Skip to main content

இளம்பெண்ணை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது...

Published on 03/10/2020 | Edited on 03/10/2020

 

Young man arrested for marrying a young woman

 

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஒரு ஊரை சேர்ந்த 17 வயது உள்ள இளம்பெண் ஒருவர் பிளஸ் 2 படித்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 23ம் தேதி சென்னையில் இருந்து தனது வீட்டிற்கு வந்துவிட்டு மீண்டும் மறுநாள் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். ஆனால், அதன் பிறகு அவர் வீட்டிற்கு, அந்தப்பெண் தொடர்பு கொள்ளவே இல்லை. 

 

இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் சென்னையில் அவர் வேலை செய்து வந்த ஜவுளிக்கடைக்கு ஃபோன் செய்து விசாரித்துள்ளனர். அங்கிருந்தவர்கள் கடந்த மாதம் 15ஆம் தேதி ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற உங்கள் பெண் இப்போதுவரை கடைக்கு வேலைக்கு வரவில்லை என்று கூறியுள்ளனர். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் பெற்றோர் தங்கள் பெண் எங்கே போனார் என்று தீவிரமாக விசாரித்தனர். 

 

அப்போது செஞ்சி அருகில் உள்ள கடலாடி குளம் கிராமத்தை சேர்ந்த இருதயராஜ் என்பவரது மகன் ஜோம் ரொசாரியோ(28) என்பவர் வீட்டில் அந்த பெண் இருப்பது தெரியவந்துள்ளது. உடனே அந்த பெண்ணின் பெற்றோர் அங்கு சென்று விசாரித்ததில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களது மகள் ரொசாரியோவை காதலித்து வந்ததாகவும் இருவரும் கடந்த மாதம் 29ஆம் தேதி ஜெசிந்தா மேரி என்பவரின் துணையோடு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காட்டுகோவில் என்ற ஊரில் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. 

 

இதையடுத்து பெண்ணின் தாயார் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மைனர் பெண்ணை அழைத்து சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து அவரை திருமணம் செய்தது சட்டப்படி குற்றம் என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் ரொசாரியோவை போக்ஸோ சட்டத்தின்படி கைது செய்துள்ளனர்.

 

நேற்று சென்னை உயர்நீதிமன்றம், இதுபோன்று இளம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்வது அதிகரித்து வருகிறது, இதுகுறித்து அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்