Skip to main content

ஒழுக்கமான ஆளு இப்படி பண்ணிட்டாரே !

Published on 23/02/2019 | Edited on 23/02/2019

பொதுவாக புகழ், செல்வத்துடன் இருக்கும் நபர்களைப் பார்த்து, "எனக்கும் அவருக்கும் ஒரே நட்சத்திரம், ஒரே ராசிதான். ஆனால் எனக்கு மட்டும் அவை கிடைக்கவில்லை' எனவும், "எத்தனை குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி வந்தாலும் எனக்கு மட்டும் கஷ்டம் தீரவில்லை' என்றும், "ஜோதிடர்கள் சொன்ன எத்தனையோ பரிகாரங்கள் செய்தும் நிவர்த்தி ஆகவில்லை' எனவும் சொல்பவர்கள் அதிகம். இந்த வேறுபாடான பலனுக்குக் காரணம் அவரவர் சுயஜாதகத்தில் நடக்கும் தசையே. "திருடப்போனாலும் திசை பார்த்துப் போகணும்' என்பதன் பொருள், எல்லாராலும் திருடச்சென்று சிக்காமல் பொருள் கொண்டு வரமுடியாது. அவரவருக்கு நடக்கும் தசையே வெற்றி, தோல்விகளை நிர்ணயிக்கும்.
 

jathaga kathambam temple

"ஒன்றுக்கும் உதவாதவன் திடீர்னு இந்த மூணு நாலு வருஷத்துல கோடீஸ்வரனாகிட்டான். பிரபலமாகிட்டான். குடிகாரனா இருந்தவன் நல்லவனாகிட்டான். எதிரி மாதிரி அடிச்சுக்கிட்டவங்க- விவாகரத்து வாங்குன கணவன்- மனைவி திடீர்னு ஒண்ணா சேர்ந்துட்டாங்க. என்ன நடந்ததுன்னு தெரியல' என பல ஆச்சரியங்களையும், அதிர்ஷ்டங்களையும் தருவது ஒவ்வொருவருக்கும் நடக்கும் தசையின் மாற்றங்களே. "ஒழுக்கமான ஆளு இப்படி பண்ணிட்டாரே- நேற்று நல்லா இருந்த மனுஷன் இன்னைக்கு விபத்துல மாட்டிக்கிட்டாரே- நல்லா தொழில் செஞ்சாங்க; நல்லாதான் வருமானம் வந்தது. திடீரென்று கடனாகி, வீட்டை விற்று, ஊர் மாறிப்போயிட்டாரு' என அதிர்ச்சிகளைத் தருவதும் ஜாதகரின் தசைப்பலனே.பிறந்த நட்சத்திரத்திற்கான அதிபதியே ஜாதகரின் பிறந்த நேர முதல் தசையாகும். ஒவ்வொரு தசையும் குறிப்பிட்ட வருடங்கள் கொண்டது.உதாரணமாக கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசை சூரிய தசை; அதன் வருடம் ஆறு. பிறந்த ஜாதக அடிப்பைடயில் சூரிய தசை இருப்பு வருடம் முடிந்தபின் சந்திர தசை பத்து வருடங்கள் என, இப்படி அட்டவணையில் உள்ளபடி தொடர்ந்து நடைபெறும். மனிதனின் முழு ஆயுள் 120 வருடங்கள். அந்த 120 வருடத்தையே ஒன்பது கிரகங்களாகப் பிரித்துக் கொடுத்துள்ளனர்.
ஜாதகத்தில் ஒவ்வொரு தசை மாறும்போதும் வாழ்க்கையில் ஒவ்வொருவித மாற்றங்கள் ஏற்படும்.

தசைப்பலன்
பொதுவாக லக்னத்திற்கு கேந்திர (1, 4, 7, 10), திரிகோண (1, 5, 9) ஸ்தானத்திற்குரிய தசை நடந்தால் அதிக நன்மையைத் தரும். லக்னாதிபதி, ராசியாதிபதி தசை, லக்னம், ராசி அமர்ந்திருக்கும் நட்சத்திர அதிபதி தசை வரும்போது கிரகம் வலுப்பெற்றிருந்தால் மிகச்சாதாரண நிலையில் இருப்பவரையும் கோடீஸ்வரனாகவும், புகழ் பெற்றவராகவும் மாற்றிவிடும். மேலும் 2, 7-க்குடையவன் தசை, 4, 9-க்குடையவன் தசை என இரண்டு சுப ஸ்தான தசை, இரண்டு கேந்திர, திரிகோண தசைகள் அதியோகத்தைத் தரும். சுபகிரகப் பார்வை பெறும் தசை, தன, லாபஸ்தானாதிபதி தசைகள் அதிக வருமானத்தையும், நான்காம் அதிபதி தசை வீடு, வாகன யோகம் சொகுசான, சந்தோஷமான வாழ்க்கையையும் தரும்.

தசைப்பலன் கணிக்கும் முறை
நடக்கின்ற தசை, அடுத்து நடக்கப்போகும் தசைப் பலனை மேற்கண்ட பொதுமுறைகளில் கணக்கிட்டாலும், தசையின் கிரகத்தின் நிலையறிந்தே முழுப்பலன் அறியமுடியும். உதாரணமாக, அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசை கேது தசையாகதான் இருக்கும். அதற்காக கேது தசைக்குரிய பொதுப்பலன்கள், கேது தசை நடக்கும் எல்லாருக்கும் ஒரேமாதிரியாக இருக்காது. ஏனென்றால் ஒருவரின் பிறந்த நேரத்தைப் பொருத்து லக்னம் மாறுபடும். லக்னத்திற்கு எந்த ராசியில் கேது இருக்கிறது, லக்னத்திற்கு எத்தனையாவது இடத்தில் கேது இருக்கிறது, சுப, அசுப கிரகச் சேர்க்கை இருக்கிறதா, எந்த நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளது, சுப, அசுப கிரகப் பார்வை உள்ளதா, அம்சத்தில் பலம் பெற்றுள்ளதா, பலமிழந்துவிட்டதா, பலம் பெறுவது கிரகத்திற்கு நன்மையா, தீமையா, எத்தனையாவது தசை, லக்னத்திற்கு நட்பா, பகையா, சுபகிரகமா, நடப்பு கோட்சாரத்தில் குரு பலம், சனி பலம் என்ன? பூர்வ புண்ணிய பலம் இருக்கிறதா, சுயஜாதகத்தில் இருக்கும் கிரகங்கள் ஆட்சி பெற்று வலுப்பெற்றுள்ளதா, நீசம் பெற்று வலுவிழந்துள்ளதா, லக்னத்திற்கு வலுப்பெறுவது நன்மையா தீமையா போன்ற ஜாதகத்தின் நினையைப் பொருத்தே அந்த தசை எத்தனை சதவிகித நன்மை தரும் என கணக்கிடமுடியும். பொதுவாக தசையின் முதல் புக்தியான சுயபுக்தியில் நன்மை நடந்தால் தசையில் நன்மை குறைந்தே நடக்கும் என்றும், தசை பாதிக்குமேல் நன்மை தரும் என்றும், தசையின் வருடங்களை 3, 4-ஆகப் பிரித்தும் பலன் கூறுவது தோராயமாகவும், பொதுப்படையாகவுமே அமையும். தசையின் முழுப்பலன் அறிய புக்திகளையும் கணக்கிடவேண்டும்.

பரிகாரங்கள்
நடக்கும் தசைக்குரிய தெய்வங்கள், நின்ற நட்சத்திராதிபதி தெய்வங்கள் மற்றும் புக்தி கிரகத்தின் தெய்வங்களைக் கண்டறிந்து, அதற்கேற்ப வழிபாடு செய்வது அவசியம். பசித்தவருக்கு உணவு தருவது, உடையற்றவருக்கு உடை, ஊனமுற்றோருக்கு உதவுதல், ஏழைக்கு கல்வி தருவது போன்றவை தீமைகளைக் குறைத்து நன்மையை அதிகப்படுத்தும். முடிந்த அளவு நேர்மையுடன்- தன்னம்பிக்கையுடன் உழைத்தால் யோகம் கிடைக்கும். திசைக்குரிய தெய்வத்திற்கு விரதமிருந்து வழிபட ஆரோக்கியமான வாழ்வு பெறலாம்.
 

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம்; பக்தர்கள் உற்சாகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Meenakshi - Sundareswarar Chariot; Devotees excited

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

மேலும், மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுக்காக மதுரை வந்தடைந்தார். கள்ளழகர். உடன் பாரம்பரியமாக கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.