ADVERTISEMENT

“நீலகிரியைக் காப்போம்!”-உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்

10:54 AM Aug 10, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், ’’தென்மேற்குப் பருவமழையில் சிக்கித் தத்தளிக்கிறது நீலகிரி மாவட்டம். நான்கு நாட்களுக்கும் மேலாக வரலாறு காணாத பெருமழையை இந்த மலை எதிர்கொண்டுள்ளது. 10 ஆண்டுகளுக்குப்பிறகு இப்போதுதான் இந்தளவுக்கு மழை பெய்வதாகச் சொல்கிறார்கள். இந்த இடைவிடாத மழையால், எங்குப் பார்த்தாலும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது நீலகிரி.

ADVERTISEMENT

அவலாஞ்சியில் மட்டும் கடந்த நான்கு நாட்களில் 1617 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது. ஊட்டி கூடலூர் சாலை, பைக்காரா அருகே உள்ள சாலைகளில் பிளவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுள்ளது. விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வீடுகள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளன. இப்படி கூடலூர் பகுதியில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஏகப்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.

20க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மழையுடன் பலத்த காற்றும் வீசுவதால் கடுமையான குளிர் நிலவுகிறது. மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதால் பல கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. அங்குள்ள அணைகளில் தொடர்ந்து நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்படி இந்த பேரிடரால் சிலர் தங்களின் உயிர்களையும் இழந்துள்ளனர். பலர் தங்களின் உடைமைகளை இழந்து நிற்கின்றனர்.

ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு புவியியல் சூழலை அரணாக அமைத்துக்கொள்வதே இயற்கையின் அழகு. அப்படி மலை, வனம், பழங்குடிகள், விலங்குகள் என தனக்கென பிரத்தியேக இயற்கைச் சூழலைக் கொண்ட இந்த நீலகிரியை அதன் தன்மை மாறாமல் காக்க வேண்டியதும் அரசின் கடமை. ஆனால் இந்த அரசு நீலகிரியின் இயற்கையையும் காக்கவில்லை, அதன் காரணமாக ஏற்பட்ட இயற்கைச் சீற்றத்திலிருந்தும் மக்களைக் காக்கவில்லை.

‘குடிநீர் பற்றாக்குறைக்கு பருவமழை பொய்த்ததுதான் காரணம்’ என்று சாக்குப்போக்கு சொல்லித் தப்பிக்கும் அதிமுக அரசு, இந்த இயற்கைச் சீற்றத்திலிருந்து மக்களைக் காப்பதிலும் பொய்த்துப்போயிருக்கிறது என்பதே உண்மை. அதற்குப் பெருமழையில் நீலகிரி மக்கள் படும் அல்லலே சாட்சி.

இதுபோன்ற இயற்கை பேரிடர் காலத்தில்கூட உடனடியாக ஓடிப்போய் அவர்களைக் காத்து அரவணைக்க முடியாத அளவுக்கு அரசு எந்திரம் முடங்கிப்போயுள்ளது. அவர்களுக்கு மக்கள் பிரச்சினைகளைவிட கேபிள் டிவி கமிஷன், செட்டாப் பாக்ஸ் கலெக்ஷன் எனக் கல்லா கட்டுவதுதான் முதன்மைப் பணியாக உள்ளது.

அரசு எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும், நாம் நம் தலைவர் உத்தரவிற்கு இணங்க மக்களைக் காக்கும் களப்பணிகளில் இறங்கவேண்டும். நம் இளைஞரணியைச் சேர்ந்த ஒவ்வொரு தோழர்களும் மாவட்ட கழக நிர்வாகிகளுடன் இணைந்து மக்களுக்கு உதவ வேண்டும். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கிய மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பது, அவர்களுக்குத் தேவையான உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்குவது, சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்துவது என ஒவ்வொருவரும் தங்களை மக்கள் பணியில் ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும்.

மலைப்பகுதி என்பதால் நீங்களும் கவனமாகப் பாதுகாப்புடன் இருந்து இந்த மக்கள் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்களுடன் நான் தொடர்பிலேயே இருப்பேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். மக்களுக்காக உழைப்போம்; மக்களோடு நிற்போம்; நீலகிரியை காப்போம்! ’’என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT