய்தார் துணித் வெல்லகலே. பவுலிங்கில் எப்படி 5 விக்கெட் எடுத்து அசத்தினாரோ, அதேபோல் பேட்டிங்கிலும் 42 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார்.

இருப்பினும், இலங்கை 10 விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால், இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஆசிய கோப்பை 2023ன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்திய அணியில், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள், பும்ரா, ஜடேஜா இருவரும் 2 விக்கெட், சிராஜும் பண்டியாவும் தலா 1 விக்கெட் எடுத்தனர். ஆனால், ஆட்ட நாயகன் விருது 5 விக்கெட் எடுத்து, 42 ரன்களையும் விளாசிய துணித் வெல்லகலே பெற்றார். தொடர்ந்து இரண்டு நாளில் இரண்டு ஆட்டங்களை விளையாடிய இந்தியா இரண்டிலும் வெற்றி பெற்று சிறந்த அணி என்பதனை நிரூபித்துள்ளது.

இலங்கை நேற்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்துள்ளது. எனவே, பாகிஸ்தான் அணிக்கும் இலங்கைக்கும் இறுதி போட்டியில் நுழையும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், இந்த இரு அணிகளும் நாளை ஒரே ஆட்டத்தில் எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெரும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெரும். இதனால் நாளைய ஆட்டம் அந்நாட்டு ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட் தான். நாளை நடக்கும் ஆட்டம் பிரேமதாச ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி 3.00 மணிக்கு தொடங்கும்.