Skip to main content

மங்கள வாழ்வுக்கொரு பங்குனிப் பௌர்ணமி! பங்குனி உத்திரம்- 30-3-2018

Published on 29/03/2018 | Edited on 30/03/2018


ங்குனி மாதம், உத்திர நட்சத்திரம் கூடிவரும் பௌர்ணமி நாள் பங்குனி உத்திரத்திருநாள். 12-ஆவது மாதமான பங்குனியும் 12-ஆவது நட்சத்திரமாகிய உத்திரமும் இணையும் நாள். இந்நாளில் தெய்வத் திருமணங்கள் பல நடந்துள்ளதால் இது மேலும் பன்மடங்கு சிறப்புக்கொண்ட நாளாகிறது. எனவே இந்த நாளை கல்யாண நோன்பு, கல்யாண விரத நாள் எனவும் புராணங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.

கன்னிப் பெண்கள் பங்குனி உத்திர நாளன்று கல்யாண விரதம் கடைப்பிடித்து, அன்று ஆலயங்களில் நடைபெறும் இறைவனின் மணக்கோலத்தை தரிசித்தால் விரைவில் திருமணம் கைகூடும்.

சில கோவில்களில் தீர்த்தவாரி நடைபெறும். அப்போது அந்தந்த தலங்களிலுள்ள கடல், ஏரி, ஆறு, குளம் போன்றவற்றில் புனித நீராடினால் பெரும் புண்ணியம் கிட்டும். திருவிளக்கு தீபத்தில் பங்குனி உத்திரத்தன்று சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாக எழுந்தருளியிருப்பதாக ஐதீகம்.

அன்று வயதுமுதிர்ந்த தம்பதி களுக்கு உணவிட்டு உபசரித்து வாழ்த்துப்பெற்றால், விரைவில் திருமணம் கைகூடும்.

பரமேஸ்வரனை பார்வதி கரம்பிடித்த நன்நாளிது. அன்று மதுரையில் மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் திருமண வைபவத்தை ஆண்டுதோறும் நடத்துவார்கள். முருகன் தெய்வானையை அன்றுதான் திருமணம் புரிந்துகொண் டார். வள்ளியின் அவதார தினமும்,

 

ram-sita
 


ஸ்ரீலட்சுமியின் அவதார தினமும் இதே நாள்தான். ஸ்ரீமகாலட்சுமி பங்குனி உத்திர விரதமிருந்துதான் திருமாலின் மார்பில் இடம்பிடித்தாள். பிரம்மன் தன் நாவில் சரஸ்வதியை வைத்துக்கொண்டதும் பங்குனி உத்திர தினம்தான்.ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்- ரங்கமன்னார் திருமண வைபவம் இந்த நாளில்தான் நடந்தது. காஞ்சியில் காமாட்சி- ஏகாம்பரேஸ்வரர் திருமண வைபவம் பங்குனி உத்திரத்தில்தான் நடைபெறும். அச்சமயம் அதேமண்டபத்தில் பலர் சுவாமி முன்னிலையில் திருமணம் புரிந்து கொள்வதை இன்றும் காணலாம்.

ராமபிரான்- சீதை, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- ஸ்ருதகீர்த்தி ஆகிய நான்கு ஜோடிகளும் மிதிலையில் ஜனகர் அரண்மனையில் ஒரே மேடையில் பங்குனி உத்திரத் தன்று திருமணம் செய்துகொண்டனர்.

 



காஞ்சி வரதராசப் பெருமாள்- ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார், பெருந்தேவித் தாயார் ஆகியோர், பெருந்தேவித் தாயார் சந்நிதியில் ஒன்றாகக் காட்சிதருவார்கள். பங்குனி உத்திரத்தன்று திருமழப்பாடியில் நந்திதேவர்- சுயம்பிரபை திருமணம் நடைபெற்றதும், சந்திரன் 27 கன்னியரை மணந்ததும் இதே நாளில்தான்.

சபரிமலை ஐயப்பன் அவதாரம், அர்ச்சு னன் பிறப்பு, காரைக்கால் அம்மையார் முக்திபெற்றது பங்குனி உத்திரத்தன்றுதான். சிவனின் தவத்தைக் கலைத்த காமனை நெற்றிக்கண்ணால் எரித்த ஈஸ்வரன், ரதிதேவியின் உருக்கமான வேண்டுகோளால் மன்மதனை பங்குனி உத்திரத்தன்றுதான் உயிர்ப்பித்து ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி செய்தார்.

திருவையாறு அருகேயுள்ள திங்களூர் ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று காலை 6.00 மணிக்கு சூரிய ஒளிக்கதிர் சிவலிங்கத்தின் மேல்படும். அதுபோல மறுநாள் மாலை 6.00 மணிக்கு சந்திரனின் ஒளிக்கிரணங்கள் சிவலிங்கத்தின்மேல் படும் அதிசயத்தைக் காணலாம். இதை தரிசிப்போரின் பாவங்கள் விலகும். அன்று தண்ணீர்ப் பந்தலமைத்து நீர் மோர், பானகம் வழங்கினால் வற்றாத வளம்பெறலாம். 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதமிருப்போருக்கு மறுபிறவியில்லை என்பர்.


 

lord murugan


 


முருகன் ஆலயமெங்கும் பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெறும். சிவாலயங்களிலும் இவ்விழா நடத்துவதைக் காணலாம். பழனியில் இவ்விழா பத்து நாட்கள் நடைபெறும். பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்துவருவார்கள். கொங்கு நாட்டு மக்கள் காவிரியின் கொடுமுடி தீர்த்தத்தை காவடியில் நிரப்பி, மகுடேஸ்வரரை வழிபட்டு, கால்நடையாக தீர்த்தக் காவடியுடன் பழனிவந்து தண்டாயுதபாணியை வழிபட்டுச் செல்வார்கள்.

கர்நாடகாவிலுள்ள மேலக்கோட்டை என்ற திருநாராயணபுரத்தில் பங்குனி பிரம்மோற்சவம் பத்து நாட்கள் நடைபெறும். அதில் வைரமுடி சேவை விழா ஆறாம் நாளான பங்குனி உத்திரத்தில் இரவு நடைபெறும்.

திருமால் தானே தோன்றிய நான்கு ஸ்வயம்வியக்த க்ஷேத்திரங்களில் நாராயணபுரம் ஒன்று. மற்றவை காஞ்சி, திருப்பதி, ஸ்ரீரங்கம் ஆகும். இதை காஞ்சி கொடையழகு, ஸ்ரீரங்கம் நடையழகு, திருப்பதி வடையழகு, மேலக்கோட்டை முடியழகு என்பர்.

இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட பங்குனி உத்திர நன்னாளில் இறைநினைவில் தோய்ந்து இன்புறுவோம்.

- இராதாபாய்

Next Story

ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டு முருகன் உண்ணாவிரதம்!!!

Published on 09/06/2020 | Edited on 09/06/2020

 

 Rajiv Gandhi Case - Murugan

 

முன்னாள் இந்திய பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக இருந்தவருமான ராஜிவ்காந்தி, 1991 மே மாதம் மனிதவெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் என 4 பேருக்கு மரண தண்டையும், ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் என 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றம் கருணை அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு ஆயுள்தண்டனையாக குறைத்தது.


சுமார் 28 ஆண்டுகாலமாக சிறையில் இருப்பதால் தாங்கள் இரண்டு ஆயுள்தண்டனை காலத்தை கடந்துவிட்டோம், எங்களை விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தும், சட்டப்போராட்டம் நடத்தியும் வருகின்றனர். இதனை பாஜக அரசும், தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசும் கண்டுக்கொள்ளவில்லை.

இதற்கிடையில் சிறைக்கைதி முருகனின் தந்தை சில வாரங்களுக்கு கேன்சர் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு உயிர் போராட்டத்தில் இருந்தபோது, தன் மகனுடன் வீடியோ காலில் பேச விரும்பினார். இதுதொடர்பாக முருகன் தரப்பில் சிறைத்துறை தரப்பில் அனுமதி கேட்டார் கிடைக்கவில்லை. நீதிமன்றத்தில் முறையிட்டுயிருந்தார். அந்த வழக்கு நடக்கும்போதே அவரது தந்தை இறந்துவிட்டார். இப்போதும் அதுகுறித்த வழக்கு நடைபெற்றுவருகிறது.

 

 


இந்நிலையில், தான் ஜீவசமாதி அடைய அனுமதிக்க வேண்டுமென முருகன் தரப்பில் சிறைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை முன்வைத்து கடந்த ஜீன் 2ந்தேதி முதல் சிறையில் உண்ணாவிரதம் இருந்துவருகிறார். இந்த தகவலை 4 நாட்களுக்கு பின்பே சிறைத்துறை வெளியிட்டது. கடந்த 8 நாட்களாக சிறையில் முருகன் உண்ணாவிரதம் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுமென முருகனிடம், சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
 

Next Story

வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச சிறை விதிகளில் அனுமதி இல்லை!- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

Published on 28/05/2020 | Edited on 28/05/2020

 

nalini, murugan whatsapp video call chennai high court


நளினி மற்றும் முருகனை வாட்ஸ்- அப் மூலம் வெளிநாட்டு உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன்  சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றைத்  தாக்கல் செய்துள்ளார். அந்த  வழக்கில், இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம்  வாட்ஸ்- அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும். மேலும், லண்டனில் உள்ள முருகனின் தங்கையுடன் பேச அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார். ஏற்கனவே, காலமான தனது தந்தையின் உடலை வீடியோ கால் மூலம் முருகன் பார்ப்பதற்கு, தமிழக அரசு அனுமதிக்காததையும்   சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் பி.டி.ஆஷா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச சிறை விதிகளில் அனுமதி இல்லை. மேலும், தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் அயல்நாடுகளில் இருப்பதால், இது மத்திய வெளிவிவகாரத்துறை சம்பந்தபட்டது. எனவே, மனுவைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் விசாரணை திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.