Skip to main content

சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட அரசு தயங்குவது ஏன்? அன்புமணி கேள்வி

Published on 11/09/2017 | Edited on 11/09/2017
சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட அரசு தயங்குவது ஏன்? அன்புமணி கேள்வி

கிரானைட் கொள்ளை குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு ஆணையிட அரசு தயங்குவது ஏன்? என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழ்நாட்டை உலுக்கிய கிரானைட் கொள்ளை தொடர்பான வழக்கில் குற்றஞ்சாற்றப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தமிழக அரசு அளவுக்கு அதிகமாக தாமதம் செய்வது பல்வேறு ஐயங்களை  ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தின் பொருளாதாரத்தை சூறையாடிய கிரானைட் கொள்ளையர்களை தண்டிப்பதற்கு பதிலாக அவர்களை பாதுகாக்க ஆட்சியாளர்கள் துடிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழகத்தில் நடைபெற்ற கிரானைட் கொள்ளைகளை வெளிக்கொண்டு வந்ததில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு பெரும் பங்கு உண்டு. கிரானைட் கொள்ளை குறித்து மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம் கடந்த 2012&ஆம் ஆண்டு மே மாதம் அரசுக்கு அறிக்கை அனுப்பியதைத் தொடர்ந்து, கிரானைட் கொள்ளை குறித்து சகாயம் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என பா.ம.க. தான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் சகாயம் தலைமையில் விசாரணைக்குழு அமைக்காமல் தமிழக அரசு தாமதப்படுத்திய போதும் அதை எதிர்த்து பா.ம.க. போராடியது. நீண்ட தாமதத்துக்குப் பிறகு விசாரணையை தொடங்கிய சகாயம் குழு, சுமார் ஓராண்டு விசாரணைக்குப் பிறகு அதன் விசாரணை அறிக்கையை 23.11.2015 சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

மதுரை மாவட்டத்தில் மட்டும் தனியார் நிறுவனங்களின் கிரானைட் கொள்ளையால் ரூ.62,890.91 கோடி, அரசுக்கு சொந்தமான டாமின் நிறுவனத்தின் முறைகேடுகளால் ரூ.5507.53 கோடி, தனியார் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய அபராதம் ரூ.34,304.13 கோடி, டாமின் நிறுவனத்திடம் இருந்து வசூலிக்கப்பட வேண்டிய அபராதம் ரூ.9978.99 கோடி என மொத்தம் ரூ.1,12,681.56 கோடி  வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சகாயம் குழு மதிப்பிட்டிருக்கிறது. அதேநேரத்தில் இது உத்தேச மதிப்பீடு தான்; துல்லியமான மதிப்பீடு இன்னும் அதிகமாக இருக்கும் என்பதால் அதுகுறித்து சி.பி.ஐயின் பல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்தும்படி சகாயம் குழு பரிந்துரைத்தது.

சகாயம் குழு அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இரு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், அதன்மீது தமிழக அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. சகாயம் குழு அறிக்கை மீது எத்தகைய விசாரணையை அரசு நடத்தப்போகிறது? என்பது குறித்து விளக்கம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றம் பல முறை அறிவிக்கை அனுப்பியும் இதுவரை பதிலளிக்கவில்லை. இதன் நோக்கம் கிரானைட் கொள்ளையர்களை பாதுகாக்க வேண்டும் என்பதைத் தவிர வேறில்லை.

கிரானைட் கொள்ளையை மிகப்பெரிய அளவில் நடத்தியது  அதிமுக மற்றும் திமுக மேலிடங்களின் ஆதரவு பெற்ற நிறுவனங்கள் தான். கிரானைட் கொள்ளைக்காக மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தின் பூகோள அமைப்பே மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தொல்லியல் முக்கியத்துவம் கொண்ட சமணர் படுக்கை அமைந்த மலைகள் சிதைக்கப்பட்டுள்ளன; ஏராளமான நீர்நிலைகள் கிரானைட் கற்களை பதுக்கி வைக்கும் நீர்ச்சுரங்கங்களாக மாற்றப்பட்டுள்ளன; ஆறுகள் திசை மாற்றி விடப்பட்டுள்ளன. இயற்கைக்கு இவ்வளவு கேடுகளை செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஆட்சியாளர்களோ பெற வேண்டியதை பெற்று அவர்களுக்கு சேவகம் செய்து கொண்டுள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் மட்டும் நடந்த கிரானைட் கொள்ளையின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று சகாயம் குழு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மையில் கிரானைட் கொள்ளையின் மதிப்பு ரூ. 5 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தமிழகத்தின் ஆண்டு பட்ஜெட் மதிப்பை விட 3 மடங்குக்கும் அதிகமாகும். இதற்கு காரணமானவர்களை தண்டித்து, அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யாமல் இருப்பது  தமிழகத்துக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். அதைத்தான் தமிழக ஆட்சியாளர்கள் செய்கிறார்கள்.

மேலூர் வட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளைகள் தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள் மீது 180 வழக்குகள் தொடரப்பட்டு மேலூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன. கடுமையான குற்றச்சாற்றுகள் அடங்கிய 98 வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்படி உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும், அவ்வழக்குகளை விசாரிக்கை மேலூர் நடுவர் நீதிமன்ற நீதிபதி மகேந்திர பூபதி மறுத்து விட்டார். மேலும் இரு வழக்குகளில் கிரானைட் கொள்ளையில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்த நீதிபதி, அவர்கள் மீது பொய்வழக்கு தொடர்ந்ததாக மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டார். இவை அனைத்துமே ஆட்சியாளர்களின் துணையுடன் நடந்தவை ஆகும். இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். ஆனால், சில தொழில்நுட்பக் காரணங்களைக் காட்டி இந்த வழக்குகளில் மேல்முறையீடு செய்வதை தமிழக அரசு தாமதம் செய்து வருகிறது. இதுவும் கிரானைட் கொள்ளையரை பாதுகாக்கும் செயலே.

அதுமட்டுமின்றி, கிரானைட் கொள்ளை குறித்து விசாரிக்கும் சகாயம் குழுவை  முடக்கும் செயலிலும் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. அதனால், சகாயம் குழுவின் பதவிக்காலம் வரும் 14-ஆம் தேதியுடன்  முடித்து வைக்கப்படுகிறது. மேலூர் வட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை குறித்து சிபிஐ விசாரணை தொடங்காத நிலையில் சகாயம் குழுவை கலைப்பது முறையல்ல. மேலும், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த கிரானைட் கொள்ளை குறித்தும் விசாரிக்க வேண்டியிருப்பதால், சகாயம் குழுவின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும். கிரானைட் கொள்ளை குறித்து உடனடியாக சிபிஐ தலைமையில் பல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்