rs

69% ஒதுக்கீட்டுக்கு ஆபத்து: சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி உறுதி செய்க! என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அவ்வறிக்கையில் மேலும், ’’தமிழ்நாட்டில் கடந்த 1989-ஆம் ஆண்டிலிருந்து 30 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக 6 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்கப்போவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், 69% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

Advertisment

இந்தியாவில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் இட ஒதுக்கீட்டின் அளவு 50%-க்கும் கூடுதலாக இருக்கக்கூடாது என்று 1992-ஆம் ஆண்டு இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனாலும், தமிழகத்தில் நடைமுறையில் இருந்த 69% இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கான சட்டத்தை நிறைவேற்றிய அரசு, அந்த சட்டத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9&ஆவது அட்டவணையில் சேர்த்ததன் மூலம் இன்று வரை 69% இட ஒதுக்கீடு நீடிக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாக 69% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, மாணவர்களில் ஒரு பிரிவினர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக 19% கூடுதல் இடங்களை உருவாக்க ஆணை பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த ஆண்டும் அதேபோன்று கூடுதல் இடங்களை உருவாக்க ஆணையிடக் கோரி தொடரப்பட்ட நேற்று விசாரணைக்கு வந்த போது, அந்த கோரிக்கையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். அதேநேரத்தில்‘‘தமிழகத்தில் இட ஒதுக்கீட்டின் அளவை 50%-க்குள் கட்டுப்படுத்துவது குறித்து முடிவெடுக்கலாம்’’ என்று கூறினர்.

தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு வழங்கப்படுவது செல்லாது; இட ஒதுக்கீட்டின் அளவை 50% ஆக குறைக்க வேண்டும் என்று கோரி கடந்த 2012-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால் 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்படலாம். இதற்குக் காரணம் தமிழகத்தில் இட ஒதுக்கீடு பெறும் சமுதாயங்களின் மக்கள் தொகை 60%-க்கும் கூடுதலாக உள்ளது என்பதை நிரூபிக்க தமிழக ஆட்சியாளர்களிடம் செல்லத்தக்க வகையில் எந்த புள்ளி விவரமும், ஆதாரமும் இல்லை. அவ்வாறு எந்த ஆதாரமும் இல்லாத பட்சத்தில் 69% ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் ஆபத்து உள்ளது. அவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டால், தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் கொந்தளிப்பு ஏற்படும். அதற்கு அதிமுக, திமுக தான் பொறுப்பேற்க வேண்டும்.

Advertisment

69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஏற்கனவே ஒரு வழக்குத் தொடரப்பட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வந்தது. அந்த வழக்கில் 13.07.2010 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான அமர்வு, ‘‘தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு செல்லும். எனினும், அடுத்த ஓராண்டுக்குள் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டு பெறுவோரின் எண்ணிக்கையை உறுதி செய்து, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்க வேண்டும்’’ என்று ஆணையிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணைப்படி தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால், தீர்ப்பு வந்த போது ஆட்சியிலிருந்த திமுகவும், அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த அதிமுகவும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல் 69% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியதால் அது செல்லாது என்று அறிவிக்கக்கோரி வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி தான் இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 8 ஆண்டுகளுக்கு முன்பே ஆணையிட்டுள்ள நிலையில், அதற்கும் குறைவாக தமிழக அரசால் முன்வைக்கப்படும் எந்த ஆதாரத்தையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது. இடஓதுக்கீடு தொடர்பான மற்றொரு வழக்கில், தமிழக மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 68%, தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினரின் எண்ணிக்கை 19%, ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் எண்ணிக்கை 87% என்று தமிழக அரசின் சார்பில் முன்வைக்கப்பட்ட புள்ளிவிவரத்தை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதற்கு காரணம் அவை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் உத்தேசமாக தெரிவிக்கப்பட்டவை என்பது தான்.

இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டைத் தாண்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தப் போதிலும், நியாயமான காரணங்கள் இருந்தால் கூடுதல் இடஒதுக்கீட்டை அனுமதித்தே வந்திருக்கிறது. உதாரணமாக மேகாலயாவில் 85% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது. அதேபோல், கர்நாடகத்தில் கடந்த ஆண்டு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய சித்தராமய்யா அரசு,‘‘ கர்நாடகத்தில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் எண்ணிக்கை 70% ஆக அதிகரித்துள்ளதாகவும், அதன்படி இடஒதுக்கீட்டின் அளவும் 50 விழுக்காட்டிலிருந்து 70% ஆக அதிகரிக்கப்படும் என்றும் அறிவித்தது. தமிழகத்திலும் அவ்வாறு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் இட ஒதுக்கீட்டின் அளவை 87% ஆக அதிகரிக்க முடியும். அது தான் சட்டப்படி செல்லக்கூடிய நடவடிக்கையாகவும் அமையும்.

எனவே, 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் விஷயத்தில் தமிழக அரசு இனியும் அலட்சியமாக இருக்கக்கூடாது. உடனடியாக தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் தமிழகத்தில் இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும். அதை உச்ச நீதிமன்றத்திலும் தெரிவித்து அதற்கு நீதிமன்ற ஒப்புதலையும் பெற்று நடைமுறைப்படுத்த வேண்டும்.’’